பிரித்தானிய மகாராணியின் வைரவிழா நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்திருக்கக் கூடாது என்று றோயல் கொமன்வெல்த் சமூகத்தின் தலைவர் பீற்றர் கெல்னர் தெரிவித்துள்ளார்.சனல் 4 தொலைக்காட்சியில் இடம்பெற்ற விவாதம் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்த இந்தத் தவறை மகாராணியோ பக்கிங்ஹாம் அரண்மனையோ செய்யவில்லை. கொமன்வெல்த் தான் அதைச் செய்தது. இலங்கைக்கு எதிராக கடைசியாக பேர்த்தில் நடந்த கொமன்வெல்த் மாநாட்டிலேயே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
இலங்கையின் மனிதஉரிமைகள் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாது போனால், கொழும்பில் நடைபெறவுள்ள அடுத்த கொமன்வெல்த் மாநாடு ஒரு பேரிடராகவே அமையும். இலங்கை மீது அமைப்பு ரீதியாக கொமன்வெல்த் அழுத்தம் கொடுக்கலாம்.
இலங்கை இந்த மாநாட்டை இழப்பதற்கு விரும்பும் என்று நான் கருதவில்லை. கொமன்வெல்த்தின் பெருமைக்குரிய காலமான 1970கள், 80களில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான போராட்டத்தை முன்கொண்டு சென்றது.
தென்னாபிரிக்காவின் மனிதஉரிமைகள் விவகாரம் குறித்து கடுமையான நிலைப்பாட்டை எடுத்துச் செயற்பட்டது. இலங்கையின் மனிதஉரிமைகளுக்காக மீண்டும் ஒருமுறை கொமன்வெல்த் அவ்வாறு செயற்பட முடியும் என்று நான் கருதுகிறேன்.
மனிதஉரிமை விவகாரங்களில் கொமன்வெல்த் பலத்தை தனது பலத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்கு இதுவே சரியான தருணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment