Translate

Monday 26 November 2012

விடுதலைதேடி முதலடிவைத்து முன்நின்ற தலைவனே நீ வாழ்க"


வானமே,வையகமே,தமிழீழத் தாயகமே,இன்று நீ மடிசுமந்து பெற்ற உன் தவப் புதல்வனின் பிறந்தநா
ள். பெற்றதாய் குழந்தையைப் பேணுவதுபோல் உனைப் பேணிக்காத்த வேங்கைகள் தலைவனின் பிறந்தநாள்.
ஆண்டாண்டு காலமாக அடிமைகளாக்கப்பட்டு,அடக்கியொடுக்கப்பட்ட இனத்தின் தீராத தலைவிதியை மாற்றியமைக்க முதலடிவைத்து முன்நின்ற எங்கள் தேசியத் தலைவனே நீ வாழ்க. கத்தியின் முனையாலும்,புத்தியின் துணையாலும்,மண்ணின் பாரத்தை மனதில் சுமந்து,முன்நின்று முகம்காட்டிய மூதறிஞனே நீ வாழ்க.

பால் புளித்தாலும்,ஞாயிறு இருண்டாலும்,மறைநெறி திரிவுற்றாலும்,உலகமே நிலை பிறழ்ந்தாலும்,தன் சொல் பிறழாது,கடமையினின்று சற்றும் தவறாத வீரத் தமிழனே நீ வாழ்க.

உன்நெஞ்சில் வஞ்சமில்லை,உன் நேசத்தில் பஞ்சமில்லை,நீ செய்திட்ட பணியெல்லாம் செந்தமிழர் வாழ்வதற்கே. உனை ஊர் கூடித்தேரிழுக்கும்,உலக தெய்வங்கள் உன் வாசல் தேடிவந்து வாழ்த்துரைக்கும்.

எங்கள் துன்பக்கடலை கடக்கவல்ல தோணியே,இனவெறிகொண்ட சிங்களத்தை எதிர்த்து நின்ற பேராயுதமே,தாயின் மணிவயிற்றில் கருவாக இருக்கும்போது,எல்லாளன் கதையைக்கேட்டு,அவன்போல் தமிழ் வீரனாகியவன் நீ. பசியெனத்தோன்றுவோர் பகைவர்களாயினும் புசியெனச்சொன்ன ஈழத்தாயின் இணையற்ற வீரனே,ஓர் கண்ணியமான இனத்தின் காவலனே நீ வாழ்க.

புத்தனின் அமைதியும்,போதிமரத்தின் புனிதமும் ஈழத்தமிழனின் குருதியில் சிதறியபோது,தமிழர்கள் அடங்கியொடுங்கும் ஆட்டுமந்தைகள் அல்ல,ஆண்ட பரம்பரையின் அக்கினிக் குஞ்சுகள் என்றுகாட்ட,தமிழீழ மீட்புப்பணியெனும் இலட்சியத் தீக்குள் நின்று சமராடிய வீரப்புதல்வனே நீ வாழ்க.

என்குடும்பம்,என்சாதி,என்சுற்றம்,என்மதம் என்ற வட்டத்திலிருந்து வெளிவந்து, இரத்த உறவைவிட இலட்சிய உறவே உயர்ந்தது என்று அனைவர்க்கும் பாடம் புகட்டிய எங்கள் தலைவனே, நெருப்பும் உன் நேர்மையைப் புகழும். நீ ஏந்திய விளக்கில் எண்ணையாய் எரிபவனே, நீ மனிதம் சிதைக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் உரிமைக்காக உனை அர்ப்பணித்த சமூகமாற்றச் சக்தி.

உலகிலுள்ள எந்தப் பலமான அரசும் தோற்கடிக்கப்படலாம்,அல்லது அழிக்கப்படலாம். இது அந்தநாட்டை,எத்தனைநாடுகள்,எவ்வளவு காலமாக, என்னென்ன வழிகளில் சுற்றிவளைக்கின்றன என்பதைப்பொறுத்ததே.
காலில் ஈரம் படாமல் கடலைக்கடக்கலாம், ஆனால் கண்ணில் ஈரம்படாமல் சுதந்திரம் அடையமுடியாது. நதிகள் ஒன்றாகச்சேர்ந்து பேராறாகும்போது வலிமைபெறுகின்றுது, அது இயற்கை தந்த பாடம். அடம்பன் கொடியும் திரண்டால் முடுக்கு, இது மூதாதையரின் வாக்கு.

கார்மேகம் கதிரவனை மறைப்பதுபோல் இன்று நீ மறைந்து நின்றாலும், நாளை நீ தோன்றுகையில் ஈழத்தின் இருள்நீங்கி விடியல்பிறக்கும். எங்கள் சுதந்திரம் பூமியில் சுடர்விடும். விடிவெள்ளி பூக்கும், வீதியிருள் நீங்கும். தமிழர் வாழ்விலே புதுப்புனலாக, பொன்னருவியாக, தேன்தென்றலாக, தெம்மாங்கு பாடலாக தமிழீழம் எமைத் தாலாட்டும். அந்தநாள் வெகு தொலைவிலில்லை.

எங்கள் தலைவனே என்றும் நீ வாழ்க, சுதந்திரத் தமிழீழம் பெற்று வாழ்க.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

No comments:

Post a Comment