Translate

Wednesday, 14 November 2012

இனப்படுகொலையை தடுக்க ஐ.நா அதிகாரிகள் தவறி விட்டனர்

நியூயார்க் : ‘இலங்கையில் உள்நாட்டு போர் நடந்தபோது, அப்பாவி தமிழர்களின் உயிரை காப்பாற்ற ஐ.நா. அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று ஐ.நா. விசாரணைக் குழுவின் அறிக்கையிலேயே பரபரப்பு குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு உச்சகட்ட போரின்போது, சுமார் 40,000 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து விசாரிக்க, முன்னாள் அதிகாரி சார்லஸ் பெட்ரி தலைமையில் ஒரு குழுவை ஐ.நா. சபை அமைத்தது. இக்குழுவின் அறிக்கை ஐ.நா. சபையிடம் தாக்கல் செய்யப்படவுள்ளது.


இந்நிலையில், இந்த ரகசிய அறிக்கையில் கூறப்பட்டிருந்த விவரங்கள் கசிந்து விட்டது. இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி யில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையில் உள்நாட்டு போர் உச்சகட்டத்தில் இருந்தபோது, இலங்கையிலும், தலைமை அலுவலகம் அமைந்துள்ள நியூயார்க்கிலும் ஐ.நா. அதிகாரிகள் மிக அஜாக்கிரதையாக நடந்துள்ளனர். இலங்கையில் இருந்த ஐ.நா. அதிகாரிகளின் செயல்பாடு நீண்ட தயக்கமானதாக இருந்தது. பாதிக்கப்பட்ட மக்களின் உரிமையை காக்க போராட வேண்டியவர்கள், அதை கண்டுகொள்ளாதது வருத்தமான விஷயம்.

போரில் அப்பாவி மக்களை பாதுகாக்க வேண்டிய பல மூத்த அதிகாரிகள், தங்களுடைய பொறுப்புகளை மறந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறி விட்டனர். இதேபோல் நியூயார்க்கில் இருக்கும் ஐ.நா. சபை தலைமை அலுவலகமும் பிரச்னைக்கான வழியை கண்டறிந்து, அதற்கான தீர்வை எடுக்க தவறிவிட்டது. 
சாதாரண வர்த்தக பரிமாற்றங்களை போன்றுதான், இலங்கையில் இருந்த ஐ.நா. அதிகாரிகளும், தலைமை அலுவலகத்தில் இருந்த ஐ.நா. அதிகாரிகளும் முடிவுகளை மேற்கொண்டனர்.

பொறுப்புகள் மற்றும் சர்வதேச விதி மீறல்கள் குறித்து அதிகாரிகள் மவுனம் காத்துள்ளனர். அவர்கள் நினைத்திருந்தால் அந்த சமயத்திலேயே சரியான நடவடிக்கைகளை எடுத்து அப்பாவி தமிழர் களின்படுகொலையை தடுத்திருக்க முடியும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment