Translate

Wednesday, 28 November 2012

நா.க.தமிழீழ அரசாங்க மாவீரர் நாள் அறிக்கை


நா.க.தமிழீழ அரசாங்க பிரதமர் வி. உருத்திரகுமாரன் விடுத்த மாவீரர் வணக்க நாள் அறிக்கை
தேசிய மாவீரர் நாளில் நமது மாவீரர்களை மனதிருத்தி நாம் உலக சமுதாயத்திடம் நீதி கோருகிறாம். சிங்களத்தின் பிடியிலிருந்து விடுவித்து, சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைத்துக் கொள்ள ஆதரவு தாருங்கள் என்று கோருகிறோம் என நா.க.த.அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் மாவீரர் வணக்கநாள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

• நமது தேசத்தின் கூட்டு நினைவுகளில் நீங்கா இடம் பெற்றுவிட்ட மாவீரர் தந்த வலுவோடும் ஆன்மபலத்தோடும் விடுதலைப் பயணத்தினை அயராது தொடர்ந்து முன்னெடுப்போம்!
• உலக சமூகம் தமிழ் மக்களது அரசியல்பெருவிருப்பினைக் கண்டறிய அனைத்துலக நியமங்களின்படி மக்கள் வாக்கெடுப்பினை நடாத்த வேண்டும்!
நமது இந்தக் கோரிக்கை உணர்ச்சிநிலைப்பட்டதொரு கோரிக்கை அல்ல. அனைத்துலச சட்டங்கள் நமது தேசத்துக்கு வழங்கும் உரிமைகளின் பாற்பட்டு நமது தேசத்தின் இருப்பைப் பாதுகாக்கவே இதனை நாம் கோருகிறொம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசமைக்கத் தகைமையுடைய ஒரு தேசம் என்ற வகையில், சுயநிர்ணய உரித்துடைய மக்கள் என்ற வகையில் எமது அரசியல் தலைவிதியினை நாமே தீர்மானிக்கும் உரிமை அனைத்துலகச் சட்டங்களின் பாற்பட்டு நமது மக்களுக்கு உண்டு.
நமது மக்களின் அரசியல் பெருவிருப்பு எது என்பதனை அனைத்துலக நியமங்களின் அடிப்படையில் கண்டறிய, சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு என்ற தெரிவினை உள்ளடக்கிய மக்கள் வாக்கெடுப்பொன்றினை அனைத்தலக சமூகத்தின் ஏற்பாட்டில் இலங்கைத் தீவிலும் புலம் பெயர்ந்தும் வாழும் ஈழத் தமிழ் மக்கள் மத்தியிலும் நடாத்துமாறு நாம் உலக சமூகத்திடம் கோருகிறோம் என உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையின் முழுவடிவம்:
இன்று தமிழீழத் தேசிய மாவீரர் நாள்!
தமிழீழ தேசத்தின் விடிவுக்காய் களமாடிக் காவியமாகிவி;ட்ட நமது தேசத்தின் வீரப்புதல்வரை மனதிருத்தி நாம் வணங்கும் நாள்.
அன்னைமண்ணின் விலங்கொடித்து, அச்சுதந்திரபூமியில் நமது மக்கள் கௌரவமாகவும், பாதுகாப்பாகவும், மகிழ்வாகவும் வாழும் வழிவகை செய்வதற்காய் தம்முயிரைத் தாமே ஈகம் செய்த உத்தமர்களின் நினைவு நாள்.
நம் சின்னஞ்சிறு தேசத்தின் விடுதலை வேட்கையினை அனைத்துலகெங்கும் முரசறைந்தொலித்து உலகப்பந்தில் தமிழீழத் தேசத்துக்கென்றொரு அடையாளத்தையே உருவாக்கி அதற்கான விடுதலை வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிக் கொண்ட நம் வீரர்களின் திருநாள்.
இன்றைய தமிழீழத் தேசிய மாவீரர் நாளில் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுடன் இணைந்தவாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் நமது மாவீரர்களுக்குத் தனது வீரவணக்கத்தினைச் செலுத்தி நிற்கிறது.
மாவீரர்கள் நமது சிறிய தேசத்தின் விடுதலை அவாவின் குறியீடுகள். அதற்கான வீரத்தின் குறியீடுகள். ஆக்கிரமிப்பினை எதிர்த்து நிற்கும் உறுதியின் குறியீடுகள். கொடுமை கண்டு பொங்கி எழும் போர்க்குணத்தின் குறியீடுகள். சுதந்திர வாழ்வு தரக்கூடிய மகிமையின் குறியீடுகள். சமத்துவத்தின் சகோதரத்துவத்தின் குறியீடுகள். தமக்கென வாழாது, தம் மக்களுக்காய், தம் தாயக விடுலைக்காய் வாழ்ந்து எமது தேசமெங்கும் விதையாய் வீழ்ந்து விட்ட இவர்கள் ஈகத்தின் அதிஉச்சக் குறியீடுகள்.
மாவீரர்கள் தமிழீழ தேசத்துக்குப் பெருமையினைத் தேடித் தந்தவர்கள். தேசத்தின் பெரும்சுமையைச் சுமந்து நின்றவர்கள். எதிரியின் மார்பின்மேல் ஒரு பெரும் சுவராய் நின்று நம் மக்களைக் காவல் செய்தவர்கள்.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அச்சாணியாகத் திகழ்ந்தவர்கள். தலைவர் உருவாக்கிய தமிழீழ நடைமுறையரசின் அடித்தளமாக இருந்தவர்கள். நமது தேசத்தை ஆக்கிரமிக்கத் துடித்த சிங்கள இனவாதப் பூதத்தின் கழுத்தைத் திருகி சிங்களத்தின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தியவர்கள்.
நமது மாவீரர்கள் குருதி சிந்தி நமது தேசத்துக்குப் பெற்றுத் தந்தவை இராணுவ வெற்றிகள் மட்டுமல்ல. நமது அரசியற் பலத்தின் அத்திவாரக் கற்களாகவே இவர்கள் இருந்தனர். இந்த அத்திவாரக் கற்களைக் கொண்டே ஈழத் தமிழர் தேசத்தின் அரசியற்பலம் கட்டி எழுப்பப் பட்டது. அரசியற்களத்தில் சிங்களத்தோடு சமபலத்தோடு களமாடும் நிலையைத் தோற்றுவித்தது. அனைத்துலகப் பரப்பில் ஈழத் தமிழர் தேசத்தின் விடுதலைக்குரல் ஒலிக்கக் காரணமாக இருந்தது. அனைத்துலக சமூகமும் நமது சிறிய தேசத்தை கவனத்திற் கொள்ள வழிசமைத்தது.
இன்றும் மாவீரர்கள் நமக்கு வழிகாட்டிகளாக இருந்து கொண்டிருக்கிறார்கள். நம்மை வழிநடாத்திக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு உறுதியையும் வெற்றிபெறும் வரை ஓயமாட்டோம் என்ற ஓர்மத்தையும் தந்து கொண்டிருக்கிறார்கள். நம்மோடு நமது உணர்வுகளோடு இறுகப் பிணைந்துள்ளார்கள். நமது மூச்சில் கலந்துள்ளார்கள். நமது தேசத்தின் கூட்டு நினைவுகளில் நீங்கா இடம் பெற்;றுள்ளார்கள்.
மாவீரர்கள் உறங்கிய துயிலுமில்லங்களையெல்லாம் அனைத்துலக மரபுகள் எல்லாவற்றையும் மீறிச் சிதைத்துச் சின்னாபின்னப்படுத்தியதன் மூலம் மாவீரர்களை நமது தேசத்தின் நினைவுகளில் இருந்து சிறுகச் சிறுக அழித்து விடலாம் என்று சிங்களம் இன்றும் கனவு கண்டு கொண்டிருக்கிறது.
தாயகத்தில் வாழும் மக்கள் நமது மாவீரர்களைப் பகிரங்கமாக நினைவுகூர்வதனை அச்சுறுத்தல்கள் மூலம் தடுத்து நிறுத்துவதால் தமது ஆக்கிரப்பினை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என ஆக்கிரப்பாளர்கள் கனவு காண்கிறார்கள்.
அந்நிய ஆக்கிரமிப்பாளர்களால் ஒருபோதும் ஒருமக்களது மனதை வெல்ல முடியாது என்ற அடிப்படை வரலாற்று உண்மையினை உணர்வதற்குக்கூடச் சிங்களத்தின் அதிகாரமமதை இடம் தரவில்லை.
இன்றைய மாவீரர்நாளில் நாம் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒரு செய்தியினை மிகத் தெளிவாகக் கூறிவைக்க விரும்புகிறோம். மாவீரர்கள் ஈழத் தமிழர் தேசத்தின் உயிர்மூச்சு. நம் தேசமெங்கும் நிறைந்துள்ளவர்கள. நமது நிலத்தில் நமது வானில் நமது காற்றில் நமது நீரில் நமது நெருப்பில் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள். நமது மக்களின் இதயக் கோவில்களில் குடியிருப்பவர்கள்.
இவர்களை நமது தேசத்தின், மக்களின் மனங்களில் இருந்து அகற்ற நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறப்போதில்லை. மாறாக இவை எமக்கு உம்மீது கொடும் சினத்தையே ஏற்படுத்துகின்றன. நம்மை மேலும் உறுதியடையச் செய்கின்றன. உமது ஆக்கிரமிப்பிலிருந்து முற்று முழுதாக விடுதலையடைதல் மட்டுமே ஈழத் தமிழர் தேசத்துக்கு முன்னுள்ள ஒரேயொரு தெரிவு என்பதனை தீர்க்கமாக வெளிப்படுத்துகின்றன.
அன்பான மக்களே!
ஒரு தேசத்தின் கௌரவமான, பாதுகாப்பான இருப்புக்கும் வளர்ச்சிக்கும் அதற்கென ஒரு அரசு இருத்தல் அவசியம். இந்தக் கனவை மாவீரர்கள் சுமந்து நின்றார்கள். இந்தக் கனவென்பது ஆண்ட இனம் மீண்டுமொருமுறை ஆள நினைப்பதில் தவறென்னவெனக் கேட்டவாறு அரசியல் மேடைகளுடன் நின்று விட்ட கனவல்ல.
பழம் பெருமை பேசும் நோக்குக் கொண்டோ அன்றி ஆளும் அதிகார மோகம் கொண்டோ எழுந்த கனவும் அல்ல. மாவீரர்களிடம் இருந்தெழுந்த விடுதலைக் கனவு சுதந்திரம் என்ற உலகப் பொது விழுமியத்தின் பாற்பட்டெழுந்த கனவு. நமது வாழ்வை நாமே தீர்மானித்தபடி நமது பாதுகாப்பை நாமே உறுதிப்படுத்தியபடி, நமது கௌரவத்தை நாமே பேணியபடி வாழ்வதற்கான ஒரு சுதந்திரக் கனவு. உலகப்பரப்பில் வாழும் சுதந்திர தேசங்களுடன் ஆனந்தமாகக் கைகோர்த்தபடி ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற தமிழ்ப் பண்பாட்டின் பாற்பட்டு நின்று தோழமையுடன் வாழ்வதற்காய்க் கண்ட கனவு.
சிறிய தேசமாகிய ஈழத் தமிழ் தேசம் தனக்கெனத் தனியரசு ஒன்றினை அமைத்து நம்மை நாமே ஆளும் நிலை உருவாக்கப்படாவிட்டால் நமது தேசத்தின் இருப்பே கேள்விக்குரியதாகி விடும் ஆபத்தை முன்னுணர்ந்து விடுதலைக் கனவுடன் களமாடியவர்கள் நம் மாவீர்கள்.
சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கொடிய இனஅழிப்பிலிருந்து ஈழத் தமிழர் தேசம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் தமது அடிமைத்தளையினை அறுத்தெறிந்து, சுதந்திர இறைமையுள்ள நாடு ஒன்றினை அமைத்துக் கொள்ளலே ஒரேவழி என்பதனை உய்த்துணர்ந்தே நமது மாவீரர்கள் களமாடினர்.
நம் மாவீர்கள் கண்ட களங்கள், ஆடிய சமர்கள், நடாத்திய போர் – இவை ஆக்கிரமிப்பு நோக்கம் கொண்டவையல்ல. மாறாக ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நமது மக்களை, நமது மண்ணை ஒட்டுமொத்தமான ஈழத் தமிழர் தேசத்தைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டவை.
மாவீரர் கண்ட போர் நமது தேசத்தின் விடுதலைக்கான போர். நமது தேசத்தை சிங்களத்தின் இனஅழிப்பிலிருந்து பாதுகாப்பதற்கான போர். நமது தேசத்தில் மனித உரிமைகளை அனுபவிப்பதற்கான போர். நமது தேசத்தில் ஜனநாயகத்தை மலரச்செய்வதற்கான போர். அனைத்துலகச் சட்டங்கள் நமது தேசத்துக்கு வழங்கும் தன்னாட்சி உரிமையினை நடைமுறையில் வென்றெடுப்பதற்கான போர். ஈழத் தமிழர் தேசத்தின் சுதந்திர வாழ்வுக்கான நீண்ட போராட்டத்தின் பாற்பட்டெழுந்த போர். உலக சமுதாய வரலாற்றை முன்நோக்கி நகர்த்துவதற்கான போர்.
போராட்டத்தின் மூலம் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைப்பதன் ஊடாகவே ஈழத் தமிழர் தேசம் தனது இருப்பினை உறுதி செய்ய, மனித உரிமைகளை அனுபவிக்க, ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும் என்ற மாவீரர்களின் தீர்க்கதரிசனத்தை நாம் இன்று நடைமுறையில் காண்கிறோம். சிங்களம் இன்று நமது தேசத்தினை இனக்கபளீகரம் செய்து விழுங்குவதற்கு எடுத்துவரும் நடவடிக்கைகள் இதனை நமக்கு மிகத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.
நம் தேசமெங்கும் தமது அசிங்கமான ஆக்கிரமிப்புக் கால்களைப் பரப்பி வைத்திருக்கும் இராணுவம், தமிழர் பிரதேசங்களை சிங்கள பௌத்தமயப்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள், தமிழீழ மக்களின் தேசத்தகைமையை அழித்து விடுவதற்கு சிங்களம் எடுத்துவரும் பகீரத முயற்சிகள் – இவையெல்லாம் சுதந்திர வாழ்வுக்காக மாவீரர்கள் சிந்திய குருதியின் தார்மீக நியாயத்தை அனைத்துலகும் புரிந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டியன.
நமது தேசம் இன்று சிங்களத்தின் பிடியில் சிக்கிச் சின்னாபின்னப்படுவதற்கு அனைத்துலக சமூகமும் பொறுப்புக் கூறவேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை தனது கடமையினை உரியமுறையில் செய்யத் தவறி நமது மக்கள் இனஅழிப்புக்கு உள்ளாக்கப்படுவதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறது.
உலகின் பலமிக்க நாடுகளின் சுயநலன்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சித்து விளையாட்டுக்களில் ஈழத் தமிழர் தேசம் காவு கொடுக்கப்பட்டிருக்கிறது. நமது மக்களின் வாழ்வும் வளமும் அழிக்கப்பட்டிருக்கிறது. நமது மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டிருக்கிறது.
இன்றைய தேசியமாவீரர் நாளில் நமது மாவீரர்களை மனதிருத்தி நாம் உலக சமுதாயத்திடம் நீதி கோருகிறாம். நாம் நம்மை சிங்களத்தின் பிடியிலிருந்து விடுவித்து நமக்கெனச் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைத்துக் கொள்ள ஆதரவு தாருங்கள் என்று நியாயத்தின் பேரால் உலக சமுதாயத்திடம் கோருகிறோம்.
நமது இந்தக் கோரிக்கை உணர்ச்சிநிலைப்பட்டதொரு கோரிக்கை அல்ல. அனைத்துலச சட்டங்கள் நமது தேசத்துக்கு வழங்கும் உரிமைகளின் பாற்பட்டு நமது தேசத்தின் இருப்பைப் பாதுகாக்கவே இதனை நாம் கோருகிறொம்.
அரசமைக்கத் தகைமையுடைய ஒரு தேசம் என்ற வகையில்இ சுயநிர்ணய உரித்துடைய மக்கள் என்ற வகையில் எமது அரசியல் தலைவிதியினை நாமே தீர்மானிக்கும் உரிமை அனைத்துலகச் சட்டங்களின் பாற்பட்டு நமது மக்களுக்கு உண்டு.
நமது மக்களின் அரசியல்பெருவிருப்பு எது என்பதனை அனைத்துலக நியமங்களின் அடிப்படையில் கண்டறிய, சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு என்ற தெரிவினை உள்ளடக்கிய மக்கள் வாக்கெடுப்பொன்றினை அனைத்தலக சமூகத்தின் ஏற்பாட்டில் இலங்கைத் தீவிலும் புலம் பெயர்ந்தும் வாழும் ஈழத் தமிழ் மக்கள் மத்தியிலும் நடாத்துமாறு நாம் உலக சமூகத்திடம் கோருகிறோம்.
உலகில் இனஅழிப்புக்குள்ளாகும் மக்களுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய பொறுப்பு அனைத்துலகச் சட்டங்கள் சார்ந்து அனைத்துலக சமூகத்திடம் இருக்கின்றது. இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்கள் சிங்களத்தின் இனஅழிப்புக்குள்ளாகிறார்கள் என்ற உண்மையினை அனைத்துலக சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எந்த ஒரு அரசியல் தீர்வும் நடந்தேறிய முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையையும் தற்போது நடந்து வரும் கட்டமைப்பு இனப் படுகொலையையும் கருத்திற்கொண்டுதான் ஆகவேண்டும். முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை எமக்குக்கூறும் உண்மை யாதெனில் தமிழர் தாயகத்தின் மீதான முற்றுமுழுதான இறுதி அதிகாரம் தமிழினத்திடம் இருக்கவேண்டும் என்பதே.
வெறும் நில அதிகாரமும் காவற்துறை அதிகாரமும் மட்டும் இதனை ஈடு செய்யாது. இந்த அடிப்படையில் ஈழத் தமிழர் தேசம் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு பாதுகாப்பு ஏற்பாடாக சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசினை தமிழீழ மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்குரிய தீர்வாக அனைத்துலக சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இது தவிர, சிறிலங்கா அரசு தமிழர்களுடன் எந்தவித அதிகாரப்பகிர்வுக்கும் தயாராக இல்லை என்பதனை நாம் புரிந்து கொள்வது ஒன்றும் கடினமான விடயம் அல்ல. சிறிலங்கா அரசு உடைக்கப்பட்டாலேயன்றி அது தானாக எந்தவித மறுசீரமைப்புக்கும் தயாராக இல்லை என்பதனையும் புரிவது கடினம் அல்ல. இதனால் சிங்கள அரசிடம் உரிமைகளை எதிர்பார்த்து நிற்பது இலவு காத்த கிளியின் கதைபோலத்தான் இருக்கும். நில அதிகாரமாக இருந்தாலும் சரி, காவல்துறை அதிகாரமாக இருந்தாலும் சரி ஏன் மிகக் சிறிய அதிகாரப்பரவலாக்கலாக இருந்தாலும்கூட சிங்கள அரசு அதற்கு இணங்கி வரப்போதில்லை.
இதனால் தாயகத்தலைவர்கள் 13 ஆம் திருத்தச் சட்டம் என்றும் தெரிவுக்குழுவென்றும் சிங்களம் போடும் மேடையில் நின்று ஆடுவதனைத் தவிர்த்து விட்டு ஈழத் தமிழர் தேசத்துக்கென்ற அரசியல் மேடையினை அமைக்க வேண்டும்.
தாயகத்தில் தனிநாடு பற்றிப் பேசுவதற்குத் தடைகள் இருப்பதனை நாம் அறிவோம். ஆனால் ஈழத் தமிழரின் தேசத்தகைமை பற்றியோ அந்த தேசத்துக்கு அங்கீகாரம் கோருவதற்கோ தடையேதும் இல்லை. போர் மற்றும் மனிதத்துவத்துக்கெதிரான குற்றங்கள், இனஅழிப்பு போன்றவை குறித்து அனைத்துலக சுயாதீன விசாரணை கோருவதற்கு சட்டத்தடைகள் ஏதும் இல்லை.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்புவதற்கு தமிழர் தேச நலன் சார்ந்து நடவடிக்கைகளை எடுப்பதற்கான தேவை அவசியமாக உள்ளது. இதற்குரிய அரசியல் துணிச்சலுடன் தாயகத் தலைவர்கள் செயற்படவேண்டும் என்பதே எமது தோழமையுடனான வேண்டுதல் ஆகும்.
நீதியின் அடிப்படையில் நாம் முன்வைக்கும் தமிழீழத் தனியரசுக் கோரிக்கையினை அனைத்துலக சமூகம் அதிலும் குறிப்பாக அனைத்துலக அரசுகள் இலகுவில் ஏற்றுக் கொள்ளப் போதில்லை என்பதனை நாம் அறிவோம். அரசுகள் சுற்றும் உலகஒழுங்கின் பாதை இந்த அரசுகளின் சொந்த நலன்கள் என்ற அச்சில் சுழல்வதால் இங்கு நீதியின் மொழி புரிந்து கொள்ளப்படப் போவதில்லை என்பதனையும் நாம் அறிவோம்.
இதனால், இங்கு நாம் சுட்டிக் காட்ட விழைவதெல்லாம் இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சினைக்கு இரு அரசுகள் என்ற தீர்வுப்பொறிமுறையே நிரந்தரமானதும் நிலையானதும், அத்துடன் சிறிலங்கா, இந்தியா உட்பட மேற்குலக அரசுகளது நலன்களுக்கு ஒத்திசைவாக அமையக்கூடியதும் என்பதுதான்.
இதனைக் காணவும் புரிந்து கொள்ளவும் உலக அரசுகளின் கொள்கைவகுப்பாளர்கள் தமது பழைய கண்ணாடிகளைக் கழற்றி வைத்து விட்டு புதிய கண்ணாடிகளை அணிந்து கொள்ள வேண்டும். புதியதொரு அணுகுமுறையினைக் கையிலெடுத்துக் கொள்ள வேண்டும். புதியகோணத்தில் சிந்திக்க வேண்டும்.
இலங்கைத்தீவில் இரண்டு அரசுகள் உருவாகுவது உண்மையில் சிங்கள மக்களுக்கும் சாதகமானது. இதனைச் சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் மீது சிங்கள ஆட்சியாளர்கள் புரிந்த, புரிந்து வரும் ஒடுக்குமுறைகள் தற்போது சிங்கள மக்களையும் பதம் பார்க்கத் தொடங்கி விட்டன. தேசியப்பிரச்சினை சார்ந்து இனத்துவ அடிப்படையில் இனவாதத்தைப் பரப்பியவாறு ஆட்சியாளர்கள் இயங்கும் சூழலானது தொழிலாளர் வர்க்கத்தையும் பலவீனப்படுத்தி வைத்திருக்கிறது. இதனால் தொழிலாளர்களும் தமது உரிமைக்காக ஒன்றுபட்டுப்போராட முடியாத நிலையில் உள்ளனர்.
இது சிங்கள மக்களின் வாழ்வுநிலையையும் வாழ்க்கைத்தரத்தையும் மிகவும் பாதித்து வருகிறது. இனவாதத்தைப் பரப்பியவாறு மிகப் பெரிய ஜனநாயகமறுப்பு ஆதிக்க சக்தியாக மகிந்த ராஜபச்ச தலைமையிலான அரசாங்கம் உருவெடுத்து விட்டது. இந்த ஜனநாயக விரோதிகளின் வெறியாட்டத்துக்கு சிங்கள மக்கள் பலியாகும் காலம் அண்மித்து விட்டது என நாம் அச்சமுறுகிறோம்.
தமிழர்களைக் கொல்வதில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்கும் இராணுவம் சிங்கள மக்கள்மீது ஏவிவிடப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. இத்தகையதொரு சூழலில் நாம் சிங்களமக்களின் மனித உரிமைகளுக்காகத் தோழமைக்குரல் எழுப்புவர்களாக இருப்போம்.
சிங்கள மக்களிடம் நாம் முன்வைக்கும் வேண்டுகை இதுதான். ஈழத் தமிழ் மக்களை ஒரு தேசமாக ஏற்றுக் கொள்ளுங்கள். இலங்கைத் தீவின் வடகிழக்குப்பகுதி தமிழ் பேசும் மக்களின் தாயகபூமி என்பதனை ஏற்றுக் கொள்ளுங்கள்.
ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரித்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அப்போது நாம் இரண்டு தேசங்களாக சமத்துவமான நிலையில் இருந்து பேச முடியும். ஒரு தீவு இரு நாடுகள் என்ற தீர்வுமுறை பற்றியும் இந்த இரு நாடுகளும் தமக்கிடையில் தேவையான புரிந்துணர்வு ஏற்பாடுகளை நமக்குள் நாமே செய்து கொள்ளும் நடைமுறை பற்றியும் நாம் பேச முடியும்.
இனவாதம் புரையோடியிருக்கும் ஒரு சூழலில் நமது இந்தக் கோரிக்கை சிங்களமக்களின் மனக்கதவைத் தட்டுவது கடினம் என்பதனையும் நாம் அறிவோம். இருந்த போதும் சிங்கள மக்களும் புதிய கண்ணாடியினூடாக தேசியப் பிரச்சினையினைப் பார்க்க முயல வேண்டும். சிங்கள முற்போக்கு சக்திகள் நமது இந்தக் கோரிக்கையினை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்ல உறுதுணையாக அமைய வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.
இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இலங்கைத்தீவின் தேசியப் பிரச்சினைக்கு இரு அரசுகள் தீர்வு இந்தியாவின் நலன்களை எவ்விதத்திலும் பாதிக்கப்போவதில்லை என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். தமிழீழம் தனிநாடாகும் காரணத்தால் தமிழகத்தில் தனிநாட்டுக் கோரிக்கை வளரப்போதில்லை. இதனை ஏற்கனவே பல தமிழகத் தலைவர்கள் தெளிவாக வெளிப்படுத்தி விட்டார்கள்.
வங்காள தேசம் தனிநாடாக இந்திய உதவியுடன் உருவாகியதன் காரணமாக மேற்கு வங்கத்தில் தனிநாட்டுக் கோரிக்கை எழவும் இல்லை. இத்தகைய நிலையே தமிழீழம் உருவாகும் போதும் தமிழகத்தில் இருக்கும். இதனால் பழைய அச்சங்களில் இருந்து விடுபடுமாறு நாம் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களிடம் கோருகிறோம்.
இதேவேளை, ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு இந்திய நாடு தடையாக இருக்கிறதே என்ற எண்ணம் தமிழக மக்களுக்கு ஏற்படுவது இந்தியாவுக்கு உள்நாட்டுரீதியாக உகந்தது அல்ல என்பதனை இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.
மேற்குலக நாடுகள் இலங்கைத்தீவில் நிலவவேண்டுமென எதிர்பார்க்கும் தாராளவாத ஜனநாயகச்சூழலும் பொருளாதார அணுகுமுறையும் ஸ்திரத்தன்மையும் இனவாதமையப்பட்ட அரசியற்சூழலில் இருந்து உருவாகப்போதில்லை. அவ்வாறு உருவாகினாலும் அது நிலைத்து நிற்கப்போவதில்லை.
இதனால் இலங்கைத்தீவில் தாம் விரும்பும் அரசாட்சிமுறையினைக் கொண்டு வருவதற்கு இரு அரசுகள் தீர்வுமுறையின் சாதக அம்சங்களை மேற்குலக நாடுகள் பரிசீலனை செய்ய வேண்டும். இலங்கைத்தீவின் தேசியப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத்திட்டங்களில் ஒன்றாக இரு அரசுகள் கொண்ட தீர்வுத்திட்டமுறையினையும் மேற்குலக நாடுகள் உள்ளடக்க வேண்டுமென நாம் கோருகிறோம்.
அனைவரிடமும் புதிய அணுகுமுறையினைக் கோரும் நாமும் புதிய அணுகுமுறைக்கு மேலும் தயாராக வேண்டும். நமது போராட்டத்தை ஜனநாயக இராஜதந்திரவழிகளில் முன்னெடுத்துச் செல்வதில் உறுதியுடையவர்களாக இருக்க வேண்டும். இதற்கு எமக்குள் ஜனநாயகப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நமக்கிடையே ஏற்படக்கூடிய முரண்பாடுகளை உரையாடல்கள் மூலம் தீர்க்கக்கூடிய பக்குவம் கொண்டவர்களாக மாற வேண்டும். நமது நடத்தையாலும் செயற்பாடுகளாலும் அனைத்துலகச் சமூகத்தினரைக் கவரக்கூடியவர்களாக இருக்க வேண்டும். நமது போராட்டம் உலகம் தழுவிய அளவில் ஜனநாயகத்துக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதி என்ற உணர்வு கொண்டவர்களாக நாமிருக்க வேண்டும். உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களுடன் தோழமையுணர்வு கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
இன்றைய மாவீரர்நாளில் நமது தமிழீழத் தாயக மக்களோடும் சில வாரத்தைகள் பேச விரும்புகிறோம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நீங்கள் உங்கள் உள்ளங்களில் நிறைத்தும் புதைத்தும் வைத்திருக்கும் சுதந்திரத் தமிழீழ அரசு என்ற அரசியல் பெருவிருப்பின் குறியீடாக இருந்து வருகிறது. செயற்பட்டு வருகிறது.
முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் ஊடாகத் ஈழத் தமிழ்த் தேசத்தின் விடுதலை வேட்கையினை நசுக்கி விடலாம் என்று கனவுகண்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
உரிமைக்காக நாம் எழுப்பும் குரல் காரணமாக உங்களை நெருங்கி வந்து உங்களுடன் உறவாடி உங்கள் சுகதுக்கங்களுடன் நாம் நேரடியாகப் பங்கு பெறும் நிலை தற்போது இல்லாதிருக்கிறது. இருந்த போதும் உங்கள் பாதுகாப்பான கௌரவமான மகிழ்வான வாழ்வே நமது செயற்பாடுகளுக்கெல்லாம் ஆதார உந்து சக்தியாக இருந்து வருகிறது. இதற்காகவே நமது மாவீரர்களும் களமாடித் தம்முயிரை ஈகம் செய்தனர்.
நமது போராட்டம் நீதியின் அடிப்படையில் அமைந்த போராட்டம். இப்போராட்டம் நிச்சயம் ஒருநாள் வெற்றி பெறும். அப்போது நமது மாவீரர் கண்ட கனவு நனவாகும். நீங்கள் தற்போது படும் துன்பங்களுக்கெல்லாம் விடிவு கிடைக்கும்.
நமது மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களும் அவர்களது குடும்பத்தினரும் நமது மரியாதைக்குரியவர்கள். இவர்களது கரங்களையும் நாம் தோழமையுணர்வுடன் இன்றைய நாளில் பற்றிக் கொள்கிறோம்.
நமது விடுதலைப் பயணத்தினை அயராது தொடர்ந்து முன்னெடுப்போம் என மாவீரர் நினைவுகளுடன் இன்றைய மாவீரர்நாளில நாம் உறுதியெடுத்துக் கொள்வோம். நமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லத் தேவையான வலுவையும் ஆன்ம பலத்தையும் மாவீரர்கள் நமது தேசத்துக்கு என்றும் வழங்கிக் கொண்டேயிருப்பார்கள். மாவீரர் கனவு நனவாகும்வரை நமது தேச விடுதலைப் பயணத்தில் அனைவரும் இணைந்து அயராது உழைப்போமாக!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment