Translate

Friday 17 August 2012

வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு வலுச்சேர்க்கும் முயற்சிகள் தொடர்கின்றன – சிறிலங்கா அதிபர் எச்சரிக்கை

வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தனிநாட்டுத் தீர்மானத்துக்குப் பலம் சேர்க்கும் நடவடிக்கைகள், இப்போதும் இடம்பெற்று வருவதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குருவிட்டவில் நேற்று நடைபெற்ற சிறிலங்கா இராணுவத்தின் கெமுனுவோச் படைப்பிரிவின் நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 


“இப்போது வடக்கில் 80 வீத இயல்புநிலை உருவாக்கப்பட்டுள்ளது. 

போரின் போதும் அதற்குப் பின்னருமான படையினரின் சேவை மிகவும் கடினமானது. 

பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது என்று எமது செயற்பாடுகளை நாம் நிறுத்திவிட முடியாது. 

நாட்டின் பாதுகாப்புக்காக இன்னும் பலவற்றை நாம் செய்ய வேண்டியுள்ளது. 

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வட்டுக்கோட்டையில் தனிநாடு கோரும் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. 

அதேபோல, இரு நாட்களுக்கு முன்னரும் அதற்குத் துணை போகின்ற மாநாடு நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

இந்தத் தீர்மானங்களின் பின்னணியில் என்ன இருக்கிறது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

தனிநாடே அதன் இலக்கு. நாட்டில் உள்ள அனைவரும் இதனைத் தெரிந்து கொள்ள வேண்டும். 

எம்மிடையே உள்ள ஒற்றுமையையும் நம்பிக்கையையும் சீர்குலைக்கின்ற செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. ஈழம்வாதிகளின் தந்திரமான செயல்கள் இவை. 

தாம் பிறந்த தாய்நாட்டை விமர்சிக்க பலர் தம்மைப் பழக்கிக் கொண்டுள்ளனர். 

கடந்த காலங்களில் ஈழத்தை ஆதரித்த ஒரு கட்சித் தலைவரும் கூட, இந்த மாநாட்டில் இந்தியாவை விமர்சித்தார். 

இலங்கையில் ஈழம் அமைக்க நினைத்த அவர்கள், அவரது பேச்சை தொடரவிடாமல் இடைநிறுத்தினர். இதுதான் உலகின் இன்றைய நிலை. 

வேறு நாடுகளில் ஈழம் உருவாக்கப்பட்டால் பரவாயில்லை, தமது நாட்டில் ஈழம் உருவாவதை எவரும் விரும்பவில்லை என்பதே இதன் மூலம் தெரியவருகிறது. 

நாட்டை நேசிப்பவர்கள் தமது நாட்டைப் பற்றி பிற நாடுகளில் விமர்சிப்பதற்கு எவருக்கும் இடமளிக்கக் கூடாது. 

ஈழம்வாதிகள் எதிர்பார்ப்பதை நாமே செய்து கொடுக்கக் கூடாது. 

சிறிலங்கா படையினரைப் போலவே, முழு நாட்டு மக்களும் இதனை உணர்ந்து செயற்பட வேண்டும். 

உலகின் கவனத்தையே திருப்பிய படையினர் எம்மிடம் உள்ளனர். 

அவர்கள் பயிற்சிகளைப் போன்றே அறிவிலும் முதிர்ச்சி பெற்றவர்கள். 

போர்க்காலத்தைப் போலவே, எதிர்காலத்திலும் அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் சிறிலங்கா அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment