Translate

Wednesday 13 June 2012

நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை! பின்னணியில் இலங்கைக் கொலையாளி! திடுக்கிடும் தகவல்!


ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க புதிய டீம் பொறுப்பேற்ற பிறகு, விசார​ணை​யில் வேகமும், விசாரிக்கும் முறையில் கடுமையும் கூடி இருக்கிறது.
நண்பர்கள், உறவினர்கள் என்ற பேனரில் இடம்பெற்ற ஏராளமானவர்களிடம் விசாரித்து முடித்து விட்டனர். 'எலிமினேஷன் பிராசஸ்' என்ற வகையில், ஒருசிலரைத் தவிர மற்றவர்களைக் கழற்றி விட்டனர். மிச்சம் இருக்கும் அந்த சிலரிடம் இப்போது தீவிர விசாரணை நடக்கிறது!
இந்த விசாரணையின் அடிப்படையில் பொலிஸுக்கு புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது...
மார்ச் 28-ம் தேதி இரவு படுடென்ஷனாகக் காணப்பட்ட ராமஜெயம், தன்னை ரிலாக்ஸ் செய்து​கொள்ள விரும்பி இருக்கிறார். அப்போது, அவருக்கு ஏற்கெனவே பழக்கமான சிலருக்கு போன் செய்து பேசி இருக்கிறார்.

அவர்கள் ஆளுக்கொரு காரணத்தைக் கூறி ராமஜெயத்தைத் தவிர்த்து விட்டார்களாம். அந்த ஒரு சூழ்நிலையில்தான், நன்கு அறிமுகமான ஒரு நபர் தூண்டில் போட்டு இருக்கிறார். அதை நம்பி வீட்டைவிட்டு வெளியே போய், மிக எளிதாக எதிரியின் கூண்டில் போய் சிக்கி விட்டாராம். அந்த நேரத்தில் யார் அழைத்தது? என்பதைக் கண்டுபிடிப்பதில் க்ளைமாக்ஸை எட்டி விட்டார்கள்.
வினோத் மற்றும் அவரது கார் டிரைவரான கண்ணன்... இரு​வரிடமும் திரும்பத் திரும்ப தனிப்படை பொலிஸ் விசாரணை நடத்துகிறது. இதற்கு முன், வினோத்திடம் விசாரிக்கும்போது உட்கார வைத்து காபி, டீ, ஜூஸ் கொடுத்து உபசரித்து விசாரிப்பது வழக்கமாம். அவரும் தைரியமாகப் பதில் அளிப்பாராம்.
இப்போது விசாரணை டீமில் உள்ளவர்களைப் பற்றி தெரிந்துகொண்ட வினோத், பவ்வியமாக அடக்க ஒடுக்கத்துடன் நின்றபடி விசாரணையை எதிர்கொண்டு பதில் அளிக்கிறாராம். 'ஒருமுறை விசாரணை அதிகாரிகள் உட்காரச் சொல்லியும் அவர் உட்கார மறுத்து சுமார் ஐந்து மணி நேரம் நின்றுகொண்டே பதில் அளித்து விட்டுச் சென்றார்’ என்கிறார்கள் தனிப்படையில் உள்ளவர்கள்.
வினோத்தையும் கண்ணனையும் கிட்டத்தட்ட பொலிஸ் தங்கள் கஸ்ரடிக்கு எடுத்து விட்டதாக திருச்சி தி.மு.க-வினர் மத்தியில் செய்தி பரவிக் கிடக்கிறது. இதை பொலிஸார் உறுதிப்படுத்தவும் இல்லை. மறுக்கவும் இல்லை. வினோத்துக்கு எதிரிகள் சிலர் திருச்சியில் இருக்கிறார்கள்.
அவர்கள்தான் இது போன்ற வதந்திகளைப் பரப்பிவிடுவதாக வினோத் தரப்பினர் உறுதியாக நம்புகிறார்கள். இதைப் பின்னணி காரணங்களுடன் பொலிஸாரிடமும் தெரிவித்து வருகிறார்களாம்.
பொலிஸாரின் விசாரணை வளை​யத்​தில் இருக்கும் சிலரைக் காப்பாற்றும் நோக்கில்தான் இந்த வதந்திகள் பரப்பி ​விடப்படுவதாக விசாரணை அதிகாரிகளுக்கும் தகவல் கிடைத்துள்ளதாம். அதனால், வதந்தி பரப்பும் நபர்களை உளவுப் பிரிவு பொலிஸார் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள்.
ஜூன் 11-ம் தேதி திருச்சியில் உலா வரும் இன்னொரு வதந்தி இதுதான்...
''ராமஜெயத்தின் நம்பிக்கைக்குரிய அந்த நபர் பண டீலிங்கைக் கவனித்து வந்தார். சுமார் 300 கோடி ரூபாயை அவர் ஸ்வாஹா செய்துவிட்டதாக வரவு செலவு கணக்கை சரிபார்க்கும்போது ராமஜெயத்துக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதுபற்றி விசாரணை நடந்தபோது கடுமையான வார்த்தைகளால் ராமஜெயம் பேசி, அந்த நபரை சிலர் முன்னிலையில் அடித்துவிட்டாராம். அதுமுதல் ராமஜெயம் மீது கடும் கோபத்தில் இருந்திருக்கிறார் அந்த நபர். அவரைப் பழிவாங்க சமயம் பார்த்துக் காத்திருந்தவர், இலங்கையைச் சேர்ந்த ஒரு முக்கியப் புள்ளியிடம் ஆலோசனை கேட்டு இருக்கிறார்.
அவரின் வழிகாட்டுதலுடன் வெளிமாநில ஆட்களை வைத்துச் சதித் திட்டம் தீட்டியதாக ஒரு தகவல். இதை கிராஸ்செக் செய்ய ஒரு பொலிஸ் டீம் இலங்கைக்குச் சென்று இருப்பதாகவும் காவல்துறை வட்டாரத்தில் பேச்சு உலவுகிறது.
யார் அந்த கூலிப்படை என்பது பற்றிய பெயர் விவரங்கள் பொலிஸ் வசம் உள்ளதாகவும் தகவல். விரைவில் கைது படலம் ஆரம்பமாகும்'' என்றே பேசிக்கொள்கிறார்கள். இதை எல்லாம் தெரிந்து​தான், நேரு தனது தலைக்கு மொட்டை போட்டுக்கொண்டார் என்கிறது தி.மு.க. வட்டாரம்.
ராமஜெயத்தின் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் போன்று அவரைப்பற்றிய பல தகவல்களை அறிந்த அமுதன் என்ற நண்பர் மற்றும் பிரச்சினைக்குரிய நிலங்களை துணிந்து வாங்கச் சொல்லி ஊக்கம் கொடுத்த ஒரு வழக்கறிஞர் ஆகியோரையும் ஒரு தனிப்படை விசாரிக்கிறது.
இதற்கு முன், தனிப்படை பொலிஸின் விசாரணை விபரங்கள் இரண்டு கட்டங்களாக சரிபார்க்கப்பட்டு, பிறகுதான் பொலிஸ் கமி​ஷனரை சென்றடையும். இப்போது களம் இறங்கியுள்ள புதிய தனிப்படைத் தலைவர்கள், தங்களின் விசாரணை விவரங்களை கமிஷனரின் கவனத்துக்கு உடனுக்குடன் கொண்டு செல்கின்றனர்.
இதனால், 'விசா​ரணை விபரங்கள் லீக் ஆகாமல் தடுக்கப்படுவதோடு, விசாரணையில் அடுத்த கட்டத்தை எப்படி மேற்கொள்வது என்ற ஆலோசனையையும் காலதாமதம் இன்றி கமிஷனரிடம் இருந்து நேரடியாக பெற முடிகிறது’ என்கின்றனர் தனிப்படையினர்.
கொலைக்கான மர்ம முடிச்சை எப்போது அவிழ்ப்பார்கள் என்று பார்க்கலாம்!

No comments:

Post a Comment