இந்திய மத்திய அரசு கடந்த போரில் வீடிழந்த ஈழத் தமிழர்களுக்கு 50,000 வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தை சில வருடங்களுக்கு முன்பு அறிமுகஞ் செய்தது. ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்ட நிலையில் ஒரு தொய்வு ஏற்பட்டது. திட்டம் நிறை வேற்றப்படுமோ என்ற ஜயம் எழுந்தது.
திடீரென்று இந்த மாத (ஓக்ரோபர்2012) முதலாம் நாள் 43,000 வீடுகள் கட்டும் திட்டத்தை இந்திய அரசு தொடங்கி வைத்தது. இந்த வைபவத்திற்கு ஒரு பட்டாளம் இந்தியப் பத்திரிகையாளர்களும் தொலைக்காட்சி நிருபர்களும் இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு படையெடுத்தனர்.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் இந்திய – இலங்கை அரசுகளுக்கிடையில் தொடர்பாளராக இருப்பவருமான அதிபர் ராஜபக்சவின் இளவல் பசில் ராஜபக்ச இந்திய ஊடகத்துறையினரின் கேள்விகளுக்கு பதில் கூறினார். கேள்விகள் சரமாரியாகக் கேட்கப்பட்டாலும் அமைச்சர் பசில் மிகவும் இலாவகமாக மழுப்பியும் புளுகியும் பதில் கூறினார்.
பசில் கூறிய உண்மைக்குப் புறம்பான பதில்கள் ஒக்ரோபர் 2ம் நாள் சென்னை சன் தொலைக்காட்சி செய்தியில் இடம்பெற்றன. இந்தியாவின் முன்னணி ஊடகவியலாளர் ராம செல்வராஜ் பசில் சொன்னவற்றை அப்படியே ஒப்புவித்தார். இவருடைய செய்தி அறிக்கையில் அகப்படாத சிங்களக் குடியேற்றம் பற்றிய தகவலை இவ்விடத்தில் பதிவு செய்கிறோம்
தமிழீழ மொத்த நிலப்பரப்பில், அதாவது தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களின் மொத்த நிலப்பரப்பு 20,369.1 சதுர கி.மீ. 2008 -2009ம் ஆண்டளவில் சிங்களக் குடியேற்றத்தின் மூலம் 6.500க்கும் மேற்பட்ட சதுர கி.மீ பறிபோய் விட்டது. சிங்களக் குடியேற்றம் இன்று வரை தொடர்கிறது.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த அம்பாறை, மட்டக்களப்பு. திருகோணமலை என்பன சிங்கள மயமாக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் சிறுபான்மையாகியுள்ளனர். “நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக” என்று சொல்வார்களே அதுபோல் சிங்களக் குடியேற்றம் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.
ஒரு இந்திய ஊடகவியலாளர் பசில் ராஜபக்சவை இது தொடர்பாக கேட்டதற்கு அப்படியொன்றும் இல்லை என்று அவர் பதில் கூறினார். விரல் நுனியில் தகவல்களை வைத்திருந்தால் அந்த ஊடகவியலாளர் பசில் ராஜபக்சவின் அபட்டமான பொய்யை உடைத்திருக்க முடியும் ஆனால் அது தான் இல்லை.
1987ல் இந்தியப் படைகள் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்த போது இந்திய அரசின் ஒப்புதலோடு மணலாறு குடியேற்றம் மிகத் தீவிரமாக நடத்தப்பட்டது. அங்கிருந்து விரட்டப்பட்ட தமிழர்கள் ராஜீவ் காந்தி அரசிற்கு இது பற்றி முறைப்பாடு செய்தார்கள். பிரதமர் ராஜீவ் அந்தப் பிராந்தியத்திற்கும் பொறுப்பாகவிருந்த இந்திய இராணுவ அதிகாரியிடம் விளக்கம் கேட்டார்.
கேணல் தர அதிகாரியான அவர் சிங்களக் குடியேற்றம் மணலாற்றில் நடக்கவி;ல்லை என்று அறிக்கை இட்டார். ராஜீவ் காந்தி அரசிற்கு அது போதுமானதாக இருந்தது. இன்றும் அப்படியான நிலவரம் நடக்கிறது. சிங்களக் குடியேற்றம் பற்றிய கேள்வியை இந்திய ஊடகவியலாளர்கள் பசிலிடம் கேட்கிறார்கள். அவர் அப்படியொன்றும் இல்லை என்கிறார். உடகவியலாளர் திருப்திப்படுகிறார்.
சென்ற மாதம் (செப்டம்பர் 2012) தமிழ்ப் பாரளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில் “வடக்கு கிழக்கை இராணுவ ஆக்கிரமிப்புக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதில் இலங்கை அரசு தீவிரமாக இருக்கிறது. கிளிநொச்சி மாவட்டம் திருமுருகண்டியில் 4000 ஏக்கருக்கும் கூடுதலான நிலத்தில் சீன உதவியுடன் இராணுவக் குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்டம் முள்ளிக்குளத்தில் கடற்படை முகாம் ஏற்படுத்தப்பட்டு கடற்படையினரின் குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சீன அரசாங்கம் நூறு மில்லியன் அமெரிக்க டாலரை இலங்கை அரசிற்கு உதவித் தொகையாக வழங்கி வடக்கு கிழக்கில் இராணுவக் கட்டுமானங்களை அமைக்கிறது.
இராணுவக் குடியிருப்புக்களை உருவாக்குவது மூலமாகவும், சிங்களக் குடியேற்றங்கள் மூலமாகவும் வடக்கு கிழக்கு குடிசனப் பரப்பலை மாற்றிப் பெரும் பான்மையாக வாழும் தமிழர்களைச் சொந்த இடத்தில் சிறுபான்மையாக்கும் முயற்ச்சி நடக்கிறது.”
மணலாறு என்ற தமிழர் நிலம் இப்போது வெலி ஓயா என்ற பெயருடன் தனிச் சிங்கள நிர்வாக மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாவட்டம் இப்போது அனுராதபுரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 1980களில் தொடங்கப்பட்ட மணலாறுக் குடியேற்றத்தின் மூலம் தமிழர்கள் வாழ்ந்த சின்னக்குளம், முந்திரிகைக்குளம், அக்கரைவெளி, இலங்கைமுனை, கரையாம்முனை, ஈச்சங்காடு ஆகியன சிங்களக் கிராமங்களாகப் பெயர் மாற்றப்பட்டுள்ளன.
வெலி ஓயா குடியேற்றத்தின் மூலம் 3500 ஏக்கர் நிலத்தை தமிழர்கள் இழந்;துள்ளனர். வடக்கு கிழக்கு தொடர் நிலப்பரப்பைத் துண்டாடும் ஆப்பாக மணலாறு குடியேற்றம் இடம்பெறுகிறது. இந்தக் குடியேற்றத்திற்கு புதுடில்லி அரசு பூரண ஆதரவு வழங்கியுள்ளதை இந்திய ஊடகத் துறையினர் புரிந்து கொள்ள வேண்டும்.
சிங்களக் குடியேற்றம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பழம்பெரும் தமிழ்க் கிராமங்களான குமுழமுனை, பழம்முறிப்பு, தென்னைமரமாவடி, கொக்கிளாய் ஆகியனவற்றில் இப்போது இராணுவ உதவியுடன் சிங்கள அதிகாரிகளால் சிங்கள மக்கள் குடியேற்றப்படுகின்றனர்.
தமக்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் வரலாற்றுத் தொடர்பு இருப்பதாக இந்தச் சிங்கள மக்கள் உரிமை கோருகின்றனர். அவர்கள் தமக்கு குடியிருப்பு நிலம், விவசாயநிலம், என்பனவோடு கட்டுமான வசதிகளும் செய்து தரவேண்டும் என்று இராணுவத்திடம் மனுச் செய்துள்ளனர். இதை தற்போது கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் நடமாடும் இந்திய உடகவியலாளர்கள் உலகிற்கு அறிவிக்க வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சிங்களவர்களுக்கு கோறாளைப்பற்று வடக்கிலுள்ள ஓமடியாமடு கிராமத்தில் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் வாழும் தமிழர்களை உடனடியாக வெளியேறும்படி சிங்களக் குடியேறிகளும் இராணுவத்தினரும் பணித்துள்ளனர். 2007ம் ஆண்டிற்குப் பிறகு மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றம் வேகமடைந்துள்ளது.
வன்னி புதுக்குடியிருப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 1760 தமிழ் குடும்பங்கள் அம்பலவன் பொக்கணை, தேவிபுரம், ஆனந்தபுரம், மந்துவில், மாத்தளவன் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களைச் சொந்த இடங்களில் குடியேற்றாமல் கோம்பாவில் காட்டுப் பகுதியில் தண்ணீர் வசதியற்ற தூர இடங்களில் குடியேற்றப்படுகின்றனர். இதே மாதிரி இரணைப்பாலை மக்களும் சொந்த இடங்களில் அல்லாமல் காட்டுப் பகுதிகளில் கூடார குடியிருப்புக்களில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
தமிழ்த் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எஸ்.சிறிதரன் ஆகியோர் ஜனவரி 13ம் நாள் (2012) கொக்குளாய் பிரதேசத்தின் அமையன்குளம், உத்தாராயன்குளம், அடையக்காறுத்தான்குளம், புவாமடுக்கண்டல், இரிஞ்சிக்காடு. நாய்கடிச்சமுறிப்பு, தட்டமாலை, சாக்காலத்துவெளி, சவாந்தாமுறிப்பு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இடம் பெயர்ந்த தமிழ் மக்களைச் சந்தித்துள்ளனர்.
இந்தக் கிராமங்களில் தமிழர்கள் மீளக்குடியேறுவதை இராணுவம் தடைசெய்துள்ளது. இலங்கை அரசு சிங்கள மக்களை இந்தக் கிராமங்களில் குடியேற்றுவதற்கு இரண்டு வருடத் திட்டத்தை வகுத்துள்ளது. ஏறத்தாழ 2000 ஏக்கர் விவசாய நிலம் இந்த வகையில் பறிபோகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழத் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கூறிய சிங்களக் குடியேற்றத் திட்டம் பற்றி இந்திய மத்திய அரசிற்கு முறைப்பாடு செய்துள்ளனர். செவிடன் காதில் ஊதிய சங்கு போல் அதன் மூலம் ஒரு பலனும் கிடைக்கவில்லை. ஒக்ரோபர் 2ம் நாள் செய்தி வாசி;ப்பில் சன் தொலைக்காட்சி நிருபர் ராம செல்வராஜ் இது பற்றி தொட்டுக் காட்டினார்.
நாய் குலைத்தாலும் தேர் தொடர்ந்து நகரும் என்று சொல்வார்கள். ஈழத் தமிழினத்தின் பாரம்பரிய பூமியைச் சிங்களமயமாக்கும் திட்டம் 1948ம் ஆண்டு தொடங்கப்பட்டது. எவர் விமர்சனம் செய்தாலும் யார் முறைப்பாடு செய்தாலும் பரவாயில்லை குடியேற்றம் தொடரட்டும் என்ற அடிப்படையில் இலங்கை அரசு செயற்படுகிறது.
No comments:
Post a Comment