Translate

Monday, 18 June 2012

இலங்கையில் இடம்பெறும் கொலைகளுக்கு கோத்தபாயவே பொறுப்பு!


இலங்கையில் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் குற்றச்செயல்களின் மோசமான அதிகரிப்புக்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே பொறுப்பு என்று ஐ.தே.க குற்றம்சாட்டியுள்ளது.

அம்பாந்தோட்டையில் ஜே.வி.பி உறுப்பினர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினரும், ஐதேகவின் தொடர்பாடல் பிரிவுக்குப் பொறுப்பானவருமான மங்கள சமரவீர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நீதிக்குப் புறம்பான படுகொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமற்போதல்கள், எதிர்ப்புத் தெரிவிப்போர் கொல்லப்படுவது, பெண்கள் மற்றும் சிறார்கள் மீதான பாலியல் குற்றச்செயல்கள் என்பன இலங்கையில் மோசமாக அதிகரித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டில் அதிகரித்துள்ள நீதிக்குப்புறம்பான கொலைகள், பாலியல் குற்றச்செயல்கள் மற்றும் குற்றங்களுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும்.
அவரது கட்டுப்பாட்டின் கீழேயே காவல்துறை திணைக்களம் உள்ளிட்ட, பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு சார்ந்த துறைகள் அனைத்தும் உள்ளன. முக்கியத்துவம் மிக்க அமைச்சு ஒன்றை திறமையற்ற, நிர்வாகசேவையில் இல்லாத அதிகாரி ஒருவர் நிர்வகிக்க அனுமதிக்க முடியாது.
இதனைத் தொடர்ந்து அனுமதித்தால், நாட்டில் குழப்பங்களும், அராஜகங்களுமே மேலோங்கும். அம்பாந்தோட்டை கொலைகள் குறித்து சுதந்திரமான முறையில் விசாரிக்கப்பட வேண்டும். கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்புச் செயலராக இருக்கும் வரை அது சாத்தியமாகப் போவதில்லை.
எனவே உடனடியாக கோத்தபாய ராஜபக்சவைப் பாதுகாப்புச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, பொருத்தமான நிர்வாக அதிகாரி ஒருவரை அந்தப் பதவிக்கு நியமித்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment