Translate

Friday, 12 October 2012

விடுதலைப் புலிகள் சரணடைவது தொடர்பாக, எந்தவொரு திட்டத்தையும் நோர்வே வழங்கவில்லை: பிரதமர் வி.ருத்ரகுமாரன்


போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் சரணடைவது தொடர்பாக, எழுத்து மூலமான எந்தவொரு திட்டத்தையும் நோர்வே வழங்கவில்லை என்று, நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு, போரில் விடுதலைப் புலிகளின் தோல்வி உறுதியான நிலையில், போரை முறைப்படியாக முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், இணைத்தலைமை நாடுகளின் சார்பில் விடுதலைப் புலிகளை சரணடைய வைக்கும் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டதாக பிபிசிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றில், நோர்வேயின் சமாதானத் தூதுவராக செயற்பட்ட எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டிருந்தார்.
அந்தத் திட்டத்தை விடுதலைப் புலிகளின் தலைமை நிராகரித்து விட்டதாகவும், அதனால் தான் பேரழிவு ஏற்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்து பிபிசிக்கு கருத்து வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.ருத்ரகுமாரன், சொல்ஹெய்மின் கூற்றை நிராகரித்துள்ளார்.
“2009ம் ஆண்டு பெப்ரவரி மாத இறுதியில், கோலாலம்பூரில் அமெரிக்க, நோர்வே அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பில் விடுதலைப் புலிகள் சார்பாக நானும் கலந்து கொண்டேன். அந்தக் கூட்டத்தில், விடுதலைப் புலிகள் சரணடைவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. ஆனால் எழுத்து மூலமாக எந்தத் திட்டமும் முன்வைக்கப்படவில்லை. எனவே அந்த யோசனை நிராகரிக்கப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் ஒரு விரிவான போர்நிறுத்தத்தை கொண்டு வருவது குறித்த, அனைத்துலக மனிதாபிமான, மனிதஉரிமை சட்டங்களுக்கு அமைவான திட்டம் ஒன்று விடுதலைப் புலிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டது. ஆனால், இணைத்தலைமை நாடுகள் அதில் அக்கறை காட்டவில்லை.
சார்க் மாநாட்டை முன்னிட்டு, 2008ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு வாரகால ஒருதலைப்பட்ச போர் நிறுத்தத்தை விடுதலைப் புலிகள் அறிவித்து பின்னர், அதை நிரந்தர போர்நிறுத்த உடன்பாடாக மாற்ற வேண்டும் என்று நோர்வே மற்றும் அமெரிக்காவிடம் கோரியிருந்தனர்.
அதற்கு போரை நிறுத்தும் அளவுக்கு தம்மால் செல்வாக்குச் செலுத்த முடியாதுள்ளதாக அவர்கள் கூறியிருந்தனர். அதற்கு, நாம், இராஜதந்திர அழுத்தங்களின் மூலம் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கூறிய போது, அனைத்துலக சமூகம் அதனைக் கருத்தில் எடுக்கவில்லை.
விடுதலைப் புலிகள் சரணடைந்திருந்தால் இரத்தக்களரியைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்று கூறுவது ஏற்கத்தக்கதல்ல. சிறிலங்கா அரசின் இராணுவ நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கை. விடுதலைப் புலிகள் சரணடைந்திருந்தால் கூட, அதை தவிர்த்திருக்க முடியாது.
சிறிலங்கா அரச படைகள் வன்னியில் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் குண்டு வீசியதும், மருத்துவமனைகளில் குண்டுகளை வீசியதும் இதையே காட்டுகிறது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment