Translate

Thursday, 16 August 2012

வடக்கு, கிழக்கு தமிழர் பிரச்சினை தமிழர் பிரச்சினை நாடாளுமன்றில் முழுநாள் விவாதம்

வடக்கு, கிழக்கு தமிழர் பிரச்சினை தமிழர் பிரச்சினை நாடாளுமன்றில் முழுநாள் விவாதம்
22ஆம் திகதி நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம்
news

இராணுவ ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட அடிப்படையில் அரங்கேறும் சிங்களக் குடியேற்றங்கள், ஸ்தம்பிதமடைந்துள்ள மீள் குடியேற்ற நடவடிக்கை உட்பட வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகத்தில் அண்மைக்காலமாகத் தலைதூக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் 22ஆம் திகதி புதன்கிழமை நாடாளுமன்றில் முழுநாள் விவாதமொன்று நடைபெறவுள்ளது.
 
வடக்கு, கிழக்கில் தற்போது நிலவும் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டும் பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுவருகின்றது. கடந்த நாடாளுமன்ற அமர்வுகளின்போது நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இது விடயம் தொடர்பில் ஆராயப்பட்டு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
 
இனப்பரம்பல் விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்கில் இலங்கை அரசு வடக்கு, கிழக்கில் அரங்கேற்றிவரும் குடியேற்ற நடவடிக்கைகள் அசுர வேகத்தில் அதிகரிக் கத் தொடங்கியுள்ளன. அத்துடன், சிவில் நடவடிக்கையில் இராணுவத்தின் தலையீடு அதிகரித்துள்ளது. இந்நிலையிலேயே இவற்றைச் சுட்டிக்காட்டும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்படி பிரேரணையை நாடாளுமன்றில் கொண்டு வரவுள்ளது.
 
அதேவேளை, காணாமல் போனோர் தொடர்பில் அரசு பதிலளிக்க வேண்டும்; மீள்குடியேற்றத்தைப் பூரணப்படுத்தவேண்டும்; தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தவேண்டும் ஆகிய விடயங்களைச் செய்யுமாறு நல்லிணக்க ஆணைக்குழு சிபார்சுகளை முன்மொழிந்துள்ள போதிலும், அவற்றைச் செய்வதற்கு அரசு காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்ற விடயத்தையும் இவ்விவாதத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டவுள்ளது என அறியமுடிகின்றது.
 
அத்துடன், புதிதாக வடக்கு, கிழக்கில் அமைக்கப்பட்டுவரும் இராணுவ முகாம்கள், மந்தகதியில் இடம்பெற்றுவரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் அதிலுள்ள குறைபாடுகள் ஆகியன குறித்தும் கூட்டமைப்பு சபையில் பேசவுள்ளது.
 
எதிர்வரும் 21ஆம் திகதி பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்றம் கூடவுள்ளமை தெரிந்ததே.

No comments:

Post a Comment