Translate

Tuesday, 20 November 2012

பான்கிமூன்-மகிந்த கூட்டறிக்கைக்கு என்ன நடந்தது; மனோ கேள்வி

வீதியில் செல்லும் பெண்களை வழிமறித்து; அசடு வழியும் காக்கியுடை மன்மதன்மார்


பான்கிமூன்-மகிந்த கூட்டறிக்கைக்கு என்ன நடந்தது; மனோ கேள்வி
news
யுத்த முடிவுக்குப் பின்னர் பான்கிமூனுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்  கூட்டறிக்கையில் 13ஆவது திருத்தத்தை அமுலாக்குவதுதாக கூறப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது 13 ஆவது திருத்தத்தினை இல்லாது செய்ய வேண்டும் என்று கூறிவருகின்றனர். அவ்வாறெனின் பான்கிமூன்-மகிந்த கூட்டறிக்கைக்கு என்ன நடந்தது? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன்
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கேள்வியெழுப்பியுள்ளார்.


உலக சூழல் மாறி வருகிறது. உலகத்துக்கு உத்தரவாதம் கொடுத்துவிட்டு நீங்கள் இனிமேலும் தப்ப முடியாது. 2009 மே 26ம் திகதி கொழும்பில் வெளியிடப்பட்ட  பான்கிமூன்-மகிந்த கூட்டறிக்கையையும், அதில் தெளிவாக சொல்லப்பட்ட "பதின்மூன்று அமுலாக்கப்படும்" என்ற விடயத்தையும், "தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பதின்மூன்று மேலும் அபிவிருத்தி செய்யப்படும்" என்பதையும் நாம் எமது போராட்டத்தின் மையகருத்தாகவும், பேசுபொருளாகவும்  உலகளவில் ஏற்படுத்துவோம் என தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிரபல சிங்கள மொழியிலான ஜனஹண்ட (மக்கள் குரல்) என்ற அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்று நேற்று இரவு ஆரம்பமாகி நள்ளிரவு வரை நடைபெற்றது.

அதில் மனோ கணேசனுடன், ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நிசாந்த வணசிங்க, தேசிய சுதந்திர முன்னணியின் முசாமில், நவசம சமாஜ கட்சியின்  விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன் போதே மனோ கணேசன் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐநா செயலாளர் நாயகம் பான்கிமூனும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும்  இணைந்து வெளியிட்ட ஐநா-இலங்கை அதிகாரப்பூர்வ கூட்டறிக்கையில், பதின்மூன்றாம் திருத்தத்தை அமுலாக்குவதாகவும், அத்துடன் தமிழ் கட்சிகள் உட்பட ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பதின்மூன்றாம் திருத்தத்தை மேலும் அபிவிருத்தி செய்வதாகவும் மிக தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

2009, மே 19ம் திகதி ஜனாதிபதி கோரப்போரின் நிறைவை பாராளுமன்றத்தில் அறிவித்தார். அதன்போது நானும் சபையில் இருந்தேன். அதையடுத்து இலங்கைக்கு அவசர விஜயம் செய்த ஐநா செயலர் பான்கிமூன், போர் நடந்த பகுதிகளை பார்வையிட்டு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு அவர் ஊர் திரும்ப  முன்  2009 மே 26ம் திகதி இந்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த கூட்டறிக்கை மூலம் உலக பொது மன்றத்தின் பொது செயலாளருக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு என்ன நடந்தது? இன்று இதை அமுல் செய்து, பதின்மூன்றுக்கு மேலே செல்லாமல், இருப்பதையும் பறித்து கொண்டால் அதற்கு யார் பொறுப்பு? ஐநா சபையா? இலங்கை அரசாங்கமா?

இந்திய பிரதமருக்கு உறுதி அளித்தார், இந்திய ஊடகங்களுக்கு சொன்னார், தமிழ் தலைவர்களுக்கு சத்தியம் செய்தார் என்பதை எல்லாம் விடுங்களேன். உலகத்தின் அதி உயர் மாமன்றமான  ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் தான், ஜானாதிபதி இதை சொல்லியுள்ளார்.

இந்நிலையில், இங்கே வந்து  நீங்கள்  பதின்மூன்றும் இல்லை, ஒன்றும் இல்லை என கூச்சல் எழுப்புவதில் என்ன  அர்த்தம் இருக்கிறது?

இருப்பினும் அரசியல் அமைப்பின் அங்கமான பதின்மூன்றாம் திருத்தம், இதே அரசியலமைப்புக்கு முரணானது என்று சொல்கிறீர்கள். அப்படியானால், இதை உயர் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லுங்கள்.

விமல் வீரவன்ச இது தொடர்பில் உயர் நீதிமன்றம் செல்வேன் என்று சொல்லி விட்டு பின் ஏன் பின்வாங்கினார். திவிநெகும சட்டமூலத்துக்கு நீதிமன்றம் சென்றதைப்போல, இதற்கும் நாம் தயாராகத்தான் இருந்தோம். நீங்கள் ஏன் நீதிமன்றத்துக்கு போகவில்லை? நீங்கள் இது தொடர்பில்  வழக்குகள் போடுவீர்களானால் உங்கள் அரசாங்கத்துக்குத்தான் அரசியல் நெருக்கடிகள் அதிகரிக்கும். முடிந்தால் அதை செய்யுங்கள்.  

இந்த திருத்தம் இந்தியாவின் அழுத்தத்தால்,  அவசர, அவசரமாக கொண்டு வரப்பட்டது என சொல்கிறீர்கள். அழுத்தம் ஏற்பட நீங்கள் தமிழர்களை நடத்திய விதம் தான் காரணம்.

இன்றும் அதுதான் காரணம். இனிமேலும் அதுதான் நடக்கும். ஆனால், பதின்மூன்றும், மாகாணசபைகளும் அவசர, அவசரமாக கொண்டு வரப்பட்டன என சொல்லாதீர்கள். அது தவறு. திம்பு பேச்சுவார்த்தை, பெங்களுர் பேச்சுவார்த்தை, உள்நாட்டில் அரசு-அன்றைய தமிழர் விடுதலை கூட்டணி பேச்சுவார்த்தைகள் என நடைபெற்றுதான் இந்த திருத்தம் அரசியலமைப்புக்குள் இடம் பெற்றது.

இந்தியாவில் இருந்து உங்களுக்கு மொழி, மதம், கலை, கலாச்சாரம் எல்லாம்  வந்தது. அன்று விஜயனில் இருந்து இன்று ஷாருக்கான் வரை எல்லாம் இந்தியா தான். ஆனால், அங்கு நிலவுகின்ற மொழிவாரி மாநில ஆட்சிமுறையிலான  அதிகாரப்பிரிவினை மாத்திரம் வேண்டாம். நல்ல கதை  இது.

அன்று 1987ல் இந்திய பிரதமர் ராஜீவ், ஜே.ஆர்.ஜெயவர்தனவை மிரட்டி பணியவைத்து பதின்மூன்றாம் திருத்தத்தை கொண்டு வந்தார் எனவும், அதேபோல் 2009ல், ஐநா செயலாளர் பான்கிமூனும்  இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அழுத்தம் கொடுத்து பணிய வைத்து இந்த கூட்டறிக்கையை வெளியிட வைத்தார் எனவும், எனக்கு முன் பேசிய ஜாதிக ஹெல உறுமயவின் நண்பர் நிஷாந்த வணசிங்க சொல்கிறார். இது உங்களது வழமையான பல்லவி. ஆனால், இப்படி சொல்ல உங்களுக்கு வெட்கம் இல்லையா?

இந்த நாட்டில், சிங்கள பெளத்த சகோதர இனத்து மக்களை தவிர வேறு எவரும் வாழமுடியாது என்றும், வாழ்ந்தால் அடிபணிந்துதான் வாழ வேண்டும் என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள்.

அதனால்தான் , எந்தவித அதிகாரபிரிவினையையும் எதிர்க்கிறீர்கள். அதிகாரப்பிரிவினை என்ற கொள்கையை, இந்த நாட்டுக்கு அமெரிக்க  ஏகாதிபத்தியம் அறிமுகப்படுத்தவில்லை. 1987ல் ராஜீவ் காந்தி அறிமுகப்படுத்தவில்லை. அது 1940 களிலேயே கண்டிய சிங்கள தலைவர்களினாலேயே அறிமுகப்படுத்தப்பட்டது.

எனினும் அதிகாரப்பிரிவினையின் மூலமாக நாட்டுப்பிரிவினையை தவிர்ப்போம் என்ற கொள்கையின் அடிப்படையில் நாம் செயல்படுகிறோம். அதன்மூலம், சிங்கள, தமிழ், முஸ்லிம், பெளத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களை ஒன்று சேர்ப்போம்.

உலக சூழல் மாறி வருகிறது. உலகத்துக்கு உத்தரவாதம் கொடுத்துவிட்டு நீங்கள் இனிமேலும் தப்ப முடியாது. 2009 மே 26ம் கொழும்பில் வெளியிடப்பட்ட  பான்கிமூன்-மகிந்த கூட்டறிக்கையையும், அதில் தெளிவாக சொல்லப்பட்ட "பதின்மூன்று அமுலாக்கப்படும்" என்ற விடயத்தையும், "தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பதின்மூன்று மேலும் அபிவிருத்தி செய்யப்படும்" என்பதையும் நாம் எமது போராட்டத்தின் மையகருத்தாகவும், பேசுபொருளாகவும்  உலகளவில் ஏற்படுத்துவோம்.என அவர் மேலும் அந்த நிகழ்வில் தெரிவித்தார். 

No comments:

Post a Comment