வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்டகாலமாக மீள் குடியேற்ற நடவடிக்கைகள் இழுபறியில் இருந்து வருகின்ற திருமுறிகண்டி கிராமத்தில் உள்ள தமக்குச் சொந்தமாக காணிகளில் தாங்கள் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்க வேண்டும், இராணுவத்தின் பொறுப்பில் உள்ள அந்தக் காணிகள் தங்களிடம் கையளிக்கப்பட வேண்டும் எனக்கோரி, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றார்கள்.
இந்தப் பகுதியில் மக்கள் குடியிருப்புக்களை அதியுயர் பாதுகாப்பு வலயம் என பிரகடப்படுத்தி இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தி வந்துள்ளது. எனினும் இந்தப் பகுதிகளில் கண்ணிவெடிகள் இன்னும் அகற்றப்படாத காரணத்தினாலேயே இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை என அரசாங்கம் கூறி வருகின்றது.
எனினும் இதனை நிராகரித்துள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், திருமுறிகண்டி கிராமம் உட்பட சுமார் 4,000 ஏக்கர் நிலப்பரப்பில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் இங்கு சிங்களக் குடியேற்றம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை கடந்த 3 வருடங்களாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் இந்தக் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மனிக்பாம் இடைத்தங்கல் முகாமிலும், ஏனையோர் உறவினர் நண்பர்களது வீடுகளிலும் கஸ்டத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
திருமுறிகண்டி பகுதியில் உள்ள சுடலையும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருப்பதாகவும், அங்கு இறந்தவர்களை எரிப்பதற்குக் கூட, இந்தப் பிரதேசத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
திருமுறிகண்டி காணிகளை மீளப் பெறுவதற்காகப் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் பலனேதும் கிட்டாத நிலையிலேயே அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலர் நியாயம் கேட்டு நீதிமன்றத்தை நாடியிருப்பதாகவும், ஆயினும், அந்த வழக்கைத் தொடரவேண்டாம் எனக்கூறி அவர்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் சிறிதரன் கூறுகின்றார்.
No comments:
Post a Comment