ஆஸ்லோ: இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை வழங்காவிட்டால் மீண்டும் இன மோதல் புதிய வடிவத்தில் வெடிக்கும் என்று நார்வேயின் முன்னாள் அமைதித் தூதராக எரிக் சோல்ஹெய்ம் கூறியுள்ளார்.
நார்வே நாட்டில் வெளிவரும் ஆஃப்டன்போஸ்டன் நாளிதழுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:
மீண்டும் இன மோதல்
இலங்கையில் 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்துக்கு தமிழர் பிரச்னையே காரணமாக இருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளை ராணுவம் தோற்கடித்த பிறகும் அப்பிரச்னை தீர்க்கப்படவில்லை. தமிழர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இதையும் அவர்கள் இன்னும் செய்யவில்லை. இந்த விவகாரங்கள் தீர்க்கப்படாவிட்டால், இலங்கையில் எதிர்காலத்தில் மீண்டும் இன மோதல் புதிய வடிவங்களில் வெடிக்கும்.
கொல்ல சதி
நான் கடந்த 2000-வது ஆண்டு இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது சிங்கள பயங்கரவாதிகள் என்னைக் கொல்ல முயற்சித்தனர். அந்நாட்டில் நிலவிய அச்சுறுத்தல் மற்றும் அங்குள்ள நிலவரம் குறித்து எங்களுக்கு அவ்வப்போது நம்பகமான தகவல்கள் கிடைத்து வந்தன. கொலை முயற்சி தொடர்பாக நார்வே பாதுகாப்புச் சேவை அமைப்பில் இருந்து எங்களுக்கு எச்சரிக்கை வந்தது. எங்களுக்கு அந்த அமைப்பு பாதுகாப்பு வழங்கியது. எனினும் உயர் பாதுகாப்பு வழங்கப்பட்டாலும் அது உயிரைக் காக்க உத்தரவாதம் தராது என்பதை நான் உணர்ந்திருந்தேன். ஏனெனில் உயர் பாதுகாப்பு வழங்கப்பட்ட பல இலங்கை அமைச்சர்களும் விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்பட்டார்கள்.
சிங்களரைக் காப்பாற்றிய நார்வே
விடுதலைப்புலிகளுக்கு எதிராக 2000-வது ஆண்டில் நடைபெற்ற போர், ராணுவத்துக்கு மிக மோசமாக அமைந்தது. அப்போது யாழ்ப்பாணம் பகுதியில் சிக்கிக் கொண்ட ராணுவ வீரர்களை பத்திரமாக வெளியேற்றுவது தொடர்பாக இந்தியாவிடம் நார்வே பேச்சு நடத்தியது. இவை அனைத்துக்கும் நார்வேதான் காரணம் என்று அப்போது பெரும்பான்மை சிங்களர்கள் கருதினர்.
அந்த, ஆண்டு மே 24-ம் தேதி, நான் கொழும்பை விட்டு நார்வே புறப்பட்டேன். அப்போது அங்குள்ள நார்வே தூதரகத்தின் மீது அடையாளம் தெரியாத சிலர் வெடிகுண்டை வீசினர். அது குறி தவறி பக்கத்தில் இருந்த, யாரும் குடியிருக்காத வீட்டின் தோட்டத்தில் விழுந்து வெடித்தது. அந்த குண்டு என்னைக் குறிவைத்து வீசப்பட்டதா? என்பது தெரியவில்லை என்றார் அவர்.
No comments:
Post a Comment