Translate

Thursday 16 August 2012

இனியும் நாம் எம் மக்களை ஏமாற்றக் கூடாது இந்த நாட்டில் எமக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள அனைவரும் போராடுவோம்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

news
எமது மக்கள் நொந்து போய் இருக்கின்றார்கள் எமது மக்கள் அழிந்து போய் இருக்கின்றார்கள் மக்களளுக்காக குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு எங்களிடம் இருக்கின்றது அவ்வாறு நாம் செயற்படாது விட்டால் மக்கள் எமக்கு எதிராகத் திரும்புவார்கள் அதை நாம் மறந்து விடக் கூடாது.
 
இனியும் நாம் எம் மக்களை ஏமாற்றக் கூடாது அதற்காக நாம் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அதன்படி எதிர்காலத்தில் அழிக்க முடியாத ஆழமான ஒரு அரசியல் நிலைப்பாட்டினை  தமிழ் அரசியல் தலைவர்கள் முன்வைக்க வேண்டும். இதற்காக நாங்கள் எல்லோரும் ஒன்றுதிரள்வோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அனைவருக்கும் கோரிக்கை விடுத்தார். 
 
டெல்றொக்சன் மற்றும் நிமலரூபனின் படுகொலையினைக் கண்டித்து யாழ்.நகரில் தமிழ் அரசியற் கைதிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவித்ததாவது,
 
டெல்றொக்ஷன், நிமலரூபனது படுகொலைகள் தொடர்பில் அரசினால் விசாரணை நடத்தப்படப் போவதில்லை என்பது தான் உண்மை.
 
முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் வேறொரு அரசின் ஆட்சியின் கீழ் எம்முடைய தமிழ் அரசியற் கைதிகள் சிறையில் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்போதும் நீதி கேட்டுப் போராடினோம். எதுவும் கிடைக்கவில்லை. அதன் பின்னர் இன்னொரு ஆட்சியாளர்களின் கீழ் பிந்துனுவெலவில் தமிழ்க் கைதிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். அன்றும் நீதிகேட்டுப் போராடினோம். அன்றைக்கும் நீதி கிடைக்கவில்லை.
 
இன்றும் இரண்டு தமிழ் அரசியற் கைதிகள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் ஒரு நாளும் சிறிலங்கா அரசினால் உள்ளக ரீதியாக எமக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. எமது மக்கள் இந்த நிலைமைகளை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
 
எமது தமிழ் மக்களுக்கு எதிரான அநியாயங்களுக்கு எதிராக அழுதுகொண்டு கத்திக் கொண்டு இருக்கப் போகிறோமா? நிலைமைகளை சரியாக அறிந்து புத்திசாலித்தனமாக எங்களுடைய நிலைப்பாட்டை முன்வைக்கப் போகின்றோமா?
 
எனினும் யதார்த்தம் என்னவென்றால் தமிழர்கள் இலங்கையில் ஒற்றுமையாக ஜனநாயக உரிமைகளுடன் வாழத் தயாராக இருக்கிறோம். அனாலும் மீண்டும் மீண்டும் தமிழர்களுக்கு அநீதிகளே இழைக்கப்படுகின்றன. 
 
இவர்களால் மேற்கொள்ளப்படும் அநியாயங்களை சரியாகச் சீர்தூக்கிப் பார்க்காத வரையில் இந்த அநியாயங்கள் நிற்கப் போவதில்லை.அதற்காக நாம் அனைவரும் ஒற்றுமையாக தேசத்தடன் அங்கீகாரம் பெறப் போராடுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment