Translate

Friday, 7 September 2012

தனிநாடே எமக்கான தீர்வு என்பதை மாகாணசபைத் தேர்தல் மூலம் உலகிற்கு உணர்த்த வேண்டும் – தமிழர் சுயாட்சிக் கழகம்

எமது இனத்திற்கு சிறீலங்கா அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறை, அது தொடர்பான பன்னாட்டுச் சமுகத்தின் நிலைப்பாடு, அரசியல் நிலைமை தொடர்பான சர்வதேசத்தின் பார்வை என்பனவற்றை கருத்தில் கொண்டு கிழக்கு மாகாணத்தில் எமது மக்கள் மீது அக்கறை கொண்டுள்ள உணர்வாளர்கள்,


ஆய்வாளர்கள், கல்வியலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினருடன் நாம் கலந்தாலோசித்ததன் காரணமாக எதிர்வரும் 8 ஆம் நாள் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் எமது கொள்கைக்கு முரணானது என்பதால் கிழக்கு மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டுமென தமிழர் சுயாட்சிக் கழகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிததுள்ளது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் எமது அரசியல் அபிலாசைகளுக்கு அடிப்படையானதொன்றல்ல என்பதைக் கருத்தில் கொண்டு இத்தேர்தலை பொதுமக்கள் எந்தவொரு கட்சிக்கும் வாக்களிக்காமல் எதிர்ப்பைத் தெரிவிப்பதே காலத்தின் தேவையென தாம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும் எனவே மக்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டுமெனவும் தமிழர் சுயாட்சிக் கழகம் அறிவித்துள்ளது.

இன்று மாலை (06.09.12) மட்டக்களப்பில் கூடிய அக்கழகம் கிழக்கு மாகாணசபை தேர்தல் தொடர்பாக நீண்டநேரமாக ஆராய்ந்த பின்னரே இத்தீர்மானத்தை எடுத்துள்ளதுடன் இது தொடர்பாக அறிக்கையொன்றையும் விடுத்துள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ”வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகம் விடுதலை பெற்று சுயாட்சி மிக்க ஒரு தனிநாடாக உருவாக வேண்டும் என்பதே எமது கொள்கையாகும். எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுக்க முடியாத ஒரு அம்மணமான நிலையில் இருக்கும் மாகாணசபை ஆட்சி முறையை ஏற்றுக் கொள்ள முடியாது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து நாம் அதில் போட்டியிடும் தமிழ் கட்சிகள் மற்றும் ஏனைய கட்சிகளின் தேர்தல் பரப்புரைகளை மிக கூர்மையாக அவதானித்து வந்தோம். தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்குரிய இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு எதனையும் அது கொண்டிருக்கவில்லை. அது தொடர்பான கொள்கை விளக்கமும் மக்களுக்குக் கொடுக்கவில்லை. திடமான கொள்கை உறுதியும் அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. இடததிற்கிடம் ஆளுக்காள் விரும்பியவகையில் மக்களுக்கு தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்கும் தமிழ் மக்கள் தம்மோடுதான் உள்ளார்கள எனற அரசியல் செல்வாக்கை இந்திய மற்றும் உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்டவுமே இத்தேர்தலைப் பயன்படுத்துகின்றது.

கிழக்கு மக்கள் மிகவும் நிதானமாக சிந்திக்கவேண்டிய காலமிது. எமது விடுதலைப்போராட்டம் முள்ளிவாய்காலில் இந்திய மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் துணையோடு சிறிலங்கா அரசினால் இன அழிப்புக்கு உள்ளாகி இன்று மௌனீக்கப்பட்ட நிலையில் இருந்தாலும் எமது இலட்சியம் தனிநாடு என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். எம்முடன் புலம்பெயர் உறவுகளும் ஒன்றுபட்டு நிற்கின்றனர்.
எமது இப்போராட்டம் மௌனிக்கப்பட்ட இன்றைய காலகட்டத்தில் எமது கொள்கையை இறுதி வரை கொண்டு செல்ல வேண்டியது எமது பொறுப்பாகும். அதற்காகவே இன்னும் எமது மக்கள் எத்தனை துன்பங்களைத் தாண்டியும் தலைநிமிர்ந்து நிற்கின்றனர்.

இன்றைய சூழ்நிலையில் எமது விடுதலைப்போராட்டத்தின் தாற்பரியத்தையும் எமதினத்தின் விடுதலையையும் உலகம் அறிந்துள்ளது. இதற்குக் காரணம் எமது விடுதலைப்போராட்டத்தின் பரிணாமமும் முள்ளிவாக்காலில் எமது உறவுகளின் உயிரிழப்புமே ஆகும். எனினும் நாம் உலகத்தையோ ஐ.நா போன்ற அமைப்பையோ மாத்திரம் நம்பிவிட முடியாது. நாம் தொடர்ந்து எமதினத்திற்காகப் போராட வேண்டும்.

ஆகவே குறைந்த எந்தவித தீர்வோ அல்லது மட்டமான மாகாணசபை போன்ற தீர்வுக்கோ தமிழ் மக்கள் செல்லத் தயாரில்லை. அதனை ஏற்றுக் கொள்ளவும் முடியாது என்பதை சர்வதேசத்திற்குச் சொல்லும் செய்தியாகவும் தனிநாடே எமது முடிவு என்பதில் உறுதியாக இருக்கின்றோம் என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையிலும் இத்தேர்தலை தமிழ் மக்கள் பயன்படுத்த வேண்டும். எனவே அதற்கான முடிவு மக்களின் கையிலேயே உள்ளது.” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://thaaitamil.com/?p=31441 

No comments:

Post a Comment