Translate

Friday, 3 August 2012

நல்ல சமயம் இது அதனை நழுவவிடுவோமா?

நல்ல சமயம் இது அதனை நழுவவிடுவோமா? 
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சி இருக்கிறது. வாக்காளப் பெருமக்கள் தங்கள் தீர்ப்பை செப்தெம்பர் 08 ஆம் நாள் வழங்க இருக்கிறார்கள். தேர்தல் களத்தில் இருந்து வரும் செய்திகள் இந்தத் தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடக்கும் என்ற எதிர்பார்ப்பைத் தகர்ப்பதாக உள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (ததேகூ) வேட்பாளர்கள் அரசு ஆதரவு ஆயுதக் குழுக்களால் அச்சுறுத்தப்படுகிறார்கள். உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகி விட்டார்கள். இப்படியான நெருக்குவாரத்தின் மத்தியிலேயே ததேகூ தேர்தலைச் சந்திக்கிறது!
வட மத்திய மாகாண சபை, சப்புரகாம மாகாண சபை மற்றும் கிழக்கு மாகாணசபைகளின் காலம் முடிய இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது. இருந்தும் அவற்றைக் கலைத்துவிட்டு மகிந்த இராசபக்சே தேர்தலை நடத்துகிறார். என்ன காரணம்? சோழியன் குடுமி சும்மா ஆடாது!
(1) மக்களிடையே ஆளும் கட்சிக்கு ஆதரவு இருக்கிறது அது குறையவில்லை என்பதைப் பன்னாட்டு சமூகத்துக்கு எண்பித்துக் காட்ட மகிந்த இராசபக்சே விரும்புகிறார். தேர்தல் மூலம் பன்னாட்டு சமூகம் எதிர்க்கட்சிகளை ஆதரிப்பதால் பலன் இல்லை என்ற செய்தியையும் இராசபக்சே தெரிவிக்க விரும்புகிறார்.
(2) கிழக்கு மாகாண சபையைக் கைப்பற்றுவதன் மூலம் தமிழர்களும் முஸ்லிம்களும் தனது அரசை ஆதரிக்கிறார்கள் என்பதை இராசபக்சே காட்ட விரும்புகிறார். முக்கியமாக எதிர்வரும் ஒக்தோபர் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள அய்.நா. மனித உரிமை பேரவையின் அமர்வுக்கு முன்னராக தமிழ் - முஸ்லிம் மக்களது ஆதரவு தனது ஆட்சிக்கு இருப்பதை எண்பிக்க விரும்புகிறார்.
இன்னும் ஒரு முக்கிய காரணம் உண்டென்கிறார் திரு இரா. சம்பந்தன். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி பெற்றால் மாகாணசபைகளுக்குப் பகிரப்பட்ட காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை மீளப்பெற்று மத்திய அரசிடம் ஒப்படைத்து விட்டு வடக்குத் தேர்தலை நடத்தும் திட்டம் அரசாங்கத்திடம் இருப்பதாக ஆளும்கட்சி வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளதாகவும் அரசு திட்டம் ஒன்றை வைத்து செயற்படுகிறது என திரு இரா. சம்பந்தன் திருகோணமலையில் நடந்த ததேகூ உறுப்பினர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வில் பங்குகொண்டு உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.
ஹெல உறுமய போன்ற சிங்கள - பவுத்த பேரினவாதிகள் 13 ஆவது சட்ட திருத்தம் யாப்பிலிருந்து நீக்க வேண்டும் எனக் குரல் கொடுத்து வருகிறார்கள்.
நாட்டின் சகல முக்கிய அரசியல் கட்சிகளும் தனித்தனியாக கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் களம் இறங்கியுள்ள நிலையில், அங்கு மாகாண சபைத் தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் இடம்பெற வாய்ப்பு அருகிக் காணப்படுகிறது.
2008 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ததேகூ கிழக்கில் முற்றாகக் காலடி எடுத்து வைக்க முடியாத அரசியல் மற்றும் போர்ச் சூழல் இருந்தது. தமிழ் வாக்காளர்கள் ஆயுத முனையில் வாக்களிக்கப் பயமுறுத்தப் பட்டார்கள். இன்றும் அதே நிலமை கிழக்கு மாகாணத்தில் தொடர்கிறது.
ததேகூ தமது வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் ஆளும் கட்சி ஆதரவாளர்களால் மிரட்டப்படுகிறார்கள். இரண்டு ததேகூ வேட்பாளர்கள் உயிர் அச்சம் காரணமாகப் போட்டியில் இருந்து விலகியுள்ளார்கள். மட்டக்களப்பில் ததேகூ இன் முதன்மை வேட்பாளர் ஒருவரின் வீட்டு வாயிற் கதவுகளைப் சங்கிலியால் பிணைத்துப் பூட்டுப்போட்டு ஆளும் கட்சியினர் அடாவடித்தனம் புரிந்துள்ளார்கள்.
மட்டக்களப்பு மாவட்ட ஆளும் அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த துணை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தேர்தல் சட்ட விதிகளை மீறிச் செயற்படுவதாக ததேகூ வேட்பாளர் பிரசன்னா இந்திரகுமார் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பாடுகளை அடுத்து கிழக்கு மாகாண அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களை மீளப்பெறுமாறு, காவல்துறை மா அதிபருக்குத் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய எழுத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் நடைபெறும் காலத்தில் அனைத்து அரசியல்கட்சிகளும் தங்களிடம் உள்ள ஆயுதங்களை காவல்துறையிடம் ஒப்படைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையாளரின் வேண்டுகோள் எவ்வளவு தூரம் அம்பலம் ஏறும் என்பது கேள்விக் குறியாக இருக்கிறது. கடந்த கால பட்டறிவின் பின்புலத்தில் பார்க்கும் போது ஒட்டுக்குழுக்கள் தங்கள் ஆயுதங்களை காவல்துறையிடம் ஒப்படைப்பார்கள் என்பது நடக்கிற காரியமாகத் தெரியவில்லை. காரணம் ஆளும் கட்சியே இவ்வாறான ஆயுத கலாசாரத்தை ஊக்குவிக்கிறது.
செப்டம்பர் 08 இல் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல்கள் மக்களாட்சி முறைமைக்கு ஏற்ப நடைபெறும் என நம்புவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சுதந்திரமானதும் நீதியானதுமான முறையில் தேர்தல்கள் நடத்தப்படும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்கத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
நியாயமானதும், வெளிப்படையானதுமான தேர்தல் பொறிமுறைமையின் கீழ் மாகாணசபைகளுக்கான தலைவர்களை தெரிவு செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் காத்திரமான முறையில் தேர்தல் நடத்தப்படும் என நம்புவதாக அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் விரும்பம் கடந்த காலத்தில் ஆட்சியாளர்களால் உதாசீனம் செய்யப்படுவதே வரலாறாக இருந்து வருகிறது. அமெரிக்காவின் விருப்பம்மட்டுமல்ல ஏனைய நாடுகள், மனிதவுரிமை அமைப்புக்களது விருப்பங்களும் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது.
எது எப்படி இருப்பினும் ஒரு சுதந்திரமான நேர்மையான தேர்தல் இடம்பெறுவதை மகிந்த அரசு விரும்பாது. அப்படியொரு தேர்தல் நடைபெற்றால் தோல்வி ஏற்படும் என்பது மகிந்த இராசபக்சேக்குத் தெரியும். 09-09-2010 இல் அரசியல் யாப்புக்கான 18 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அப்போது சுதந்திர ஆணைக்குழுக்களை நியமிப்பதற்கு இருந்த தடைகளை நீக்கி அத்தகைய ஆணைக் குழுக்களை நியமிப்பதை விரைவுபடுத்தும் நோக்கிலேயே 18 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவதாக அரசு தெரிவித்தது. ஆயினும் அரசமைப்புக்கான 18 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு தற்போது இரண்டு ஆண்டுகள் கழிந்து விட்டன. 18 ஆவது சட்ட திருத்தத்தின் கீழ் சனாதிபதி இராசபக்சே ஒரு தேர்தல் ஆணையத்தை நியமித்திருக்க வேண்டும். ஆனால் அதனை அவர் வேண்டும் என்றே நியமிக்காது விட்டுவிட்டார்.
மகிந்த இராசபக்சே மக்களாட்சி முறைமையில் நம்பிக்கை அற்றவர். அதனால்தான் 18 ஆவது சட்ட திருத்தத்தின் மூலம் 17 ஆவது சட்ட திருத்தத்தை செல்லாக் காசாக்கி விட்டார்.
இந்தத் தேர்தலில் மக்களுக்கு இருக்கிற ஒரே பலம் அவர்களிடம் இருக்கும் வாக்குப் பலந்தான் என ததேகூ இன் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். இந்த வாக்குப் பலத்தைப் பலத்த நெருக்குவாரத்துக்கும் அடக்குமுறைக்கும் மத்தியில் நாடாளுமன்றத் தேர்தலிலும் உள்ளாட்சி தேர்தல்களிலும் தூரநோக்கோடும் துணிச்சலோடும் தமிழ்மக்கள் வாக்களித்து பெரும்பான்மைத் தமிழ்மக்களைப் பிரதிநித்துவப்படுத்தும் கட்சி ததேகூ என பன்னாட்டு சமூகத்துக்கு எண்பித்துள்ளார்கள்.
�ஏமாற்று அரசியல் நடத்துபவர்களுக்கு வாக்களிக்கப் போகிறீர்களா? அல்லது உரிமைக்காக அறவழியில் போராடுபவர்களுக்கு வாக்களிக்கப் போகிறீர்களா? அதற்கான நேரம் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. எமது போராட்டத்தின் இலக்கு ஒன்றுபட்ட இலங்கையில் சுயநிருணய அடிப்படையில் தன்னாட்சி உரிமையை வென்றெடுப்பது. அதற்காக தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளை ஆயுதமாக்க வேண்டும்� என ததேகூ தலைவர் இரா. சம்பந்தன் தேர்தல் கூட்டங்களில் சொல்லி வருகிறார்.
கிழக்கு மாகாண ஆட்சியை மீண்டும் கைப்பற்ற மகிந்த இராசபக்சே பகீரதப் பிரயத்தனம் செய்வார் என்பது சொல்லாமலே விளங்கும்.
முன்னர் நடந்து முடிந்த தேர்தல்களைப் போலவே கொடுப்பதைக் கொடுத்து காட்டுவதைக் காட்டி ஆளும் கட்சி வாக்குகளை வாங்க முயற்சி செய்யும். அதற்காக அரச வளங்கள், ஆள் அம்பு அத்தனையும் பயன்படுத்தப்படும் என்பது உறுதி. பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படும். சில சாலைகள், தெருக்கள் செம்மைப்படுத்தப்படும். சிலர் மீள்குடியமர்த்தப்படுவர். சிலருக்கு பதவிகள் வழங்கப்படும். மிஞ்சினால் வாக்காளகர்கள் மிரட்டப்படுவார்கள்.
கிழக்கில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படுகிறது. ஒரு நாளும் இல்லாத திருநாளாக இப்போது ஏன் இந்த நியமனங்கள் வழங்கப்படுகிறது என்று கேட்டால் "பட்டதாரிகள் நியமனத்துக்கும் தேர்தலுக்கும் தொடர்பில்லை. தற்பொழுது வழங்கப்படும் பட்டதாரிகள் நியமனங்களானது தேர்தலுக்காக வழங்கப்படும் நியமனம் அல்ல. வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் 15 ஆயிரம் பட்டதாரிகளை நியமிப்பதற்கு அரசு ஏற்கனவே அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்திலும் அறிவித்து அனுமதிபெற்றுள்ளது" என்று அமைச்சரும் அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளரும் ஆன சுசில் பிரேமஜயந்த நியாயப்படுத்துகிறார்.
அமைச்சர் உண்மையைக் கூற மறுத்தாலும் இந்தத் தேர்தல் காரணமாக சிலருக்கு ஆசிரிய நியமனங்கள் கிடைத்தால் அது விரும்பி வரவேற்கத்தக்கதே.
இந்தத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நடக்கிறது. தமிழ்வாக்காளர்கள் சிந்தாமல் சிதறாமல் தங்கள் வாக்குகளை ததேகூ நிறுத்தியுள்ள வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் ததேகூ மாகாணசபையில் பெரும்பான்மைக் கட்சியாக வருவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.
கிழக்கு மாகாண சபையைக் கைப்பற்றினால் வட - கிழக்கு இணைப்புக்கு வழி கோலும். அப்படியான ஒரு நிலமை எழுவதை மகிந்த இராசபக்சே விரும்பமாட்டார். கிழக்கு மாகாண சபையைக் கைப்பற்றி அந்த சபையின் ஒத்துழைப்போடு இப்போது காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களைப் பறிப்பதே அவரது திட்டமாகும்.
மகிந்த இராசபக்சே தமிழின விபீடணர்களையும் காக்கைவன்னியர்களையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு தமிழர்களது காணிகளை அபகரித்துக் கொண்டிருக்கிறார். அதில் சிங்களவர்கள் குடியமர்த்தப்படுகிறார்கள். சிங்கள இராணுவத்தினருக்கு சகல வசதிகளுடன் கூடிய ஆயிரண்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்காக திருமுருகண்டியில் 4,000 ஏக்கர் நிலத்தை இராணுவம் அபகரித்துள்ளது. சிங்கள இராணுவத்தினருக்கு 50,000 வீடுகள் கட்டிக் கொடுப்படும் என மகிந்த இராசபக்சே அறிவித்துள்ளார்.
வட - கிழக்கில் பசில் இராசபக்சே, நாமல் இராசபக்சே மற்றும் கோத்தபாய இராசபக்சே பல ஏக்கர் காணிகளை அபகரித்துள்ளார்கள். அவற்றில் உல்லாச விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.
அதே சமயம் சம்பூர் போன்ற கிராமங்களில் வாழ்ந்த 7,000 க்கும் அதிகமான மக்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு தொடக்கம் வீடுவாசல்களை இழந்து தெருவோரங்களில் தறப்பாள் கொட்டில்களில் எதிலிகளாக வாழ்கிறார்கள். சம்பூரில் 10,000 ஏக்கர் காணியை இராணுவம் உயர்பாதுகாப்பு வலயமாக அறிவித்துள்ளது.
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை மத்திய அரசுக்கு கையளிக்க சந்திரகாந்தன் தரப்பினர் கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தமிழ் வாக்காளர்கள் எளிதில் மறந்து விட மாட்டார்கள் என்பது திண்ணம். தங்களது சொந்த பதவி சுகத்துக்காக இந்த காக்கைவன்னியர்கள் தமிழினத்தை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்கத் தயங்க மாட்டார்கள் என்பதையே அந்தத் தீர்மானம் காட்டுகிறது.
அந்தத் தீர்மானம் எமது வரலாற்றியல் இன்னொரு கறைபடிந்த அத்தியாயமாகும். தமிழ்த் தலைவர்கள் பட்டம் பதவிகளுக்கு விலை போவார்கள் என்பற்கு எடுத்துக்காட்டாகும்.
அதே சமயம் சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வட மத்திய மாகாணம் காணி அதிகாரத்தை கையளிக்க முடியாது என தீர்மானம் நிறைவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே சொந்த நலன்களுக்காக இனத்தைக் காட்டிக் கொடுப்பவர்களை வீட்டுக்கு அனுப்ப தேசியத்தை நேசிக்கும் தமிழ்மக்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்புக் கிடைத்துள்ளது.
ததேகூ பொறுத்தவரை இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் வேட்கைகளை உள்ளடக்கியதும் தங்களது சொந்த மண்ணில் தங்களைத் தாங்களே ஆளக் கூடியதுமான ஒரு நிரந்தரமான, நியாயமான, நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வைக் காணவேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளது. அதனை ததேகூ தலைவர் திரு இரா. சம்பந்தன் உறுதிபடக் கூறியுள்ளார்.
மனிதவளம், பொருள் வளம் என வரும்போது ததேகூ ஆளும் கட்சியோடு போட்டி போட முடியாது. ஆளும் கட்சிக்கு பணத்துக்கோ ஆள் பலத்துக்கோ பஞ்சம் இல்லை. எனவே புலம்பெயர் தமிழர்கள்தான் ததேகூ இன் கைகளைப் பலப்படுத்த முன்வரவேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்து ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும் தனிப் பெரும் கட்சியாக ததேகூ வருவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. நான்குமுனைப் போட்டியில் வாக்குகள் பிரியும் போது ததேகூ ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்று மேலதிகமாக வழங்கப்படும் இரண்டு இருக்கைகளையும் கைப்பற்றலாம்.
"கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக நாம் மாத்திரமல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மாறியுள்ளது. எனவே, கிழக்கில் கூட்டமைப்பினர் அதிக ஆசனங்களைக் கைப்பற்றினால்......அவர்களுக்கு வழிவிட்டு செயற்பட நாம் தயாராகவுள்ளோம்" என்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தேர்தலின் பின்னர் ததேகூ முஸ்லிம் காங்கிரசோடு இணைந்து ஆட்சி அமைக்க வழிவகுத்துள்ளது.
தமிழ்மக்கள் கிடைககிற வாய்ப்புகளை சரிவரப் பயன்படுத்த வேண்டும். கிழக்கு மாகாணத் தேர்தல் அப்படியான ஒரு வாய்ப்புக்கு வழி வகுத்துள்ளது. தமிழ்மக்கள், குறிப்பாக புலம்பெயர் தமிழ் மக்கள், அந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நல்ல சமயம் இது அதனை நழுவவிடுவோமா?
-நக்கீரன்-

No comments:

Post a Comment