Translate

Friday, 3 August 2012

காணி, பொலிஸ் அதிகாரங்களை தரமுடியாது என அரசு கூறும் போதெல்லாம் மௌனம் காத்தவர்கள் இன்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். - இரா.துரைரெட்ணம்

காணி, பொலிஸ் அதிகாரங்களை தரமுடியாது என அரசு கூறும் போதெல்லாம் மௌனம் காத்தவர்கள் இன்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். - இரா.துரைரெட்ணம்

காணி, பொலிஸ் அதிகாரங்களை தரமுடியாது என மத்திய அரசு கூறும் போதெல்லாம் மௌனம் காத்தவர்கள் இன்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். இன்று வரை அரசின் கைபொம்மையாக அவர்களின் ஒருபக்கசார்பான சந்தர்பவாத ஆட்சியாளராக இருந்துசெயல்படும் அரசின் கைக்கூலிகளை அடையாளம் கண்டு எதிர்வரும் தேர்தலில் மக்கள் ஆணை வழங்குவார்கள் என கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் இரா.துரைரெட்ணம் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கிழக்கு மாகாண தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'கிழக்கு மாகாண மக்கள் மீது மத்திய அரசால் திணிக்கப்பட்டுள்ள இம் மாகாண சபைத் தேர்தல் என்பது எம்மக்களை விழிப்படையச் செய்துள்ளது. குறிப்பாக தமிழ்த்தேசிய ஒற்றுமை மேலும் வலுவடைந்துள்ளதாக காட்ட மக்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளனர்.
இலங்கை இந்திய ஒப்பந்தமூடாக உருவாக்கப்பட்ட வடகிழக்கு மாகாணசபை முறைமை என்பது எமது மக்களின் பிரச்சினைக்கான ஆரம்பவடிவமே. இம்முறைமையை 1988 ஆண்டு வரதராஜப்பெருமாள் முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டு ஒருவருடம் கடந்த நிலையில் நிலையில், காணி, பொலிஸ், நிதி, நீதி போன்ற அதிகாரங்கள் உட்பட ஒப்பந்தத்தில் உள்ளபடி மத்திய அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்பதற்காக 19 அம்சகோரிக்கையை முன்வைத்து மத்திய அரசினை நடைமுறைப்படுத்தமாறு கோரியிருந்தோம். இதைக் கருத்தில் கொள்ளாது மாகாண சபை கலைக்கப்பட்டு ஆளுனரின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
வடக்கு கிழக்கு மாகாணசபைக்கு அதிகாரங்கள் வழங்கப்படவேண்டு;ம் என அனைவராலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டன. வெளிநாடுகளும் இந்தியாவும் தமிழ் கட்சிகளும் முன்னுதாரணமாக செயல்பட்ட இந்தநிலையில் மத்திய அரசு தமிழ்மக்களுக்கான தீர்வு விடயங்களை நடைமுறைபடுத்தாமல் காலம் கடத்தியது. இந்நிலையில் கிழக்கு மாகாணசபை தேர்தல் 2008 அறிவிக்கப்பட்டு தேர்தல் நடந்தேறி இடைநடுவில் இதுவும் கலைக்கப்பட்டுவிட்டது. இக்கால கட்டத்தில் அரசுடன் சேர்ந்து செயல்பட்ட கட்சிகள் அரசை தட்டிக்கேட்டு அதிகாரங்களை பெறக்கூடியவாறு இருக்கவில்லை.
இதனால் கிழக்கு வாழ் மக்களுக்கான கிழக்கு மாகாண சபையின் மக்கள் பிரதிநிதிகள் மாகாண சபைக்கான கொடிச்சின்னத்தை உருவாக்கி பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுனரின் அனுமதிக்கு அனுப்பி நான்கு வருடங்களாகியும் இன்னும் அனுமதி தராமல் ஆளுநர் மறுத்த போது, ஏன் இன்று இந்த ஆளும் தரப்பென்று கூறிக்கொள்வோர் அதை பெற முயற்சிக்கவில்லை?
மாகாண சபைக்கு வழங்கப்பட்ட 13ஆவது சட்ட திருத்தத்திலுள்ள விற்பனை, வருமானவரி அதிகாரத்தை ஒரு வருடத்திற்கு தந்தபோது அவ்வருடம் சுயமாக கிழக்கு மாகாண சபையை திட்டமிடக்கூடியவாறு இருந்தது. ஆயினும் மீண்டும் மத்திய அரசால் இந்த அதிகாரம் பறிக்கப்பட்டபோது இவ் ஆளும் தரப்பினர் அப்போது எதனைப் பாத்துக்கொண்டிருந்தனர்.
கிழக்கு மாகாணப் பட்டதாரிகளுக்கு பயிற்சி அடிப்படையிலாவது மாகாண சபையினால் நியமனம் வழங்குங்கள் என பட்டதாரிகள் கேட்ட போது, இதே ஆளும் தரப்பினர் ஏன் மௌனிகளாக இருந்தனர்? மத்திய அரசிடம் நிதியைபெற்றும் ஏன் ஒரு நியமனத்தை வழங்க முடியாமல் போனது? உயர் தேசிய கணக்கியல் டிப்பிளோமா பட்டதாரிகள் படிப்பை முடித்தவர்களும்கூட கடந்த காலத்தில் இவ்வாறு ஏமாற்றப்பட்டனர்.
கிழக்கு மாகாண சபைக்கு மத்திய அரசால் ஒதுக்கப்படும் வரவுசெலவுத் திட்ட நிதி, யுத்ததால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு போதாது அதிகமாக ஒதுக்கப்பட வேண்டும் என பேசும்போதும் மத்திய அரசுக்கு முண்டுகொடுத்தார்கள். பலவிதமான நிதிகளை மாகாண சபையே கையாளவேண்டிஇருந்தும் மத்திய அரசு கையாளுவதற்கு ஒப்புக்கொடுத்தார்கள். வெளிநாட்டு நிதிகளை மத்திய அரசு கையாளும் நிலையை உருவாக்கி உள்ளார்கள். இவர்கள் தானா கிழக்கு மக்களின் மீட்பர்கள் ?
காணி, பொலிஸ் அதிகாரங்களை தரமுடியாது என மத்திய அரசு கூறும் போதெல்லாம் மௌனம் காத்தவர்கள் இன்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.
நிதி தொடர்பான விடயத்தில் மாகாணசபையில் வெளிப்படை தன்மையும் நல்லாட்சி முறைமையும் கொண்டு வருவதற்குப் பதிலாக முறையற்ற நிதி பிரமாண ஆட்சியை ஏன் மாகாண சபை கொண்டுவந்ததுஎன்பதற்கு இந்த ஆளும்தரப்பினர் என்னபதில் சொல்லப்போகின்றார்கள்?
கிழக்கு மாகாண சபையை ஜந்து வருடம் ஆட்சி புரியமாறு மக்கள் வழங்கிய ஆணையை மீறி கலைத்தது மக்கள் வழங்கிய ஆணையை மீறுவதாக இல்லையா? அன்றில் இருந்து இன்று வரை அரசின் கைபொம்மையாக அவர்களின் ஒருபக்கசார்பான சந்தர்ப்பவாத ஆட்சியாளராக இருந்துசெயல்படும் அரசின் கைக்கூலிகளை அடையாளம் கண்டு எதிர்வரும் தேர்தலில் மக்கள் ஆணை வழங்குவார்கள். அது நிச்சயமாகும்.
கடந்த மாகாண சபையில் ஏற்பட்ட இவ்வாறான நிலைமைகளை இல்லாமல் செய்வதற்காகவும் ஜனநாயகரீதியாவும் இதயசுத்தியுடனும் தமிழ் தேசியத்தைப் பாதுகாப்பதற்காகவும், உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் களமிறங்கியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்யுங்கள்' என்றார்.

No comments:

Post a Comment