Translate

Friday, 7 September 2012

தமிழ் மக்கள் ரிஎன்ஏக்கு வாக்களிப்பதைவிட வேறென்ன தெரிவாக இருக்கமுடியும்: த சோதிலிங்கம்


உரிமைப்போருக்கான போராட்டத்தின் இராணுவ நடவடிக்கைகள் முடிவுற்று 3 வருடங்களாகியுள்ள நிலையிலும் இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் இன்னமும் இல்லை, தமிழர்களின் அரசியல் உரிமைகள் என்ற பேச்சைத் தொடங்கினாலேயே தேசத்துரோகி என்றும் கழுகு மரத்தில் ஏற்ற வேண்டும் என்றெல்லாம் தமிழ் விரோத கருத்துக்களை பாராளுமன்றத்திலேயே முன்வைக்க முடியும், ஆனால் அடிப்படையான தமிழர் நிலைமைகள் பற்றி பேச முடியாதபடியான சூழ்நிலைமைகளும் அதைசுற்றி தமிழ், முஸ்லீம் மக்களுக்கு எதிரான இனவாத பகைமை காட்டும் பயங்கரவாதத்தினை அரசில் அங்கம் வகிக்கும் இனவாத கட்சிகளும், இனவாத காவலிகளும் நடாத்துகின்றனர், இவற்றிக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை மாறாக அவர்கள் தப்பித்து போகும் நிலைமைகளையே அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.இதற்கான நல்ல உதாரணமாக இருப்பது தம்புள்ளை, அநுராதபுரம் சம்பவங்களாகும். இரு இடங்களிலும் இஸ்லாமிய வணக்கத்தலங்கள் தாக்கப்படும்போது அவை தாக்கப்படாமல் பாதுகாக்க வேண்டிய பொலீசாரும் இராணுவத்தினரும் அவற்றை அழிப்பவர்களை தமது கண்முன்னே பார்த்துக்கொண்டு பேசாமல் இருந்தமையாகும்.இலங்கையின் தமிழன வரலாற்றில் நடைபெற்ற அத்தனை இனவழிப்பு நடவடிக்கைகளிலும் இந்த இராணுவத்தினரும் பொலீசாரும் இதே போன்று தமிழர்கள் கொல்ப்பட்டபோதும் தமிழ் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்ட போதும் பார்த்துக்கொண்டிருந்தார்கள், தாமும் இணைந்து கொலை, கற்பழிப்பில் ஈடுபட்டனர் இன்று வரையில் மாறி மாறி 5 தடவைகள் ஆட்சிக்கு வந்த எந்த அரசும், எந்த தலைவர்களும் விசாரணைகளை முன்னெடுக்க விரும்பவில்லை ஏன்?இவர்கள் இலங்கையில் தமிழ் மக்களுக்கு உரிமைகள் பாதுகாப்பு விடயங்களில் என்ன உத்தரவாத்தினை தரமுடியும் என்பதே தமிழர்களின் கேள்ளியும், சிந்தனையமாகும்.மாறிமாறி ஆட்சிக்கு வரும் தலைவர்களிடம் நாம் மீண்டும் மீண்டும் கேட்போம்! நியாயம் கேட்போம்! இது இன்றய தலைமுறையின் தாரக மந்திரமாகிவிட்டது.வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகப்பிரதேசம் என்ற திம்பு கோட்பாட்டினை ஆதரித்த இலங்கை அரசாங்கம் இன்று அதையே எதிர்த்தும், அதற்கு எதிராகவும் இயங்குகின்றது. இலங்கையில் குறிப்பாக தமிழர்களின் பிரதேச பிரதிநிதித்துவத்தினை இழந்துவிட வேண்டும் என்பதில் அக்கறையாகவே அரசு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இலங்கையின் வடக்கு பிரதேசத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் தமிழர்களின் பலம் நிலைகுலைக்கப்படும் வரையில் தேர்தலை நடாத்தமைக்கான காரணங்களும், தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அழிப்பதற்கான திட்டங்களில் ஒன்றாகவே பௌத்த மேலாதிக்க அரசு செயற்படுகின்றது.இலங்கையில் ஆட்சிக்கு வரும் அரசு சிறுபான்மையினரின் பொருளாதார மேம்பாட்டில் அக்கறையற்றும் சிறுபான்மையினர் இலங்கை மக்கள் என்ற நினைப்பின்றியுமே அரசாட்சி நடைபெற்று வந்துள்ளது, இதன் காரணங்களினாலேயே இலங்கையில் சிங்கள மேலாதிக்க அரசுக்கு எதிரான போராட்டம் உக்கிரமடைந்திருந்தது, தன் எந்த அனுபவங்களையும் அரசு கருத்தில் கொண்டதாக இல்லை, இனிமேலும் கருத்தில் கொள்ளுமா? என்ற சந்தேகமே தமிழ் பேசும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.இலங்கையில் இனிமேல் ஆட்சிக்கு வரும் எந்த பெரும்பான்மையினரும் இலங்கையில் உள்ள இனங்களிடையே ஜக்கியத்தை வளர்த்து இலங்கையர்கள் என்ற பொதுவான உணர்வுடன் இயங்குவார்களா? என்ற சந்தேகம் கடந்த 30 வருட போராடத்தின் பின்னரும் உணர்ந்ததாக இல்லை.


இந்நிலையில் இலங்கையில் கிழக்கு மாகாணத்திற்கான தேர்தலை மட்டும் இலங்கை அரசு நடாத்துகின்றது. கிழக்கு மாகாணத்தில் மூன்று பிரிவினராக இலங்கை மக்கள் மாகாண சபைத்தேர்தலில் வாக்களிக்க உள்ளனர், தமிழ் பேசும் முஸ்லீம்களில் மிகவும் பெரும்பான்மையினர் முஸ்லீம் கட்சிக்கும் சிங்கள மக்களில் பெரும்பாலும் முழுவதுமாக சிங்கள அரசு சார்பு கட்சிக்கும், தமிழ் மக்களில் பெரும்பான்மையினர்கள் தமிழ் தேசிய முன்னணிக்கும் மீதிப்பேர் அரசுடன் கூட்டு சேர்ந்துள்ள மக்கள் புலிகளின் பிரதிநிதிகளுக்கும் வாக்களிப்பார்கள்.இறுதி யுத்தகாலத்தில் நடைபெற்ற தமிழ் மக்கள் மீதான இனவழிப்பு நடவடிக்கைகளும் மனித உரிமைமீறல்களும் தமிழ் மக்களின் அழியா நினைவுகளாகி விட்டன, இவற்றினை கடந்து தமிழ் மக்களை தமக்கு வாக்களியுங்கள் என்று இலங்கை அரசும் அதன் துணை அரசியல் கட்சியுமான தமிழ் மக்கள் புலிகளின் கோரிக்கைகயை தமிழ் மக்கள் நிராகரிப்பார்கள் என்றே பலரும் அபிப்பிராயப்படுகின்றார்கள், ஒரு பகுதி தமிழ் மக்கள் புலிகளுக்கு ஆதரவுள்ள போதிலும் இனவாத அரசினால் நடாத்தப்பட்ட இனப்படுகொலைகளுக்கும் தமது சமூகத்தில் பெருந்தொகையானோர் இன்னமும் சிறைச்சாலைகளில் இருந்து விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்தும் தடுத்து வைத்திருந்தும், தொடரும் இராணுவ புலனாய்வுத்துறையினரின் கெடுபிடிகளும் தமிழ் மக்களை சொல்லொணா துயரத்தில் வைத்திருக்கின்றது. இந்நிலையில் தமிழ் மக்கள் அரசுக்கு எதிராகவே வாக்களித்து தமது எதிர்ப்பை அரசுக்கு தெரிவிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.கிழக்கு மாகாணம் திருகோணமலை நகரப் பகுதிகளில், ஊர்தி, பவனி வடிவிலான பரப்புரையில் இளைஞர்கள் பலர் ஈடுபட்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பல்கலைக்கழக மாணவன் ஜனார்த்தனனை ஆதரித்து, தமிழ் மக்கள் அனைவரும் தவறாது வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பரப்புரைகள் இடம்பெற்றன, நடைபெற்ற பரப்புரையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கதேயாகும்.திருகோணமலையில் தமிழ் இளைஞர்கள் அரசியலின் அக்கறை காட்டியிருந்ததும் இதன் காரணமாக போராட்ட காலங்களில் திருகோணமலையில் ஊர்வலமாக சென்ற பாடசாலை மாணவர்கள் அரசின் உளவுப்படையினரால் கொல்லப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது, இதற்கான நீதி நியாயம் பற்றி இன்னமும் அரசு வாய்திறக்காது இந்த பிரச்சினை இன்று சர்வதே தளத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது ஞாபகம் இருக்கலாம்.இன்றும் திருகோணமலையில் மாணவர்கள் தமிழ் தேசிய முன்னணிக்கு வாக்குகள் கேட்டு வீடுவீடாக சென்று கொண்டிருக்கின்றனர். திருகோணமலையின் பல பகுதிகளில் இன்றும் உள்ள அகதி முகாம்களில் தமிழ் மக்கள் இருப்பது அரசின் தமிழ் மக்கள் மீதான கொடுமைகளில் ஒன்றாகவே பாரக்கப்படுகின்றது, இச் செயற்பாடுகள் திருகோணமலையில் தமிழ் மக்கள் அரசுக்கு எதிராக வாக்களிக்கவே செய்யும் எனவும் நம்பப்படுகின்றது.சிங்களப் பேரினவாதத்தின் கபட நோக்கத்தை வீழ்த்த ஒவ்வொரு வாக்கும் ஆயுதமாகட்டும். இதுவே இன்றைய கிழக்குமாகாணத்தின் தேர்தல் அறைகூவலாகும், கிழக்கு மாகாணசபைத் தேரத்தலில் கிழக்கின் வரலாற்றில் STFன் அட்டுழியங்கள் தொடக்கம் இராணுவத்தின் காடைத்தனங்கள், இராணுவத்தில் ஊர்காவற்துறையினரின் கற்பழிப்பு, கொலை, இனப்படுகொலைகள் மக்கள் முன் மனதில் நிற்கும், இந்த நினைப்பின் பிரதிபலிப்பாக இந்த தேர்தல் வாக்களிப்பு நடைபெறும் என்றும் கருதப்படுகின்றது.
இந்த நினைப்பிலிருந்து தமிழ்மக்களை என்றுமே மீட்டெடுக்க முடியாது என்பதை இலங்கை அரசு உணரும் காலம் வரும் என்றே பலரும் எதிர்பாரத்து காத்திருக்கிறார்கள்.அனைத்துலக சமூகம் ஒருபுறம், மனித உரிமை மீறல்கள் குறித்த அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் அரசசார்பற்ற அமைப்புக்களின் கடுமையான தொடர் கண்டனங்கள் அழுத்தங்கள் ஒருபுறம், புலம் பெயர்ந்து வாழும் தமிழ்சமூகத்தின் தொடர் போராட்டங்கள் ஒருபுறம், இப்படியாக சிறீலங்கா அரசு மனித உரிமைகள் விடய நெருக்கடிகளில் சிக்கியிருக்கும் இத்தருணத்தில் இத்தேர்தல் நடத்தப்படுகின்றது.இத்தேர்தலில் தனக்குச் சாதகமான பெறுபேறை அடைவதன் மூலம் அனைத்துலக சமூகத்தின் கடும்போக்கில் தளர்வை ஏற்படுத்தமுடியும் என சிங்கள அரசு கருதுகின்றது, போர்க்குற்றங்கள் குறித்த, அனைத்துலகத்தின் நிலைப்பாடுகளை பலம் இழக்கச் செய்ய இத்தேர்தலை பயன்படுத்த அரசு திட்டமிட்டு தேர்தலை நடாத்துகின்றது, ஆனால் இந்த தேர்தலும் அரசுக்கு பெரும் தலையிடியை கொடுக்கும் தேர்தலாகவே அமையும் என நம்பப்படுகின்றது.தமிழ் மக்கள் தம்மோடு நிற்கின்றார்கள் என்ற செய்தியை இத்தேர்தல் வெளிப்படுத்துவதன் மூலம், தாயக கோட்பாட்டை சிதைத்து விடலாம் என்றும் அரசியல் தீர்வு அவசியமில்லை என்று உலகிற்க்கும்,இந்தியாவிற்க்கும் தெரியப்படுத்தவுமே இந்த தேர்தலை அரசு நடாத்துகின்றது என்ற எண்ணப்பாட்டுடனேயே தமிழ் மக்கள் தேர்தலை எதிர்கொள்கிறார்கள்.தமிழர் தாயகத்தைத் இரண்டாக பிரித்து தனது பிடியில் தமிழர்களின் பிரதேச ஒருமைப்பாட்டை தமிழர்களின் மனங்களிலிருந்து அகற்றிவிட அரசு இந்த மாகாண சபை தேர்தலில் வெற்றியை எதிர்பார்த்து தேர்தலை எதிர்கொள்கின்றது என்பதை தமிழ் மக்கள் மனதில் கொள்ள வேண்டும். சிங்களஅரசு, தனது திட்டத்திற்கு பலம் சேர்க்க இத்தேர்தல் வெற்றியை எதிர்பார்க்கின்றது.இந்த நாட்டிலே சிங்கள சமூகம் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் என்பதை மதிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம், மதித்தும் வருகின்றோம் அதேபோன்று தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதை எவரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது, ஆனால் அரசில் உள்ளவர்களில் பலர் இதனை உணர்வதாக இல்லை,ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கிழக்கின் பல இடங்களிலும் எவரும் ஏற்றுக்கொள்ள முடியாத அசம்பாவிதங்கள் நடந்திருக்கின்றன என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டு இரு சமூகங்களையும் பிரித்து வைப்பதற்கு முயற்சிகளை தவிர்த்து முஸ்லிம், தமிழ் மக்கள் இந்த தேர்தலை ஏதிர்கொண்டு தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு முயற்சி எடுக்க வேண்டும், இல்லையேல் தமிழ் முஸ்லிம் மக்கள் பல இழப்புகளைச் சந்திக்க நேரிடும்.


சிறீலங்காத் தேர்தல்களை, அரசியல் இராஜதந்திரச் செயற்பாடுகளுக்காக தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்து தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை கலைப்பதற்காகவே அரசு பல சுயேட்சைகளை பணம் கொடுத்து நிறுத்தியுள்ளது, இவற்றிலிருந்தும் அரசு பாடம் படிக்கும் என்றே பலரும் நம்புகின்றனர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி ஒன்றின் மூலமே தமிழ் இஸ்லாமிய மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்ப இலங்கையில் உரிமைப் போராட்டத்தை இணைந்து தொடரமுடியும் என்பதை வலியுறுத்தும் தேர்தலாக இது அமைய வேண்டும் என பலரும் கருதுகிறார்கள். 

தமிழ் தாயக தமிழர் உரிமைப்போராட்டத்தின் வரலாற்றினை புலிகளின் வீரம் செறிந்த போராட்டம் உறுதியெழுதிச் சென்றுள்ளதையும் அந்த அத்திவாரத்திலிருந்தும், விமர்சனங்களுடன் தமிழர்கள் தமது அரசியல் உரிமைப் போராட்டத்தை தொடர தேர்தல்ககளில் அரசின் வலைக்குள் விழுந்துவிடாது எதிர்கொள்ள வேண்டும் என்பது பெரும்பான்மையான தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.

No comments:

Post a Comment