Translate

Friday, 12 October 2012

“இங்கு நடந்ததைச் சொன்னால் நீயும், உன் கணவரும் கொல்லப்படுவீர்கள்” – ஒரு சாட்சியின் பதிவு


அதனை இங்கு தமிழில் தருகிறோம்;அண்மையில் வெளியிடப்பட்ட ‘மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன’ என்ற நூலில் அதன் ஆசிரியரான பிரான்செஸ் ஹரிசன், சிறிலங்காவிலிருந்து வெளியேறிய பெண்கள் இன்னமும் அச்சத்துடன் வாழ்வது தொடர்பாக விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

சிறிலங்காவிலிருந்து பிரித்தானியாவில் புகலிடம் கோரி தஞ்சம் புகுந்துள்ள கிழக்கு இலண்டனில் வதிகின்ற தமிழ்ப் பெண்மணி ஒருவரைச் சந்தித்து நேர்காணல் ஒன்றை நான் மேற்கொண்டிருந்தேன். சில சட்டவாளர்கள், மதகுருமார்கள் போன்றோரால் இந்த நேர்காணல் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
குறித்த தமிழ்ப் பெண்ணின் உண்மையான பெயரைக் கூட நான் அறியவில்லை. ஆனாலும் நான் இங்கு அவரை மணிமொழி என அழைக்கிறேன். இப்பெண் தனது தாயாரிடமோ அல்லது கணவனிடமோ ஒருபோதும் கூறாத சம்பவம் ஒன்றை எம்மிடம் கூறினார்.
மணிமொழி சிறிலங்காவின் தலைநகரான கொழும்பில் வசித்தார். தமிழ்ப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்திற்கும் இடையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் அகப்பட்டிராத ஒருவர். இவர் யுத்த வலயத்தில் வாழவில்லை.
மே 2010 அதாவது சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் நிறைவுற்று சரியாக ஒரு ஆண்டின் பின்னர், மணிமொழியின் வீட்டுக்கு வந்த சிறிலங்கா காவற்துறையினர் அவரது கணவர் தொடர்பாக விசாரித்தனர். ஆனால் மணிமொழியின் கணவர் அப்போது வேலைக்குச் சென்றிருந்தார். மணிமொழியின் கணவர் தமிழ்ப் புலிகளுடன் தொடர்புபட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை விசாரணை செய்ய வேண்டும் என குறித்த காவற்துறையினர் மணிமொழியிடம் கூறினர்.
இவரது கணவர் இல்லாததால் மணிமொழியை தரதரவென கதறக் கதற இழுத்துக் கொண்டு அங்கிருந்த வான் ஒன்றுக்குள் கொண்டு சென்றனர். மணிமொழியின் 16 மாதக் குழந்தையை அவரது தாயாருடன் விட்டுவிட்டு மணிமொழியை பலாத்காரமாக கொண்டு சென்றனர். காவற்துறையால் கூட்டிச் செல்லப்பட்ட மணிமொழி தாக்கப்பட்டு, சித்திரவதைப்படுத்தப்பட்டார். அன்று நள்ளிரவின் பின் என்ன நடந்ததென்பதை நினைவுபடுத்த அவர் விரும்பவில்லை. சில சந்தேகநபர்களை அடையாளங் காட்டக் கோரி வேறொரு இடத்திற்கு மணிமொழி கூட்டிச்செல்லப்பட்டார். அதன் பின்னர் அந்த இடத்திலிருந்த ஒரு அறையில் அவர் அடைக்கப்பட்டார். அடுத்த அறையில் காவற்துறையினர் குடித்துவிட்டு சிங்களத்தில் பாடுவதை அவரால் கேட்க முடிந்தது.
கதிரை ஒன்றில் கைகள் கட்டப்பட்ட நிலையிலிருந்த மணிமொழியை இரு காவற்துறையினர் பலாத்காரமாக வன்புணர்வுக்கு உட்படுத்தினர். அப்போது மணிமொழி 40 நாள் கர்ப்பிணியாக இருந்தார் என்பது காவற்துறையினருக்குத் தெரியாது. இதனால் மணிமொழிக்கு குருதிப் பெருக்கு ஏற்படத் தொடங்கியது. “இங்கு நடந்ததை யாரிடமாவது கூறினால் உன்னையும் உனது கணவனையும் கொன்றுவிடுவோம். இங்கு எதுவும் இடம்பெறவில்லை. உனக்கு விளங்குகிறதா?” என குறித்த காவற்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
இதன் பின்னர் மணிமொழியை மீண்டும் காவற்துறை நிலையத்துக்கு கொண்டுசென்றனர். அங்கிருந்த சிங்கள காவற்துறைப் பெண்மணி ஒருவர் மணிமொழியின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடையாது, இவரது குருதிப் பெருக்கை துடைப்பதற்காக சுகாதரத் துண்டுகளை வழங்கினார். காவற்துறை நிலையத்திலிருந்த செல் ஒன்றில் மணிமொழி அடைக்கப்பட்டார். அங்கே அவருடன் கூடவிருந்த இரு இளம் பெண்களும் இதுபோன்ற அவலத்தைச் சந்தித்திருந்தனர்.
மணிமொழியின் கணவர் தானாகவே காவற்துறையினரிடம் சரணடைந்த பின்னர், மணிமொழி விடுவிக்கப்பட்டார். பின்னர் இவரது கணவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்.
மணிமொழி இரு தடவைகள் தற்கொலை செய்து கொள்ள முயன்றார். ஆனால் தனது பிள்ளையை பராமரிக்க வேண்டும் ஒரு காரணத்தினால் அந்த முடிவை மாற்றிக் கொண்டார். மணிமொழிக்கு என்ன நடந்திருக்கும் என்பதை அவரது குடும்பத்தவர்கள் ஊகித்தறிந்தனர்.
தமிழ் சமூகத்தவர்கள் பாலியல் வன்புணர்வை மிகத் தீவிரமாக எதிர்ப்பவர்கள். பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட தமிழ்ப் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற அளவுக்கு அவர்களது மனவடு ஆழமாகக் காணப்படும். லண்டனில் வாழும் தமிழ் சமூகம் தன் மீதான பாலியல் வன்புணர்வு தொடர்பாக அறிந்துவிடுமோ என மணிமொழி அச்சப்படுகிறார். ஏனெனில் அவ்வாறு அவர்கள் அறிந்தால் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசிவிடுவார்கள் என மணிமொழி நினைக்கிறார். நான் தனியாக இருந்தால் மட்டுமே தான் சந்தித்த இன்னல்களை விரிவாகக் கூறுவேன் என மணிமொழி அறிவுறுத்தியிருந்தார். பெண் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் கூட என்னுடன் வரக்கூடாது எனவும் மணிமொழி கோரியிருந்தார்.
நான் மணிமொழியைச் சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றிருந்த போது அவரது கணவர் தந்திரமாக அவர்களது பிள்ளையைத் தூக்கிக் கொண்டு இனிப்பு வாங்க செல்வதாகக் கூறி வெளியே சென்றார். ஏனெனில் உண்மையில் மணிமொழியுடன் நான் எதைக் கதைக்கப் போகிறேன் என்பதை அவர் ஊகித்திருந்தார். மணிமொழியிடமிருந்து அவர் சந்தித்த துன்பங்களை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் அவரது கணவரும் ஆதரவாக இருந்தார்.
இது தொடர்பாக தனது கணவரிடம் கூட மணிமொழி ஒருபோதும் கதைத்திருக்கவில்லை. தான் பார்க்கின்ற ஒவ்வொரு ஆண்கள் தொடர்பிலும் அச்சம் கொள்வதாகவும், தனது சொந்தக் கணவர் தன்னைத் தொடுவதைக் கூட தான் விரும்பவில்லை எனவும் மணிமொழி கூறுகிறார்.
மாணவர் நுழைவுவிசைவைப் பயன்படுத்தி மணிமொழியும் அவரது கணவரும் இலண்டன் வருவதற்காக தம்மிடமிருந்த அனைத்து உடமைகளையும் விற்றனர். தற்போது புகலிடக் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் இண்டனில் வசிக்கின்றனர். சிறிலங்கா காவற்துறையினர் தொடர்ச்சியாக மணிமொழியின் வீட்டுக்குச் சென்று தொல்லை கொடுத்து வருவதுடன், மணிமொழியின் கணவரை தம்மால் காண முடியவில்லையே என்ற கோபத்தில் மணிமொழியின் கணவரின் தந்தையாரை மூன்று மாதகாலம் வரை தடுத்து வைத்திருந்தனர்.
2009ல் சிறிலங்காவில் யுத்தம் முடிவடைந்த பின்னர், சிறிலங்காவானது பாதுகாப்பான நாடாக உள்ளதாக அந்நாட்டு அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும் வாதிடுகின்றனர். அரசியற் செயற்பாடு மற்றும் ஆயுதப் போராட்டம் போன்ற பின்னணிகளைக் கொண்டவர்கள் உயிராபத்தை சந்திக்கவேண்டியுள்ளனர். சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் இன்னமும் நிறுத்தப்படவில்லை என்பதையே மணிமொழிக்கு ஏற்பட்ட நிலை எடுத்துக் காட்டுகிறது.
சிறிலங்காவில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், நிர்வாணப்படுத்தப்பட்ட நிலையில் பல பெண்களின் ஒளிப்படங்கள் வெளிவந்தன. அத்துடன் மிகப் பயங்கரமான கானொலிக் காட்சிகளும் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டன. இவ்வாறு சித்திரவதைப்படுத்தப்பட்டவர்கள் புலி உறுப்பினர்கள் எனக் கூறப்பட்டது.
கொல்லப்பட்ட தமிழ்ப் புலிகளின் பெண் உறுப்பினர்களின் உடலங்களை நிர்வாணப்படுத்தி, அவர்களின் மார்பகங்களை காண்பித்து தமது காம வெறியை சிறிலங்கா இராணுவ வீரர்கள் காண்பித்ததை இக்காணொலிகள் சாட்சிப்படுத்துகின்றன. புலிகள் மட்டும் அழிக்கப்படவில்லை. பெண் புலி உறுப்பினர்கள் மட்டும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படவில்லை. மணிமொழி போன்ற சாதாரண தமிழ்ப் பெண்கள், வயது முதிர்ந்த தமிழ்ப் பெண்கள், பெண் பணியாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் மனைவிமார் என பலதரப்பட்டவர்களும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இவர்கள் பிரித்தானியா நோக்கி பயணம் மேற்கொண்டாலும் கூட, பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில் புகலிடக் கோரிக்கையாளர்கள் அனைவரினதும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. பாதிக்கப்பட்டவர்கள், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அதற்கான சான்றுகளைக் கொண்டிருந்தாலும் கூட இவர்களது புகலிடக் கோரிக்கை மறுக்கப்படலாம்.
தம்மால் பரிசீலிக்கப்படும் விண்ணப்பங்களில் மூன்றில் ஒரு பகுதி சிறிலங்காப் பெண்களுடையது என அகதிகள் பேரவையால் மேற்கொள்ளப்பட்ட அண்மைய ஆய்வொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவர்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் புகலிடக் கோரிக்கை மேற்கொண்டு பிரித்தானியா வந்தடைவர்களாவர். ஆனால் இவர்களில் அரைவாசிப் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படுவோர் அவர்களது சொந்த நாட்டில் சித்திரவரைக்கு உள்ளாக்கப்படும் ஆபத்து உள்ளதாக துன்புறுத்தலிலிருந்து விடுவித்தல் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்றவற்றின் அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தப் பெண்கள் நிச்சயமற்ற நிலையில் வாழ்கின்றனர். தாம் மீண்டும் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படுவோமோ என்ற அச்சத்தில் இவர்கள் வாழ்கின்றனர். இவர்கள் தமது மனவடுக்களை சட்டவாளர்கள் மற்றும் குடிவரவு அதிகாரிகளிடம் எடுத்துக் கூறுகின்றனர். ஆனால் தமது குடும்பத்தவர்கள், நண்பர்களிடமிருந்து இதனை மறைக்கின்றனர்.
சில பெண்கள் உள ஆற்றுப்படுத்தல் நிலையங்களுக்குச் செல்வதில் கூட தயக்கம் காண்பிக்கிறார்கள். ஏனெனில் இவ்வாறு செல்லும் போது வேறு தமிழர்கள் யாராவது கண்டால் தாம் அங்கே ஏன் செல்கின்றோம் என்பதை தெரிந்துவிடுவார்கள் என நினைக்கிறார்கள். இது உண்மையில் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையாகவே உள்ளது.

No comments:

Post a Comment