Translate

Friday, 3 August 2012

மானாட மயிலாட நிகழ்சி: சின்னத்திரை தொடர் நாடகம் பார்த்தால் தமிழீழம் கிடைக்கும் !

மானாட மயிலாட நிகழ்சி: சின்னத்திரை தொடர் நாடகம் பார்த்தால் தமிழீழம் கிடைக்கும் ! 
 

லண்டனில் ,,,வீட்டில் 3 வேளையும், வயிறு புடைக்க உண்டுவிட்டு TV யில் மானாட மயிலாட பார்த்துவிட்டு, அப்படியே செய்தியையும் இன்ரர் நெட்டில் படித்து விட்டு படுத்து உறங்கி அடுத்த நாள் வேலைக்கு செல்லும் நண்பர்களே ! சமைத்துவிட்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம் TV இல் சீரியல் பார்த்து அழுதுகொண்டு உட்காந்திருக்கும் எம்குலத் தமிழ்ப் பெண்களே ! இச் செய்தியை 2 நிமிடம் பொறுமையாக வாசியுங்கள் !


நாம் உணவு உண்டால், அதனைச் சமிபாடடையச் செய்ய குடலில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கிறது. மிகவும் காரமான இந்த அமிலம் சுரக்கும் வேளையில் வயிற்றில் சாப்பாடு இல்லை என்றால், அது சாப்பாடு என நினைத்து குடல் சுவருடன் தாக்கம் புரிந்து குடல் சுவரைப் புண்ணாக்குகிறது. இது நடைபெற குறைந்தது 3 நாட்கள் போதும். இதனை அல்சர் என்பார்கள் ! இப்ப இதுக்கும் மானாட மயிலாடவுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா ? சற்றுப் பொறுங்கள் ! 1 நாளைக்கு நீர் அருந்தா விட்டால்கூட எமது உடலில் உள்ள நச்சுப் பதார்த்தங்களை சிறுநீரகத்தால் வெளியேற்ற முடியாதுபோகும். அது இரத்தத்தில் கலந்து இருதயம், ஈரல் மற்றும் சிறுநீரகத்தை தாக்க ஆரம்பிக்கும். 3 நாட்கள் உணவை நாம் உண்ணாமல் விட்டால் சோர்வு, ரத்த அழுத்தம் குறைவு ! உடல் நடுங்குதல், குளிர், கண்பார்வை மங்குதல், சிறு நீர் கழிக்கும்போது பாரிய வேதனைகள் ஏற்படும் !

12 நாட்கள் உணவை அருந்தாவிட்டால் குடல் சுருங்கிவிடும். பலவகையான நச்சுப்பதார்தங்கள் எமது இரத்தத்தில் தங்கிவிடும். நாடி நரம்புகள் சுருங்கிவிடுவதாலும் கைகளில் உள்ள சதைகளுக்கு ரத்த ஓட்டம் குறைவதாலும் , ஊசியால் குத்துவது போன்ற வலி கைகளிலும் தோள்பட்டையிலும் கால்களிலும் ஏற்படும். சிறு நீர் வருவதுபோல இருக்கும், ஆனால் பாரிய நோ இருக்கும் ! மூளைக்கு நச்சுக் கலந்த இரத்தம் சென்றுவருவதால், செயல்பாடு பாதிக்கப்படும் ! இருதயக் கோளாறுகள் உருவாகும் ! சாதாரண வெப்பநிலையில் கூட குளிரும். சுருண்டு படுக்கவே தோன்றும். காதுகள் கேட்க்கும் திறன் இழக்கும் ! இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம். உண்ணாவிரதம் இருக்கும் நபர் அனுபவிக்கும் கொடுமைகள் இவை !

லண்டனில் சிவந்தன் (2 பிள்ளையின்) தகப்பன், கடந்த 12 நாட்களாக உண்ணாவிரம் இருந்து வருகிறார் என்பது எமக்குத் தெரியாத விடையம் அல்ல ! இந்திய சுதந்திரத்துக்காக அவ்வப்போது உண்ணாவிரதம் இருந்த காந்தி அடிகள் கூட நீர் அருந்தி உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் யாழ்ப்பாணத்தில் இந்திய அரசிடம் நீதிகேட்டு உண்ணாவிரதம் இருந்து தியாகியான திலீபன், நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்தார். தற்போது இந் நிலை சிவந்தனுக்கும் தோன்றியுள்ளது. இவர் பாரிய உயிராபத்துக்கு முகம்கொடுக்கிறார். இதற்காக லண்டனில் உள்ள அனைத்து தமிழர்களையும் நாம் உண்ணாவிரதம் இருக்கச் சொல்லவில்லை ! ஆனால் அங்கே குளிருக்கு மத்தியில் தன்னை வருத்தி, கைகள் சோர்வடைந்த நிலையில், கண்கள் மங்கிப்போன நிலையில், நீர் இன்றி உண்ணாவிரதம் இருக்கும் ஒரு தமிழனை சென்று பார்பதிலுமா மக்கள் பின்னடிக்கிறார்கள் ?

வீட்டிற்கு ஒருவர் புறப்பட்டுச் சென்று, ஆறுதலாக நாலு வார்த்தை ! தம்பி உன் போராட்டம் வெல்லுமடா என்று ஒரு உற்சாகச் சொல் ! தோள் தட்டி ஒரு பாராட்டு ! உன்னோடு நாமும் இருக்கிறோம் என்று ஒரு சொல், சொல்லக்கூடவா நேரமில்லை ? 3 லட்சம் தமிழர்கள் வசிக்கும் பிரித்தானியாவில் ஒரு தமிழர்களுக்கும் உணர்ச்சி இல்லையா ? ஒருவேளை நாம் உணவு உண்ணும்போது அங்கே ஒருவன் எமக்காக, எம்மினத்துக்காக உண்ணாவிரதம் இருக்கிறானே என்று கூடவா நினைத்துப் பார்க்க தோன்றவில்லை ! வீட்டில் இருந்து படம் பார்த்தும், நாடகங்களைப் பார்த்து ரசிக்கும் எம்மின மக்களே ! இனியாவது வீட்டிற்கு ஒருவர் புறப்பட்டுச் சென்று நாலு நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளை சிவந்தனுக்கு கொடுப்பீர்களா ? அவர் உண்ணாவிரதம் இருக்கும் இடத்தில் சென்று நாமும் ஒரு 2 மணி நேரம் அமர்ந்து எமது ஆதரவைக் காட்டவேண்டாமா ?

வேற்றின மக்கள் எல்லாம் வந்து, அவர் ஏன் உண்ணாவிரதம் இருக்கிறார் எனக் கேட்டறிந்து, தாமும் அங்கே சில மணிநேரம் தங்கிச் செல்கிறார்களே. ஆனால் தமிழர்களோ ஒரு சோர்வு நிலையில் உள்ளார்கள். புலிகள் கைகளில் ஆயுதங்களை எடுத்து போராடியவேளை லண்டன் தமிழர்களிடம் இருந்த ஆவேசம், ஆக்ரோஷம் எல்லாம் எங்கே போனது ? இனி வெல்லமாட்டோம் என்று யார் சொன்னது ? போராடாத இனம் வெற்றிபெற்றதாக சரித்திரம் இல்லை என்று எங்கள் தலைவர் அன்று சொன்னார் ! அதனை மதிக்கும் தமிழர்கள் அனைவரும் தம்மால் முடிந்த நேரத்திலாவது சிவந்தன் உண்ணாவிரதம் இருக்கும் இடத்துக்குச் சென்று உங்கள் ஆதரவை கொடுக்கக்கூடாதா ?


வல்லிபுரத்தான்.
நன்றி தமிழ் இணையங்கள்

No comments:

Post a Comment