Translate

Wednesday, 13 June 2012

அன்பான தமிழீழ உறவுகளே; சிங்களத்தின் உளவியற் போரை உடைத்தெறிவோம்..!


தமிழீழ இன அழிப்பின் ஒரு அங்கமாய், எமது விடுதலைக்காகப் போராடிய போராளிகளை, சிங்கள இராணுவத்தினர் கைகளைக்கட்டி வைத்துச் சுட்டுக்கொலைசெய்யும் காட்சிப்பதிவுகள் இன்னமும் வெளியாகியபடியே உள்ளன. எமது இனத்தின் மீது சிங்களம் ஏவிவிட்ட கோரத்தின் பதிவுகளாக எம்மனதில் இக்காட்சிகள் நிழலாடுகின்றன . இவை நிச்சயமாக எமது மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டியவைதான். ஆனாலும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள்.விட்டு விட்டு, மீண்டும் மீண்டும் இவ்வாறான காட்சிகள், பகுதி பகுதிகளாக வெளியிடப்படுவது இன்னுமொரு சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.


முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் பின்னரும்கூட, வலிகளோடு வாழ்ந்துவரும் எமதினம், இன்னமும் போராடி விடுதலை பெறவேண்டும் என்ற வேட்கையோடு உலகமெங்கும் குரல் எழுப்புகிறது. இதற்குச் சாட்சியாக, அண்மையில் பிரித்தானியாவிற்கு வருகை தந்திருந்த இனப்படுகொலையாளி இராஜபக்சேவை எமது உறவுகள் ஒன்றுதிரண்டு விரட்டியடித்தது வரலாற்றில் பதியப்படவேண்டிய மகத்தான செயல். இதுபோன்ற போராட்டங்கள் இனியும் தொடரவேண்டும். உலகத்தமிழர்கள் உள்ளவரை இது தொடரும் எனபது சிங்கள ஆட்சியாளர்களுக்கும் நன்றாகத் தெரியும். ஆகையினால்தான் தமிழினத்தின் மனோதிடத்தைச் சிதைப்பதற்கு அவர்கள் பலவழிகளில் முயற்சிக்கிறார்கள்.

விடயம் இதுதான்; எமது மூத்த தளபதிகளும், வீரர்களும் மிகவும் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டதை காட்சிப்பதிவுகளினூடு நாம் அறிந்துகொண்டோம். எமது மக்கள் மீதான அழிவுகளை, சனல் – 4 தொலைக்காட்சியும் பாகங்களாக வெளியிட்டது அதுதான்; எமது போராளிகள் கைதுசெய்யப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் காட்சிகளும், அவர்கள் கொலைசெய்யப்பட்டுக் கிடக்கும் காட்சிகளும் ஆகும்.இவற்றை தமிழ் இணையங்களும் வெளியிடுவது நல்ல விடயமே. ஆனால், சிங்களம் எதிர்பார்க்கும் ஒரு அவசியமான செயலை நாம் எமது கைகளால் செய்கிறோம் என்ற கோணத்தில் என்றாவது நாம் சிந்தித்துப் பார்த்ததுண்டா..?

ஆனால் , சிங்களதேசம் இவற்றை விட இன்னொரு நயவஞ்சகச் செயலையும் செய்துவருகிறது.ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிகளின் இடைவெளியில், ஒவ்வொரு பாகங்களாக இந்தக் காட்சிப்பதிவுகளை வெளியிடுவதன் மூலம், உலகம்பூராகவும் பரந்துவாழும் எமதுறவுகளின் மனோதிடத்தைச் சிதைத்து, ´´இனி எமது மண்ணில் எதுவும் இல்லை ´´ என்ற எண்ணத்தை எமது மனங்களில் உருவாக்குவதற்கு சிங்களம் முயற்சிக்கிறது. எமது உறவுகளின் போராட்ட குணத்தை மழுங்கடிக்க, சிங்களம் இச்செயலைத் தொடர்ச்சியாகச் செய்யத்தான் போகிறது. உண்மையில் இக்காட்சிப்பதிவுகள் சிங்கள இனத்தின் இராணுவ முகவர்களால் தான் வெளியிடப்படுகிறது என்ற அதிர்ச்சியூட்டும் உண்மையும் இவற்றில் அடங்கியிருக்கிறது. இதில் இரண்டு விதமாகச் சிங்களம் தனது சம்பாத்தியத்தை நடத்துகிறது. இக்காட்சிப்பதிவுகளை விற்பதன் மூலம் பெருமளவு பணத்தை இராணுவ செய்திப்பிரிவின் முகவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். அடுத்ததாக; இக்காட்சிகளினால், தமிழ்மக்களின் மனோதிடம் சிதைக்கப்படுவதன் மூலமாக, ஒரு உளவியல் போரின் வெற்றியை ஸ்ரீலங்காவின் சிங்களப் புலனாய்வுத்துறை சம்பாதித்துக்கொள்கிறது. ஆகவே…., இதற்குத் தமிழர்களாகிய நாம் என்ன செய்யப்போகிறோம்…?

அதிர்ச்சியூட்டும் இக்காட்சிப்பதிவுகளை வெளியிடுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள் என்று நாம் எந்த இணையத்திடமும் கோரமுடியாது. ஏனெனில், எவரும் இதைச் செவிமடுக்கப்போவதில்லை. ஆகவே இக்காட்சிப்பதிவுகளை எமது இணையத்தளங்களில் வெளியிடுவதற்கு முன்பதாக; ஒரு சில அவசியப்பணிகளை நாம் ஆற்றமுடியும். முக்கியமாக; இவ்வகையிலான காட்சிப்பதிவுகளை எங்கள் இணையங்கள் சார்பாக, ஏதாவதொரு வேற்றுமொழி ஊடகத்திற்கு விளக்கங்களோடு அனுப்பிவைக்கமுடியும். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் ஊடகங்கள் இவற்றை உடனடியாக வெளியிடாவிட்டாலும் கூட; எங்காவது நிச்சயமாகச் சேமித்து வைக்கக்கூடும். காட்சிப்பதிவுகளில் உள்ள சிங்கள இராணுவத்தின் அடையாளங்களைத் தெளிவுபடுத்தி (இலச்சினைகள். படைப்பிரிவுகளின் இலக்கங்கள், இராணுவ அதிகாரிகளின் முகங்கள்) இவர்கள் சிங்கள இராணுவத்தினர்தான் என்பதைத் திட்டவட்டமாகக் குறியிட்டு நாம் வாழும் நாட்டினுடைய ஊடகங்களிற்கு அனுப்பிவைப்போம். அதன்பின்னர் எமது இணையங்களில் சாதாரண செய்தியாக (எமது உறவுகளின் மனங்கள் புண்படாத வகையில்) இவற்றை நாம் வெளியிடலாம்.அத்தோடு, குறிப்பாக எமது பெண்போராளிகளின் புகைப்படங்களைத் தணிக்கை செய்து வெளியிடுவதும் மிகவும் அவசியமாகிறது. சிங்களவனின் கோரத்திற்குப் பலியாகிய எமது சகோதரிகளின் நிர்வாணப் புகைப்படங்களை, அப்படியே வெளியிடுவது மிகவும் வேதனைக்குரிய செயலாக அமைகிறது. தணிக்கை செய்யப்பட்ட புகைப்படங்களை நாம் வெளியிடுவதன்மூலம், அவர்களின் உறவுகள் படும் வேதனைகளை சிறிதாவது தவிர்த்துக்கொள்ளமுடியும். இவ்வாறான செயற்பாடுகள் மூலமே சிங்களத்தின் உளவியல் போரை நாம் எதிர்கொள்ள முடியும்.

அண்மையில் ; பேரூந்தில் ஏற்றி விலங்கிடப்பட்ட நிலையில் உள்ளவாறு வெளியிடப்பட்ட போராளிகளின் புகைப்படங்களில், ஒரு ஒற்றுமையைக் காணமுடிகிறது. அனைவரும் சிறுவர்களாக இருப்பது தான் அதுவாகும். அவர்கள் உண்மையில் போராளிகளா அல்லது விடுதலைப்புலிகளின் சீருடைக்குள் திணிக்கப்பட்டு புகைப்படம் எடுக்கபட்ட அப்பாவிச் சிறுவர்களா என்பது யாருக்கு வெளிச்சம்..? இவ்வகையிலான புகைப்படங்களை வெளியிடுவதனூடாக ´´சிறுவர்களை வலுக்கட்டாயமாகப் புலிகள் போரில் இணைத்திருக்கிறார்கள்´´ என்ற ஒரு தவறான செய்தியைச் சிங்களம் வெளியுலகிற்குக் காட்ட முனைகிறது. எமது இணையங்களில் நாமும் அவற்றை வெளியிடுவதன்மூலம் சிங்களம் கூறுவதை ஆமோதிக்கும் ஒரு செயலை அல்லவா புரிகிறோம்..? இப்போராளிகளைப் புகைப்படமெடுத்து வெளியிடும் சிங்களம்; எமது முன்னணித் தளபதிகள், மற்றும் பொறுப்பாளர்களான நடேசன், புலித்தேவன், லோரன்ஸ், உட்பட்ட முப்பதுக்கும் மேற்பட்ட சரணடைந்த போராளிகளின் புகைப்படங்களை வெளியிடவில்லை…? ஏன்எனில் அவை சிங்களம் மீதான சர்வதேச விசாரணைக்கு இன்னமும் ஊன்றுகோலாக அமையும் என்பதே…! சிறுவர்களின் புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம், புலிகளும் போர்க்குற்றங்களைப் புரிந்திருக்கிறார்கள் என்ற ஒரு சேதியைச் சிங்களம் சொல்ல முனைகிறது.., எனவே செய்திகளை வெளியிடும் நாம், எமது இனத்தின் காவலாளிகளாக, சிங்களத்தின் உளவியற்போரை உடைத்தெறிபவர்களாகச் செயலாற்ற வேண்டும். அதுவே எமது இனத்தின் விடுதலைப்போரை, ஒரு உறுதியான மனோபலத்தோடு மிகவேகமாக முன்னெடுக்க உதவும்.
-வல்லிபுரம் வசந்தன்-

No comments:

Post a Comment