பல தசாப்தங்களாக தமிழீழ விடுதலையைக் கொச்சைப்படுத்தியும், ஈழத் தமிழரின் விடுதலைக்காக வீரம் செறிந்த ஆயுதப் போரை முன்னெடுத்த விடுதலைப் புலிப் போராளிகளைக் களங்கப்படுத்தியும் எழுதிவந்த சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘இந்து’ பத்திரிகை முதல் முறையாக சிங்கள அரச தரப்பினர் வழங்கிய இராணுவப் புள்ளிவிவரங்கள் பொய் என்று தெரிவித்துள்ளதுடன், தான் சேகரித்த நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் செப்டம்பர் 20-ஆம் தேதியன்று நீண்ட முக்கிய தலைப்புக் கட்டுரை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக ஆயிரம் நாள் கள்வன் ஒரு நாள் பிடிபடுவான் என்கிற உதாரணம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இருந்து வெளியேற்றுமாறு பல வெளிநாட்டு அரசாங்கங்கள் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக தொடர்ந்தும் கோரிவருகின்ற போதிலும் மகிந்தவின் அரசு செவிசாய்க்கவில்லை. இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குப் பதில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வேலைகளையே மகிந்த அரசு செய்து வருகிறது. சிங்களத்தின் பிரச்சாரங்கள் பொய்யென நீண்ட கட்டுரையின் மூலமாக வெளியுலகத்துக்குக் கொண்டுவந்துள்ளார் ‘இந்து’நாளேட்டின் நிருபர் நிருபமா சுப்ரமணியன்.
‘இந்து’ பத்திரிகையின் தகவலின்படி சிங்கள இராணுவத்தின் மொத்தமுள்ள 19 டிவிஷன்களில் 16 டிவிஷன்கள் வடக்கு மற்றும் கிழக்கிலேயே நிலை கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒரு டிவிஷனில் 7000 தொடக்கம் 8000 வரையான படையினர் இருப்பர் என்ற கணக்கில் பார்த்தால், மொத்தம் 85,000 படையினர் வடக்கு, கிழக்கில் நிலைகொண்டிருப்பர் என்றும் அவர் கூறியிருந்தார். குறித்த புள்ளிவிவரம் சிறிலங்காவின் இராணுவத்தின் உள்ளகத் தகவல்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது என ‘இந்து’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக ‘இந்து’ பத்திரிகை தனது பத்திரிகை தர்மத்தைக் காலம் கடந்தாவது உணர்ந்துள்ளது போலும்.
பொய்யே கைவந்த கலையாகிவிட்டது
சிங்களத்துக்குப் பொய்யே கைவந்த கலையாகிவிட்டது. பிரித்தானியாவிடம் இருந்து 1948-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை பொய்யான காரணங்களை முன்வைத்தே சிறுபான்மை இனத்தவரை வதைப்படுத்தி வருகிறது. பல தமிழ் பேசும் இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்களின் தலைமைகளைப் பற்றிப் பிழையான தகவல்களை வழங்கி தமக்கு ஆதரவாகச் செயல்பட்டன சிங்களத் தலைமைகள். சில தமிழ்த் தலைமைகள் சிங்களத்தின் சதிவலைக்குள் சிக்காமல் தமது போராட்டங்களைச் செய்தன. அகிம்சை வழிப் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் பொய்யான பரப்புரைகளைச் சிங்களத் தலைமைகள் செய்தன.
தமிழ்ப் போராளிகள் ஆயுத வழிப் போர்களை ஆரம்பிக்கும் முன்னரே சிங்களத் தலைமைகள் தமிழ் இளைஞர்களுக்கு எதிராகப் பல அட்டூழியங்களைச் செய்தன. பொய்யான தகவல்களை வழங்கி அப்பாவி இளைஞர்களைச் சிறைப்பிடித்தது சிங்களம். இது போன்ற சேட்டைகள் பல தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த வழி கோலியது என்றால் மிகையாகாது. ஆயுதப் போர் ஆரம்பித்தவுடன் சிங்களத் தலைமைகள் முன் எப்போதும் இல்லாதவாறு பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறி தமிழ்ப் போராளிகளின் போராட்டத்தை மழுங்கடிக்கப் பல பிரயத்தனங்களைச் செய்தன. இவைகள் அனைத்தும் மென்மேலும் தமிழ்ப் போராளிகளின் வளர்ச்சிக்கு வழிகோலின.
சிறிலங்காவின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய சமீபத்தில் கூறும்போது, “நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 35 வீதத்தையும் கடற்பரப்பில் 65 வீதத்தையும் கொண்டுள்ள வடக்குஇ கிழக்கில் வெறும் 40 வீதத்துக்கும் குறைவான படையினரே நிலைகொண்டுள்ளனர். 2006-இல் யாழ்ப்பாணப் பகுதியில் 50,000 ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். போர் முடிவுக்கு வந்த பின்னர், 2009-ஆம் ஆண்டு இறுதிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் 27இ000 படையினர் நிலைகொண்டிருந்ததாகவும், தற்போது இந்த எண்ணிக்கையை 15,000 ஆகக் குறைத்து விட்டதாகவும் அங்கு நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பாதுகாப்புச் செயலாளரும் மகிந்தவின் சகோதரருமான கோத்தபாய கூறுகையில், வடக்கில் இருந்து கடந்த மூன்றாண்டுகளில் 28 பற்றாலியன்களை தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பியுள்ளதாகக் கூறியதுடன் வடக்கில் இருந்து அனுப்பப்பட்ட இராணுவத்தினர் எங்கு அனுப்;பப்பட்டனர் என்கிற தகவலைத் தெரியப்படுத்தவில்லை. கணிசமான இராணுவச் சிப்பாய்கள் வடக்கில் இருந்து கிழக்குக்கு அனுப்பப்பட்டனரே தவிர சிங்களப் பகுதிகளுக்கு அனுப்பியதாக எவ்வித தகவலும் இல்லை. இதன் ஊடாக சிங்களத்தின் பொய்யான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஈழத் தமிழ்த் தரப்பினர் சிங்களத்தின் பொய்களை வெளிக்கொண்டு வந்தால் உலக நாடுகள் ஏற்க மறுக்கின்றன. ‘இந்து’ போன்ற பத்திரிகை வாயிலாக வரும் உண்மைச் செய்திகள் நிச்சயம் உலக நாடுகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
உண்மையே இறுதியில் வெல்லும்
‘இந்து’ பத்திரிகையின் தகவலின்படி யாழ்.படைத் தலைமையகத்தின் கீழ் 51, 52, 55 ஆகிய மூன்று டிவிஷன்கள் உள்ளன. கிளிநொச்சி படைத் தலைமையகத்தின் கீழ் 57, 65, 66 ஆகிய மூன்று டிவிஷன்கள் இருக்கின்றன. முல்லைத்தீவு படைத் தலைமையகத்தின் கீழ் 59, 64, 68 என மூன்று டிவிஷன்கள் உள்ளன. வன்னிப் படைத் தலைமையகத்தின் கீழ் 21, 54, 56, 61, 62 என ஐந்து டிவிஷன்கள் செயற்படுகின்றன. கிழக்குப் படைத் தலைமையகத்தின் கீழ் 22, 23 மற்றும் அண்மையில் வடக்கில் இருந்து மாற்றப்பட்ட அதிரடிப்படை– 3 என அழைக்கப்படும் – அரைநிலை டிவிஷனான 63-ஆவது டிவிஷனும் உள்ளது. இந்த வகையிலேயே, 16 டிவிஷன்கள் மற்றும் ஒரு அதிரடிப்படையே வடக்கு கிழக்கில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளதாக ‘இந்து’ பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
இராணுவத்தின் சிறப்புத் தாக்குதல் டிவிஷன்களான 53 மற்றும் 58 டிவிஷன்களும் வடக்கில்தான் நிலை கொண்டுள்ளன என்று நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் மொத்தம் 19 டிவிஷன்கள் வடக்கு மற்றும் கிழக்கில், அதாவது நாட்டின் 35 வீத நிலப்பரப்பில் நிலைகொண்டுள்ளன. தெற்கிலோ அதாவது நாட்டின் 65 வீத நிலப்பரப்பில் 11, 12 மற்றும் 14 என மொத்தம் 3 டிவிஷன்கள் மட்டும்தான் உள்ளன. 13-ஆவது இலக்கம் அதிர்ஷ்டமற்றது என்பதால், அதை விலக்கி 14-ஆவது டிவிஷன் அண்மையில் உருவாக்கப்பட்டது. ஆக மொத்தத்தில் இராணுவத்தில் உள்ள மொத்தம் 22 டிவிஷன்களில் 19 டிவிஷன்கள் வடக்கு, கிழக்கில் தான் நிலைகொண்டுள்ளன என்று வேறு நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
சிறிலங்காவின் கடற்படை மற்றும் விமானப்படையினரின் எண்ணிக்கை குறித்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை. மூன்றில் இரண்டு பங்கினரான கடற்படை மற்றும் விமானப்படையினர் வடக்கு மற்றும் கிழக்கில் தான் வைக்கப்பட்டுள்ளனர். யுத்தம் முடிந்த பின்னரான இக்காலப்பகுதியில் தற்போது இராணுவத்தினர் தமது பயிற்சி வழங்கும் தளங்களாக வடக்குக் கிழக்குப் பகுதிகளைப் பாவித்து வருகின்றனர். சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் இராணுவ மற்றும் பொருள் உதவியினால் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பல்வேறுபட்ட இராணுவ வேலைத்திட்டங்களைச் செய்கிறது சிங்கள அரசு.
இராணுவ அதிகரிப்பை வடக்குக் கிழக்குப் பகுதிகளில் அதிகரித்துள்ளமை குறித்து ஓய்வுபெற்ற இந்திய இராணுவப் புலனாய்வு அதிகாரியான கேணல் ஆர்.ஹரிகரன் தெரிவிக்கையில், “சிறிலங்காவின் இராணுவப் படையினரின் எண்ணிக்கையானது, ஒரு தாக்குதலுக்குத் தயாராக இருக்க வேண்டிய அளவை விட அதிகமானதாக உள்ளது" என்றார். இதன் மூலமாக சிங்கள அரசின் தமிழர் தாயகத்தை இராணுவ மயமாக்கும் திட்டம் தெட்டத் தெளிவாக வெளியுலகத்துக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையே இறுதியில் வெல்லும் என்பதனையே இச்சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
தமிழீழப் போராட்டத்துக்குப் பலவிதத்தில் இடையூறு விளைவித்துவந்த ‘இந்து’போன்ற நாளிதழ்கள் தர்மத்தின் பக்கம் சாய்ந்திருப்பது பத்திரிகைத் தர்மத்துக்குக் கிடைத்த வெற்றியே. ‘இந்து’ போன்ற பத்திரிகைகள் நிச்சயம் சிங்கள அரச மற்றும் படையினரின் பேச்சுக்களை நன்கு அலசி ஆராய்ந்த பின்னரே பிரசுரிப்பது நன்று. பொய்யான தகவல்களைப் பிரசுரித்துவிட்டுப் பின்னர் மன்னிப்புக் கேட்பது என்பது பத்திரிகை தர்மத்துக்;கே சங்கடத்தை ஏற்படுத்திவிடும்.
விடுதலைக்குப் போராடும் இனத்தினரைக் கொச்சைப்படுத்தும் வேலைகளை விடுத்து, அம் மக்கள் நீதியும் நியாயமுமான தீர்வைப் பெற்று சுதந்திரமாக வாழ பத்திரிகைத் துறையினர் செயற்படுவதே பத்திரிகை தர்மமாக அமையும். காலம் கடந்தாவது ‘இந்து’ போன்ற பத்திரிகைகள் சிங்களத்தின் பொய் முகத்தை வெளியுலகத்துக்கு வெளிக்கொண்டு வந்திருப்பதன் மூலமாக எப்போதும் உண்மையே வெல்லும் என்பது தெட்டத்தெளிவாகியுள்ளது.
No comments:
Post a Comment