உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த இலங்கை அகதித் தமிழரான செந்தூரன் மீண்டும் ராயப்பேட்டை அரசு வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்கென அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்களை திறந்தவெளி காமுக்கு மாற்றக்கோரி செந்தூரன் கடந்த ஒகஸ்ட் மாதம் 6ம் திகதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்தார்.
இதனால் உடல்நிலை மோசம் அடைந்த அவர் ஒகஸ்ட் 25ம் திகதி சென்னை ராயப்பேட்டை அரசு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, சிகிச்சை முடிந்து பூந்தமல்லி சிறப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதைத் தொடர்ந்து ஒகஸ்ட் 31ம் திகதி, தற்கொலை முயற்சி செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் செப்டெம்பர் 18ம் திகதி பிணையில் வெளியில் வந்து அன்றைய தினமே மீண்டும் உண்ணாவிரதம் இருந்தார்.
இதைத் தொடர்ந்து அவர் மீது மீண்டும் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவரது உடலில் நீர் சத்து குறைந்துள்ளதாக கூறி கடந்த செப்டெம்பர்29ம் திகதி மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து மருத்துவ அதிகாரி ஒருவர் கூறும்போது, "வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அன்று அவர் உணவு எதுவும் உட்கொள்ளவில்லை. பின்னர் செப்டெம்பர் 30ம் திகதி இளநீர் மற்றும் தண்ணீர் குடித்தார். 1ம் திகதி மாலை உப்புமா மற்றும் இட்லி சாப்பிட்டார்´´ என்று கூறினார்.
தற்போது அவர் ராயப்பேட்டை அரசு வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
No comments:
Post a Comment