சென்னை:இலங்கை விமானப் படையினர் நான்கு பேர், பயிற்சிக்காக, மாற்று உடையில், சென்னை வழியாக, கோல்கட்டா சென்றனர்.
இலங்கை விமானப் படையினருக்கு, தாம்பரம் விமானப் படை பயிற்சி மையத்தில், பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு, தமிழக அரசியல் கட்சிகள், கடும் எதிர்ப்பை தெரிவித்தன. பின் அவர்கள், திருப்பி அனுப்பப்பட்டனர். குன்னூரில், இலங்கை படையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கும், கடும் எதிர்ப்பு எழுந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, மாற்று உடையில், சென்னை வழியாக, இலங்கை விமானப் படை வீரர்கள் நான்கு பேர், பயிற்சிக்காக, கோல்கட்டா சென்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை விமானப் படையைச் சேர்ந்த பிரபு சையான், ஜெகத்சந்திர குமாரா, சரகசமேரா, பின்னாகுடேகா நிலந்தா ஆகியோர், நேற்று முன்தினம் அதிகாலை, 4.30 மணிக்கு, ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம், கொழும்புவில் இருந்து சென்னை வந்தனர்.
சென்னையில் இருந்து, 6.30 மணிக்கு, கோல்கட்டா சென்றனர். இவர்களுக்கு, பரக்பூரில், "இன்ஜின் பிட்டிங்' சம்பந்தமான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், அடுத்த சில மாதங்களுக்கு, இவர்கள் பரக்பூரில் தங்கியிருப்பர் என்றும் கூறப்படுகிறது. இலங்கை விமானப் படையினரின் பயணங்களை, சென்னை விமான நிலையத்தில், கியூ பிரிவு போலீசாரும், உளவுத் துறையினரும், தீவிரமாக கண்காணித்து வந்தனர்.இதனால், மாற்று உடையில், இலங்கை படையினர் சென்றுள்ளனர். கோல்கட்டா சென்ற பிறகு தான், தமிழக உளவுப் பிரிவு போலீசாருக்கே, இந்த விவரம் தெரிய வந்துள்ளது.
http://www.dinamalar.com/News_detail.asp?Id=514112
No comments:
Post a Comment