Translate

Friday, 20 May 2011

கனிமொழி கைது: திஹார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து அவரை சிபிஐ கைது செய்து திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அதே போல கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ரெட்டியும் கைது செய்யப்பட்டார்.

இதனால், தமிழக சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த திமுகவும் அதன் தலைவர் கருணாநிதி குடும்பமும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. கூட்டுச் சதியாளராக அவரது பெயரை குற்றப் பத்திரிக்கையில் சிபிஐ சேர்த்துள்ளது. முறைகேடாக ஸ்பெக்டரம் பெற்ற ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டிபி ரியாலிட்டியின் (இதன் இயக்குனர் ஷாகித் உசேன் பல்வா) இன்னொரு நிறுவனமான சினியுக் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி பணம் வந்தது தொடர்பான விவகாரத்தில் கனிமொழிக்குத் தொடர்பு இருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

இது கனிமொழிக்குத் தரப்பட்ட லஞ்சம் தான் என்று சிபிஐ கூறியுள்ளது. கனிமொழி தவிர கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியின் பெயரும் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் கனிமொழி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து மே 6ம் தேதி கனிமொழியும், சரத்குமாரும் சிபிஐ கோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

கனிமொழிக்காக ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, எல்லாத் தவறுக்கும் ராசாதான் காரணம், கனிமொழிக்குத் தொடர்பில்லை. அவர் ஒரு பெண், குழந்தைக்குத் தாய், எங்கும் ஓடி விட மாட்டார். எனவே முன் ஜாமீன் தர வேண்டும் என்று வாதிட்டார்.

அடுத்த நாளும் விசாரணை நடந்தது.அதன் பின்னர் மே 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் அன்றும் தீர்ப்பு அளிக்கப்படவில்லை. மாறாக மே 20ம் தேதியான இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று சிபிஐ கோர்ட்டுக்கு வந்திருந்தார் கனிமொழி. அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக நீதிபதி ஷைனியிடம் தெரிவிக்கப்பட்டது. தான் ஓய்வெடுக்க விரும்புவதாக கனிமொழி கூறவே அதை ஏற்ற நீதிபதி அவர் புறப்பட்டுச் செல்ல அனுமதித்தார். இதையடுத்து அவர் கிளம்பிச் சென்றார். ஓய்வுக்குப் பின்னர் மதியம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இந்த நிலையில் இன்று கனிமொழி முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஷைனி அறிவித்தார். இதற்காக இன்று காலை 10 மணிக்கு கனிமொழி நீதிமன்றம் வந்தார். அவருடன் கணவர் அரவிந்தனும் உடன் வந்திருந்தார்.

காலையில் நீதிபதி ஓ.பி.ஷைனி கூறுகையில், பிற்பகல் 1 மணிக்கு மேல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார். இந் நிலையில் இந்தத் தீர்ப்பு 2.30 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்ட்டது.

அதன்படி பிற்பகல் இரண்டரை மணியளவில் நீதிபதி தனது உத்தரவைப் பிறப்பித்தார். அப்போது கனிமொழியின் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார் நீதிபதி. மேலும் கனிமொழியை உடனடியாக கைது செய்து 15 நாட்கள் சிறையில் வைக்க சிபிஐக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து பாடியாலா நீதிமன்ற லாக்-அப்பில் கனிமொழி அடைக்கப்பட்டார். அங்கிருந்து மாலை 4.45 மணியளவில் அவர் அங்கிருந்து திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு பெண்கள் பகுதி உள்ள 6வது வார்டில் அடைக்கப்படுகிறார்.

உளவாளி அறைக்கு அருகில் கனிமொழி:

கனிமொழி அடைக்கப்படவுள்ள அறைக்கு அருகில்தான் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் கைதான மாதுரி அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறையில் கனிமொழிக்கு டிவி, மின்விசிறி, கட்டில் ஆகிய வசதிகள் கிடைக்கும். மேலும் அந்த அறையிலேயே குளியலறையும் இணைக்கப்பட்டுள்ளது.

கனிமொழியைப் போலவே கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் முன்ஜாமீன் கோரியிருந்தார். அந்த மனுவையும் நீதிபதி ஷைனி நிராகரித்து விட்டார். இதனால் அவரும் கைது செய்யப்பட்டு திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு வார்ட் நம்பர் 4ல் அடைக்கப்பட்டார். இந்த வார்டில் தான் காமன்வெல்த் ஊழலில் கைதான காங்கிரஸ் தலைவர் சுரேஷ் கல்மாடி அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இதே சிறையில் தான் திமுக முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவும் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கண் கலங்கிய கனிமொழி-ஆறுதல் கூறிய ராசாவின் மனைவி:

முன்னதாக நீதிபதி தனது தீர்ப்பை வழங்கியவுடன் கனிமொழி கண் கலங்கினார். தனது கணவர் அரவிந்தன் பக்கம் திரும்பிய அவரது கண்களில் நீர் வழிந்தது. அவருக்கு அரவிந்தன் சமாதானம் கூறினார். அதேபோல அருகில் நின்றிருந்த முன்னாள் அமைச்சர் ராசாவின் மனைவி பரமேஸ்வரியும் கனிமொழிக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தன்னை கைது செய்ய உத்தரவிட்டவுடன், மூக்குக் கண்ணாடி, மருந்துகள், புத்தகங்களை கொண்டு செல்லவும் அனுமதிக்க வேண்டும் என கனிமொழி நீதிபதியிடம் கோரி்க்கை வைத்தார். அதை நீதிபதி அனுமதித்தார்.

முன்னதாக இன்று காலை கோர்ட்டுக்கு வருவதற்கு முன்பு ஜாமீன் மனு மீதான தீர்ப்பு பாதகமாக அமையுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த கனிமொழி, எந்த உத்தரவு வந்தாலும் அதை சந்தித்தாக வேண்டிய நிலையில் நான் உள்ளேன். உத்தரவுக்காக காத்திருக்கிறேன். நான் நன்றாகவே இருக்கிறேன், எந்தப் பதட்டமும் இல்லை என்றார் அவர்.

சிறையில் யார் யார்?:

இதுவரை 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ஸ்வான் டெலிகாம் நிறுவன உரிமையாளர் ஷாஹித் பல்வா, அதன் இயக்குநர் வினோத் கோயங்கா, யுனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் தொலைத் தொலைத் தொடர்பு அதிகாரிகள் ஹரி நாயர், சுரேந்திரா பொபாரா, கெளதம் ஜோஷி, டிபி ரியாலிட்டியின் நிர்வாகியும் ஷாகித் உசேன் பல்வாவின் உறவினருமான ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வரிசையில் தற்போது கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோர் இணைகின்றனர்.

உயர் நீதிமன்றத்தில் அப்பீல்?:
  Read:  In English 
இந் நிலையில் கனிமொழிக்காக வாதாடி வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி கூறுகையில், இந்த விஷயத்தில் கைது நடவடிக்கைகையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கனிமொழி மனு தாக்கல் செய்யலாம் என்றார்.

ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நாளை மீண்டும் நடைபெற உள்ளதால் கனிமொழியை நாளை காலை 10 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி சைனி உத்தரவிட்டுள்ளார். இதனால் அவர் நாளை நீதிமன்றம் அழைத்து வரப்படவுள்ளார்.

No comments:

Post a Comment