Translate

Monday, 18 June 2012

தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று அழைப்பு விடுத்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு TNAஉட்பட பலஅமைப்புகள் ஆதரவு


இணைப்பு2 யாழ்ப்பாணத்தில் நடைபெற இருந்த நில அபகரிப்புக்குஎதிரான ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை
வடகிழக்கில் இடம்பெற்றுவரும், நில அபகரிப்பு மற்றும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை எதிர்த்து இன்று யாழ்.நகரில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டப் பேரணிக்கு யாழ்.நீதிமன்றிடமிருந்து காவற்துறையினர் தடையுத்தரவு பெற்றுள்ள நிலையில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 1.00 மணியளவில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவிருந்தது. இதனையடுத்து அதிகாலை முதலே நகரில் பெருமளவு காவற்துறையினரும், பெருமளவு இராணுவப் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் நண்பகல் 12.00 மணியளவில் குறித்த ஆர்பாட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாதென காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
குறித்த ஆர்ப்பாட்டத்தில் குழப்பத்தையும், அசம்பாவிதத்தையும் ஏற்படுத்த சில தரப்புகள் முனைந்து வருவதாக தெரிவித்த யாழ்.காவற்துறையினர் அதனாலேயே ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நீதிமன்றத் தடையுத்தரவு பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 
இதனையடுத்து ஆர்பாட்டம் கைவிடப்பட்டு வெளியிடங்களிலிருந்து வந்த மக்கள் மீளவும் அவர்களது இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
 
இதனைத் தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் விசேட பத்திரிகையாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டது, இதில் ஜனநாயக மக்கள் முன்னணி, மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை ஆசிரியர் சங்கம், போன்ற கட்சியினர் கலந்து கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கும், படைப்புலனாய்வாளர்களுக்கும் எதிராக முழங்கினர்.
 
தொடர்ந்து நீதிமன்றம் விதித்துள்ள தடையுத்தரவுக்கு எதிராக நாமும் நீதிமன்றம் சென்று எமது நிலைப்பாடுகளைக் குறிப்பிட்டு போராட்டத்தை நடத்துவதென அனைத்துத் தரப்பினரும் தீர்மானித்ததுடன், ஆக்கிரமிப்பு, குடியேற்றங்கள் உள்ளிட்ட தமிழினத்தை அழிவுக்குள்ளாக்கும் இலங்கை அரசின் செயற்பாடுகள் நிறுத்தப்படும் வரையில் தொடர்ந்தும் போராடுவோம் எனவும், இதுவே நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கும் கடைசிச் சந்தர்ப்பமாக இருக்கும் எனவும் தெரிவித்ததுடன், அடுத்த கட்டம் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி மக்களுக்காக போராடி சிறைகளுக்குச் செல்வோம் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
 
தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று அழைப்பு விடுத்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு TNAஉட்பட பலஅமைப்புகள் ஆதரவு
 
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் இன்று திங்கட்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஆhப்பாட்டத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு முழு ஆதரவை தெரிவித்துள்ளது. 
 
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இத்தகைய செயற்பாடுகளுக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கி நிற்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் செயலாளர் நாயகமுமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். 
 
 
யாழ்ப்பாணத்தினில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்த வேளை தமது ஆதரவை தெரிவித்த அவர் கூட்டமைப்பும் அடுத்த தினமான செவ்வாய்கிழமை மக்கள் போராட்டத்தினில் குதிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
 
தெல்லிப்பழை அம்மன் ஆலயத்தில் முன்னதாக வழிபாட்டு நிகழ்வொன்றை நடத்திய பின்னர் தெல்லிப்பழை பிரதேச செயலரிடம் ஜனாதிபதிக்கான தமது காணிகளை விடுவிக்க கோரும் மகஜர் ஒன்றையும் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
இதனிடையே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனது ஆதரவை வழங்கியுள்ளது. அதே போன்று வலிவடக்கு இடம்பெயர்ந்தோர் நலன்புரி அமைப்புக்களும் தமது ஆதரவை தெரிவித்துள்ளன.
 
வன்னியிலிருந்து தமது ஆதரவாளர்கள் சகிதம் பங்கெடுக்க மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினருமான சிறீதரனும் திட்டமிட்டுள்ளார். இன்று பகல் ஒரு மணியளவினில் யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பதாக இக்கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வடக்கில் படையினரின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், தமிழர் தாயகப்பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழும் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர அனு மதிக்கக் கோரியும் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
 
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போராட்டம் யாழ்.மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று நண்பகல் நடைபெறவுள்ளது. கட்சிபேதமின்றி தமிழ் மக்களுக்கு எதிரான நில அபகரிப்பு நடவடிக்கையை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தவும், இடம்பெயர்ந்து அல்லல்படும் மக்களின் மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்துமாறு அழுத்தத்தைக் கொடுப்பதற்கும் அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் பல்கலைக்கழக சமூகமும் பொதுமக்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.
 
அண்மைக்காலமாக வடபகுதியில் உள்ள தனியார் காணிகளை அபகரிக்கப் படையினர் முயற்சி எடுத்துவரும் நிலையில் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான சாத்வீகப் போராட்டங்களில் தமிழர் தரப்பு ஈடுபட தீர்மானித்துள்ளது. அதன் ஒரு வெளிப்பாடாகவே இன்றைய போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
இலங்கையில் வடக்கு, கிழக்குப் பகுதிகள் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களாகும்.கடந்த 60 ஆண்டுகளில் தமிழ் முஸ்லிம் மக்களின் அடர்ந்த பலமான குடிப்பரம்பலைச் சீர்குலைத்துப் பலவீனப்படுத்தி விடுவதற்கும் எம் தொடர்ச்சியான நிலப்பரம்பலைத் துண்டாடி விடுவதற்கும் அதன்மூலம் தமிழ் பேசும் மக்களுக்கு உரித்தான இறைமைத்துவம், சுயநிர்ணய உரிமைத்துவம் மற்றும் வாழும் உரிமை, இன அடையாளம் என்பவற்றை அழித்துவிடுவதற்கு நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் தென்னிலங்கை அரசுகள் திட்டமிட்டுச் செயற்பட்டு வந்துள்ளன.
 
குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளிலும் இராணுவ முகாம்கள், இராணுவக் குடியிருப்புக்கள் என்பவற்றை நிறுவுவதற்கும், பௌத்த நிலைகள், விகாரைகளை நிலைநாட்டுவதற்கும் அரசு, இராணுவம் மற்றும் பௌத்த குருமார் ஒன்றிணைந்து தமிழ் மக்களுக்கு உரித்துடைய காணிகளையும் வாழ்விடங்களையும் ஆக்கிரமித்து கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன.
 
இத்தகைய நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த  மக்கள் அணிதிரண்டு குரல் எழுப்ப வேண்டும். ஜனநாயக வழிகளில் அஹிம்சை முறையில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.இதன்பொருட்டுப் பொருத்தமான பல நடவடிக்கைகளை  எடுத்த பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போராட்டங்களை முன்னெடுப்பதற்கான அறிவித்தலையும் காலத்தையும் கூடிய விரைவில் அறிவிக்கும்.இந்தவகையில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக இன்று நடைபெறவுள்ள ஜனநாயக வழியிலான போராட்டத்தை நாம் ஆதரிக்கிறோம் என சோனாதிராஜா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
 
அதேவேளை இராணுவத்தினரின் நில அபகரிப்புக்கு எதிராக யாழ்.பஸ் நிலையத்தில் இன்று நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் ஒன்றியமும் அறிக்கை ஒன்றின் மூலம் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. 
 
தமிழர் தாயகம் எங்கும் திட்டமிட்ட முறையில் நில அபகரிப்பை அரசு மேற்கொண்டு வருகின்றது.  இதனால் 1800 ஆம் ஆண்டளவில் 25 ஆயிரம் சதுர கிலோமீற்றராக இருந்த தமிழர் தாயகப் பகுதி இன்று 11 ஆயிரம் கிலோமீற்றராகக் குறைவடைந்துள்ளது. இதைவிடவும் போர் காரணமாக விரட்டியடிக்கப்பட்ட மக்கள் இன்னமும் இடம்பெயர்ந்தவர்களாக அகதி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் அல்லல் பட்டு வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இதற்கு நேர் மாறாக சிங்களக் குடியேற்றங்களும் நில அபகரிப்புகளும் புத்தர் சிலை முளைப்புகளும் தீவிரம் பெற்றுள்ளன.
 
எனவே அரசின் திட்டமிட்ட நில அபகரிப்பையும், சிங்களக் குடியேற்றங்களையும் திடீர் புத்தர் சிலைகள் புரட்டு வரலாறுடன் தோன்றுதல் என்பவற்றை நிறுத்தக் கோரி இடம்பெறும் ஜனநாயகப் போராட்டத்துக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது என மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment