Translate

Wednesday, 13 June 2012

முஸ்லிம்களைஅச்சுறுத்தும் விதத்தில் காலி பெந்தர,எல்பிட்டிய பகுதிகளில் சுவரொட்டிகள் _


  காலி மாவட்டத்தில் பெந்தர,எல்பிட்டிய பகுதிகளில் முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் பொருட்கள் வாங்குவதை நிறுத்துமாறும் முஸ்லிம்கள் கடைகளை மூடிவிட்டுச் செல்லுமாறும் சுவரொட்டிகள் ஓட்டப்படுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கையெடுக்க வேண்டுமென மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான கோரியுள்ளார். இல்லாவிட்டால் இது ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அபாயமுள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.


இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: கடந்த சில தினங்களாக பெந்தர,எல்பிட்டிய பகுதிகளில் தேசப்பற்றாளர்கள் என்ற பெயரில் முஸ்லிம்களை கடைகளை மூடிவிட்டுச் செல்லுமாறும் முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் பொருட்கள் வாங்குவதை நிறுத்த வேண்டுமெனவும் கூறி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன அங்கு முஸ்லிம்களின் 15கடைகள் உள்ள நிலையில் இந்தத் துண்டுப்பிரசுரத்தினால் முஸ்லிம் வர்த்தகர்கள் அச்சமடைந்துள்ளனர்.

தம்புள்ள பள்ளிவாசலை மூடுவதற்கு எடுக்கப்பட்ட செயற்பாடுகள் விரிவடைந்து குருநாகல்,அநுராபுரம்,தெஹிவளையெனப் பரந்து தற்போது காலி வரை வந்துள்ளது.

தம்புள்ளை பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்படாத நிலையில் சுதந்திரமாக நடமாடும் நிலையில் பள்ளிவாசல்கள் குறித்த விபரம் சி.ஐ.டி.யினரால் திரட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இவ்வாறான நிலையிலே காலியில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன .

இது ஏனைய இடங்களுக்கு பரவும் என்பதால் இதனைத் தடுப்பதற்க்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.இதற்கான அழுத்தத்தை அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் கொடுக்க வேண்டும் . தற்போதைய சூழ் நிலையில் பார்க்கும் போது 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலைக்கு முந்திய காலப்பகுதியைப் போன்றுள்ளது. எனவே தற்போது முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாட்டை நிறுத்துவதற்கு குறைந்த பட்சம் அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள் கண்டனத்தையாவது தெரிவிக்க முன்வர வேண்டுமெனவும் கோரியுள்ளார். __

No comments:

Post a Comment