Translate

Friday, 10 August 2012

கருநாடகத்தில் சாதி சான்றிதழ் இல்லாமல் தவிக்கும் 20 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள்!

     இலங்கையில் இருந்து கருநாடகத்தில் குடியேற்றம் பெற்றுள்ள தமிழர்களுக்கு, சாதி சான்றிதழ் கிடைக்காததால் கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.
     இந்தியாவும், இலங்கையும் ஆங்கிலேயர்களின் ஆளுமைக்கு உட்பட்டிருந்த காலகட்டத்தில், அதாவது, 200௦௦ ஆண்டுகளுக்கு முன்பு தோட்டத் தொழிலில் ஈடுபடுவதற்காக ஆயிரக்கணக்கான தமிழர்களை ஆங்கிலேயர்கள் இலங்கைக்கு அழைத்துச் சென்றனர்.

     இலங்கை தோட்டங்களில் கடுமையாக உழைத்த தமிழர்களுக்கு எவ்வித அரசியல் உரிமையும் அளிக்கப்படாமல் இரண்டாந்தரக் குடிமக்களாகக் கருதப்பட்டனர். இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டதால் தோட்டத் தொழிலில் ஈடுபட்ட தமிழர்களுக்கு இலங்கை அரசு போதுமான அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளை வழங்கவில்லை.
     இந்த நிலையில், தோட்டத் தொழிலில் பணியாற்றி வந்த 6 லட்சம் தமிழர்களை இந்தியாவில் குடியமர்த்த 1964 ஆம் ஆண்டில் அப்போதைய இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகா, இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, 1970களில் லட்சக்கணக்கான தமிழர்கள் இந்தியாவுக்கு குடியேற்றம் செய்யப்பட்டு, தமிழகம், கருநாடகம், கேரளம், ஆந்திரம் மற்றும் அந்தமானில் குடியமர்த்தப்பட்டனர்.
     கருநாடகத்தில் தென் கன்னட மாவட்டம், சுள்ளியா, புத்தூர் ஆகிய பகுதிகளில் 926 இலங்கைத் தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் குடியமர்த்தப்பட்டனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்தக் குடும்பங்களுக்கு இந்திய நாட்டின் குடியுரிமை வழுங்கப்பட்டுள்ளதோடு, ஒப்பந்தப்படி வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டது.
     மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதியில் அமைந்துள்ள ரப்பர் தோட்டங்களில் இலங்கைத் தமிழர்களுக்கு வேலை கொடுக்கப்பட்டது. கருநாடக வன மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில், நிரந்தரத் தினக் கூலி வேலை வழங்கப்பட்டது. இதை நம்பிப் பிழைத்து வந்த இலங்கைத் தமிழர்களுக்கு சாதி சான்றிதழ் கொடுக்க கருநாடக அரசு மறுத்து வருவதால், கல்வி, வேலை வாய்ப்புகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
     தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம், உளுந்தூர் பேட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட சந்திரலிங்கத்தின் முன்னோர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் குடியேறினர். இந்தியாவில் மீள்குடியமர்த்தப்பட்டபோது, சுள்ளியா வந்து சேர்ந்த சந்திரலிங்கம், தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக விளங்குகிறார்.
     பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு மாவட்ட, வட்டப் பஞ்சாயத்துக்களில் உறுப்பினராகவும் பதவி வகித்திருரக்கிறார்.
     அவர் கூறியது:
     ‘இந்திய-இலங்கை கூட்டு ஒப்பந்தத்தின்படி 926 குடும்பங்கள் சுள்ளியா, புத்தூர் பகுதியில் வசித்து வருகிறோம். ரப்பர் தோட்டத்தில் குடும்பத்தில் இருவருக்கு வேலை வழங்கப்பட்டது. கருநாடக மாநில வன மேம்பாட்டுக் கழகம், ரப்பர் தோட்டத்தில் வேலை செய்வதற்காக குடியிருக்கத் தற்காலிக வீடு தந்துள்ளது. அப்போது 8 ஆயிரம் பேர் வேலையில் இருந்தோம்.
     நீண்ட போராட்டத்திற்கு பிறகு 2வது தலைமுறைக்கு தோட்டத்தில் வேலை பெற்றோம். ஆனால், 3வது தலைமுறைக்கு வேலை கொடுக்க மறுக்கிறார்கள். 1995ஆம் ஆண்டு வரை குடியேற்றம் பெற்ற இலங்கைத் தமிழர்களுக்கு சாதி சான்றிதழ்களை கருநாடக அரசு வழங்கி வந்தது.
     வேறு நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறியவர்களுக்கு சாதி சான்றிதழ் கொடுக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைச் சுட்டிக்காட்டி, சாதி சான்றிதழ் வழங்க கருநாடக அரசு மறுத்துவிட்டது. மறுவாழ்வு திட்டத்தின் கீழ், குடியேற்றம் பெற்றிருப்பதால் சாதி சான்றிதழ் கொடுக்கலாம் என்று வலியுறுத்தி, கடந்த 15 ஆண்டுகளாக பல போராட்டங்களை நடத்தியும் எவ்விதப் பலனும் ஏற்படவில்லை.
     சாதி சான்றிதழ் இல்லாததால் எங்கள் குழந்தைகள் கல்வி, வேலைவாய்ப்புகளை இழந்து வருகிறார்கள். இதனால், குறைந்த ஊதியத்திற்கு தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் நிலை உள்ளது. உயர் கல்விக்குச் செலவிட முடியாததால், எங்கள் குழந்தைகள் கல்வியைப் பாதியில் நிறுத்தும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
     குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) கொடுக்கும் அரசு, சாதி சான்றிதழ் கொடுக்காததால் எங்கள் குடும்பங்கள் பரிதவித்துள்ளன.
     பல்வேறு சாதிகளை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். சிலர் தமிழகத்திற்குச் செல்ல விரும்புகிறார்கள். சிலர் இங்கேயே தங்கியிருக்க விரும்புகிறார்கள். தமிழகத்தில் குடியேறுவோருக்கு தமிழக அரசு உதவ முன்வர வேண்டும்.
     ரப்பர் தோட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.186 கூலி தருகிறார்கள். வேலைக்குச் செல்லாவிட்டால் கூலி கிடையாது. எனவே, எங்கள் குழந்தைகளுக்கு தொழில் பயற்சி அளிக்க தமிழக அரசு உதவ வேண்டும். இப்போது நாங்கள் குடியிருக்கும் வீடுகளை நிரந்தரமாக எங்களுக்கு கொடுக்க வேண்டும்.
     சுள்ளியாவில் 14 ஆயிரம் பேரும், புத்தூரில் 6 ஆயிரம் பேரும் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்த நிலமில்லை. குழந்தைகளைப் படிக்க வைக்க வசதியில்லை. இந்தியாவில் குடியேறிய பிறகும், இலங்கையில் இருந்தது போல இரண்டாந்தரக் குடிமக்களாக வாழ்ந்து வருகிறோம். எங்கள் குழந்தைகள் தமிழ் படிக்கவும் பள்ளிகள் இல்லை. இதனால், தாய் மொழியை மறக்கும் நிலை உள்ளது.
     தமிழர்கள் என்ற தொப்புள் கொடி உறவுள்ள தமிழக மக்களும், தமிழக அரசும் எங்களை வரவேற்று வாழ்க்கை அளிக்க வேண்டு’ என்றார் அவர்.
                         நன்றி: ந.முத்துமணி, தினமணி நாளிதழ், பெங்களூர்.

No comments:

Post a Comment