Translate

Thursday 16 August 2012

புத்தர் சிலை, தேசியக் கூட்டமைப்பு, துணைக்குழுக்கள் : சபா நாவலன்


அவர்கள் யாரை விட்டுவைத்திருக்கிறார்கள்? தெருத்தெருவாக அனாதைகளாக அலைகின்ற ஒரு மக்கள் கூட்டத்தை உருவாக்கிவிட்டு அபிவிருத்தி செய்கிறோம் என மனித குலத்தை அசிங்கப்படுத்துகிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் ஆபிரிக்காவில் பல்தேசிய நிறுவனங்கள் ஆக்கிரமித்துக்கொண்ட வாழ் நிலங்களும் இயற்கை வளங்களும் ஆயிரக்கணக்கான மக்களைச் சாட்சியின்றி கொன்று குவித்திருக்கிறது. முன்பெல்லாம் மக்களைக் கொன்று குவிப்பதற்கு ஏகாதிபத்திய நாடுகளில் இருந்து துப்பாக்கிகளோடும் பரிவரங்களோடும் வந்திறங்கிய இராணுவ அதிகாரிகளுக்குப் பதிலாக இப்போது உள்ளூர் தரகர்களின் துணையோடு மேற்குலகக் காப்ரட் கனவான்கள் வந்து போகிறார்கள்.

பட்டினியோடு போராடி தெருவோரத்தில் மரணித்துப் போகும் பச்சைக் குழந்தைகளின் பிணங்களில் மேல் நடந்து வந்து வறிய நாடுகளை வியாபாரம் என்ற பெயரில் ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள்.
எத்தியோப்பியா என்றாலே பசியோடு மரணித்துக்கொண்டிருக்கும் குழந்தைதான் கண்முன்னால் தெரியும். அதற்கும் அப்பால் எத்தியோப்பிய அரசு பல்தேசிய நிறுவனங்களின் பாவனைக்காக 3 மில்லியன் ஹெட்டேர் நிலத்தை அடகுவைத்துள்ளது. அங்கு உற்பத்தியாகும் உயிரியல் எரிபொருள் மூலப் பொருட்கள் செத்துப்போகும் எதியோப்பியர்களுக்கானது அல்ல ஏற்றுமதி செய்யப்படுவதற்கானது.
Agrictech UK Ltd என்ற நிறுவனம் பத்தாயிரம் ஏக்கர் நிலத்தை நைஜீரியாவில் ஆக்கிரமித்துக்கொண்டது. அங்கிருந்த மக்களை வெளியேற்றி அனாதைகளாக்க மீள் குடியமர்த்தல் என்ற பெயரில் அரசு செலவு செய்த பணமோஅரை மில்லியம் டொலர்கள். நிலம் விற்பனை செய்யப்பட்டதோ அதைவிடக் குறைவான செலவில்.
நிலப்பறிப்பிற்காகவும் தமது பல்தேசியக் கொள்ளைக்காகவும் வியாபார நிறுவனங்கள் அத்தனை ஆயுதங்களையும் தமது அரசுகளின் துணையோடு பயன்படுத்தி கொள்கின்றன. சிரியாவிலும், லிபியாவிலும் அவர்கள் பயன்படுத்திக்கொண்டது இஸ்லாமிய அடிப்படைவாதம். இந்தியாவில் அவர்கள் பயன்படுத்திக்கொள்வது இந்து அடிப்படைவாதம். இலங்கையில் சிங்கள  பௌத்த பௌத்த அடிப்படைவாதம். இவை அனைத்துமே சமூகவிரோதப் பயங்கரவாதங்கள்.
இலங்கையில் போர்க்குற்றங்ககளை முன்வைத்து அமரிக்க, ஐரோப்பிய இந்திய அரசுகள் இலங்கை அரசுக்கு அழுததம் கொடுத்து பெரும் சிரமங்கள் இல்லாமலேயே மக்களின் நிலத்தைப் பறிமுதல் செய்கின்றன. சிறுகச் சிறுக, பல்வேறு காரணங்களை முன்வைத்து நிலங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. கடந்தவாரம் இலங்கைக்குச் சென்ற இந்திய வர்த்தக் அமைச்சர் குழு இந்தியாவிற்கு திருகோணமலையில் சிறப்புப் பொருளாதார வலையம் ஒன்றை உருவாக்குவதற்கான ஒப்பந்ததில் கைச்சாத்திட்டுள்ளது.
இந்தியாவைத் தவிர்த்துத் தேசிய இன ஒடுக்கு முறைக்கு உள்ளாகும் தமிழர்கள் விடுதலை பெற முடியாது என சந்திக்குச் சந்தி முழக்கமிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் இன்னோரன்ன ஆதரவாளர்களும் சலனமின்றி ஆக்கிரமைப்பை அங்கீகரிக்கின்றனர்.
வன்னியிலும், யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும், மட்டக்களப்பிலும் எத்தியோப்பியக் குழந்தைகளையும், உல்லாசப் பயணிகளுக்கு இரையாகும் பெண்கள் சமூகத்தையும் இந்தப் பல்தேசியக் நிறுவனங்கள் ராஜபக்ச அரசினதும் அதன் துணை குழுகளதும் துணையோடு உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே மன்னார் கடற்பகுதியிலும், கிளிநொச்சியிலும், வடக்கிலும் நிலப்பறிப்பு சிங்கள பௌத்த புனித நிலத்தின் பெயரால் நடைபெறுகின்றது.
ஆபிரிக்காவிலும், இந்தியாவிலும் பல்தேசியக் நிறுவனங்களின் நிலப்பறிப்பு பல எதிர்ப்புக்களையும் போராட்டங்களையும் சந்தித்தே இடம்பெறுகிறது. நிலப்பறிப்புச் சாத்தியமற்றுப் போன பல சந்தர்பங்களைக் கோடிட்டுக்காட்டலாம். 30 வருட ஆயுதப்ப்போராட்டம் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் வடக்குக் கிழக்க்கில், சரியான புள்ளிவிபரம் கூடத் தெரியாமல் புற்று நோய் போன்று மக்களின் வாழ் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.
இந்த ஆக்கிரமிப்பிற்குப் பெரும்பான்மை சிங்கள் மக்கள் மத்தியிலிருந்து எதிர்பு எதுவும் வந்துவிடாதவாறு பாதுகாத்துக்கொள்வதற்காக சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனை பயன்படுகிறது. அதற்காக புத்தர் சிலைகளும் விகாரைகளும் தமிழர் நிலங்களில் இரவோடு இரவாக முளைக்கின்றன. மசூதிகள் அழிக்கப்படுன்றன.
நஞ்சூட்டப்பட்ட பௌத்த சிங்கள சிந்தனைக்குள் சிங்கள மக்களை ஒடுக்கி வைத்திருந்தால் மட்டுமே நாட்டின் ஒரு பகுதி தாரைவார்த்துக் கொடுக்கப்படுவதை எதிர்ப்பின்றி மகிந்த பாசிசம் நிகழ்த்த முடியும்.
பல்தேசி நிறுவனங்களும், அவற்றின் கட்டளைக்குள் இயங்கும் மேற்கின் ஏகபோக அரசுகளும், இந்திய அரசும், சீன சர்வாதிகாரிகளும் இலங்கை அரசுடன் இணைந்து நடத்தும் இந்தப் பயங்கரவாதத்தைப் புரிந்துகொள்ளாத புலம் பெயர் ‘தேசிய வியாபாரக்’ குழுக்கள் இனவாதிகளாக உலாவருகின்றனர். சிங்கள மக்களை பௌத்த சிங்கள உணர்வுகளிலிருந்து விடுதலை செய்வதற்குப் பதிலாக அதனை மேலும் உரமிட்டு வளர்க்கவே இவர்கள் முற்படுகிறார்கள். மகிந்த அரசின் இருப்பிற்குத் தேவையான உண்மையான நண்பர்கள் இவர்கள்.
அமரிக்காவையும் அதன் பல்தேசிய நிறுவனங்களையும் எதிர்ப்பின்றி இலங்கைக்குள் நுளைத்துத் தேசிய இனத்தைக் காட்டிக்கொடுத்தவர்களில் இவர்கள் பிரதானமானவர்கள். சற்று உரத்த குரலில் பேசினால் ‘தலைவர் வருவார்’ என்று தப்பித்துக்கொள்ளும் பாதகர்கள்.
ஏனைய நாடுகளைப் போன்றே ஈழத் தமிழர்களும் நிலப்பறிப்பிற்கும், ‘அபிவிருத்தி அழிப்பிற்கும்’ எதிரான தன்னிச்சையான போராட்டங்களை நடத்துகின்றனர்.
கிளிநொச்சியில், யாழ்ப்பாணத்தில் மட்டக்களப்பில், என்று மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் நடைபெற்றுள்ள்ன.
இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்கும், நேரடியாகக் காட்டிக்கொடுப்பதற்கும் டக்ளஸ் குழு, பிள்ளையான் குழு, கருணா குழ், கேபி குழு என்று தமிழர் குழுக்கள் மிகத் தீவிரமாகச் செயற்படுகின்றன.
கிளிநொச்சியில் போராட்டம் நடத்தியவர்களை டக்ளஸ் தேவாந்தா நேரடியாகவே சென்று மிரட்டியுள்ளார்.
இந்த அரச துணைக் குழுக்களின் சமூக விரோதச் செயற்பாடுகளுக்கு மனிதாபிமான முலாம் பூசிவதற்கென்றே ஒரு ‘புத்தி சீவிகள்’ குழாம் சிரித்த முகத்தோடு அலைகிறது. சாதி வாதிகளும், பிரதேச வாதிகளும் அரச துணைக் குழுக்களை ஜனநாயக மயப்படுத்துகிறார்கள்.
இவர்களுக்கு எல்லாம் இடைத்தரகர்களாகச் செயற்படும் தன்னார்வ நிறுவனங்களின் அழிவு அரசியல் இன்னொரு புறத்தில் மக்களைச் சூறையாடுகின்றது.
தற்செயலாக அரச துணைக் குழுக்களையும் மீறி மக்கள் போராட்டம் முனெழுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ‘காவல் தெய்வங்களாத்’ தொழிற்படும்.
அனைவரும் மறந்து போன கூட்டமைப்பின் மாநாட்டுத் தீர்மானத்தின் இறுதியும் பத்தாவதுமான பகுதி கூறுவது இதையே.
மக்கள் பிரச்சனைகளை கூட்டமைப்பு பேசித் தீர்த்துக்கொள்ளும், அப்படிப் பேசித் தீர்த்துக்கொள்ள இயலாத சூழலில் அன்னிய சக்திகளை அழைக்கும். எது எவ்வாறாயினும் இனிமேலும் ஒரு போராட்டம் – எந்த வடிவிலாயினும் – உருவாகிவிட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே கூட்டமைபு தமது பத்தாவது பகுத்கியான மாநாட்டுத் தீர்மானத்தில் முன்வைக்கிறார்கள்.
மக்கள் போராட்டத்தை அழிப்பதாகத் தீர்மானித்து மக்கள் முன் வாக்குப் பொறுக்கத் தயாராகிவிட்ட கூட்டமைப்பு ஈழத் தமிழர்களின் அரசியல் தலைமை அல்ல.
அது இனிமேல் தான் உருவாக வேண்டும். புதிய மக்கள் சார்ந்த அரசியல் வேலைத்திட்டத்தோடு ஈழத்தில் அரசியல் தலைமையின் அவசியம் அவசரமானது. தேர்தலைப் புறக்கணிப்பதிலிருந்து அது ஆரம்பமாகலாம்.

No comments:

Post a Comment