Translate

Wednesday 5 September 2012

கிழக்கில் தமிழர்களே பெரும்பான்மை- அதை தக்கவைத்து கொள்வார்களா?


கிழக்கு மாகாணத்தில் மூன்று இனத்தவர்களும் சமமாக வாழ்வதாக அரச தரப்பில் பிரசாரம் செய்யப்பட்டாலும் அங்கு பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் உத்தியோகபூர்வ தகவல்களின் படி தமிழர்களே பெரும்பான்மையாக உள்ளனர்.  
கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழர்கள் ஒருமித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தால் கிழக்கு மாகாணசபையை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றி தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரக் கூடிய வாய்ப்பு இருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் அங்கு பொது அமைப்புக்களால் நடத்தப்பட்ட கருத்துகணிப்பிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பே கிழக்கு மாகாணசபையில் அதிக ஆசனங்களை பெறும் என தெரியவந்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழர்களும் இரண்டாம் நிலையில் முஸ்லீம்களும் மூன்றாம் நிலையில் சிங்களவர்களும் உள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் 4இலட்சத்து 13ஆயிரத்து 505 தமிழ் வாக்காளர்களும், 3இலட்சத்து 82ஆயிரத்து 669 முஸ்லீம் வாக்காளர்களும் 2இலட்சத்து 32ஆயிரத்து 452 சிங்கள வாக்காளர்களும் உள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2இலட்சத்து 55ஆயிரத்து 115 தமிழ்வாக்காளர்களும் 89ஆயிரத்து 635முஸ்லீம் வாக்காளர்களும், 1600 சிங்கள வாக்காளர்களும் உள்ளனர். தமிழர்களின் வாக்காளர் வீதம் 76ஆகும். முஸ்லீம்களின் வாக்காளர் வீதம் 24ஆகும்.
திருகோணமலை மாவட்டத்தில் 88ஆயிரத்து 607 தமிழ் வாக்காளர்களும், 83ஆயிரத்து 684 முஸ்லீம் வாக்காளர்களும், 73ஆயிரத்து 839 சிங்கள வாக்காளர்களும் உள்ளனர்.   அம்பாறை மாவட்டத்தில் 2,09,350 முஸ்லீம் வாக்காளர்களும், 1,57,013 சிங்கள வாக்காளர்களும், 69,783 தமிழ் வாக்காளர்களும் உள்ளனர்.
மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். மட்டக்களப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இலகுவாக வெற்றிபெறும் நிலை காணப்படுகிறது. திருகோணமலையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் கிழக்கு மாகாணசபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் தமிழ் மக்கள் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு வாக்களித்தால் தமிழர்களின் கையை விட்டு கிழக்கு மாகாணம் பறிபோய்விடும் என கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

No comments:

Post a Comment