அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்கள் இருவரின் மரணம் விபத்தினால் ஏற்பட்டதல்ல எனவும் வேறு இடம் ஒன்றில் வைத்து தலையில் கடுமையாக தாக்கி கொலை செய்த பின்னர், விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தில் கொண்டு சென்று போட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் மற்றும் ஹெல்மட் ஆகியவற்றையும் விபத்தில் சேதமடைந்தாக தெரியும் வகையில் சேதப்படுத்தி அந்த இடத்தில் போட்டுள்ளதாகவும் இது பாரதூரமான படுகொலை சம்பவம் எனவும் காவற்துறையின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மரணங்கள் தொடர்பாக வீதியில் சென்ற வாகனத்தில் இருந்தவர்கள் முதலில், கம்பஹா தலைமையக காவற்துறையின் கீழ் வரும், வெரல்லகம காவற்துறை காவலரணுக்கு தெரியப்படுத்தியதாக கூறப்படுவது பொய் எனவும் முதலில் கம்பஹா காவற்துறை தலைமையகத்திற்கே இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.
27 ஆம் திகதி அதிகாலை 4.40 அளவில், இம்புல்கொட பிரதேசத்தில் ஒரு இடத்தில் இரண்டு பேர் விழுந்து கிடப்பதாக இனந்தெரியாத நபர் ஒருவர் தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார். அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கிடப்பதாக அவர் கூறியுள்ளார். அவர்கள் இறந்து கிடந்தனரா அல்லது உயிருடன் இருக்கின்றனரா என எதனை அந்த நபர் தெரிவிக்கவில்லை.
4.45 அளவில் தலைமையக காவற்துறையினர், கண்டி வீதியில் இம்புல்கொட பிரதேசத்தில் வாகன விபத்து ஒன்று நடந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது எனவும் இது குறித்து விசாரணை நடத்துமாறு வெரெல்லகம காவலரணுக்கு அறிவித்துள்ளனர்.
வெரெல்லகம காவலரணின் இலக்கம் 163 கீழ் இந்த அழைப்பு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் நேரம் 4.45 எனவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதில் முக்கியமான விடயம் என்னவெனில் வெரெல்லகம காவலரணுக்கு எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பு பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால், தலைமையக காவற்துறைக்கு எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பு குறித்து எந்த பதிவுகளும் செய்யப்படவில்லை. இந்த நிலையில், உயிரிழந்த மாணவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளமை பல உறுதியான தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் காவற்துறையினர் இதனை விபத்து என கூறி, வழக்கை முடித்துள்ளனர்.
No comments:
Post a Comment