Translate

Wednesday, 25 May 2011

உங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் - பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட்

பிரித்தானிய ஆளும் Conservative கட்சியின் யூத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனப்படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கின்றனர்.

இதுவரை போர்க்குற்றம் பற்றி பேசிவந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடந்த முள்ளிவாய்க்கால் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்துகொண்டபோது இனப்படுகொலை பற்றிப் பேச ஆரம்பித்திருப்பது முக்கிய முன்னேற்ற நடவடிக்கையாகப் பார்க்கப்படுகின்றது.


லண்டன் ரபல்கர் சதுக்கத்தில் கடந்ம 18ஆம் நாள் (18-05-2011) பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில், பிரித்தானிய ஆளும் கூட்டணிக் கட்சிகளான மரபுவாத மற்றும் தாராண்மைவாதக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இவர்களில் யூதர்களான ஆளும் கொன்ஸ்சவேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான லீ ஸ்கொட் (Lee Scott) மற்றும் றொபேட் காபொன் (Robert Halfon)  ஆகியோரின் உரைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இங்கு பேசிய இல்போர்ட் வடக்கு கொன்சவேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிக் குழுவின் தலைவருமான லீ ஸ்கொட், தனது பேச்சின் நடுவே அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தும் பிரித்தானிய தமிழர் பேரவையின் (I - Independent international investigations) பரப்புரையை ஆரம்பித்து வைத்தார்.

எமது உறவுகளுக்கு என்ன நடந்தது எனக் கோரும் தமிழ் மக்கள் பிடித்திருந்த பதாகை ஒன்றைச் சுட்டிக்காட்டியதுடன், ஒவ்வொருவரும் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரித்துடையவர்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

அங்கு லீ ஸ்கொட் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள்:

நண்பர்களே நான் இங்கு வந்திருப்பது இரண்டு வருடங்களுக்கு முன்னர் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டதை நினைவு கூருவதற்காகவே. ஒவ்வொருவரும் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரித்துடையவர்கள். தமது சிறுவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிய உரித்துடையவர்கள். அமைதியாகவும், சுதந்திரமாகவும், சுயமரியாதையுடனும் அந்த மக்கள் ஏன் வாழ முடியவில்லை என்பதை அறிய வேண்டும்.

நான் அண்மையில் பிரித்தானியாவிற்கான சிறீலங்கா தூதுவரைச் சந்தித்தபோது இதே கேள்விகளைக் கேட்டிருந்தேன். தொடர்ந்தும் கேட்பேன். இன்றுவரை உங்களின், எங்களின் சகோதரர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிய முடியவில்லை. குற்றம் புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

என்னுடைய நண்பர் றொபேட் காபொன் கூறியதுபோல, உலகில் சுதந்திரத்திற்காகப் போராடுபவர்கள், அவர்கள் கோரும் சுதந்திரத்திற்கும் மேலாகத் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்களிற்கு சுய நிர்ணய உரிமை நிச்சயம் கிடைக்க வேண்டும். அவர்கள் சுயமாக செயற்படும் தன்மை கொண்டவர்களாக வாழ வேண்டும். அவர்களுக்கு கல்வி, மருத்துவம், உணவு, வீடு கிடைக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை மிக விரைவில் இலங்கை சென்று இந்த நடைமுறைகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே எனது இன்றை உரையின் முக்கிய தகவலாக இருக்கின்றது.

தமிழ் மக்கள் கோரும் அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இரண்டு வருடங்களுக்க முன்னர் நாசி பாணியில் அமைக்கப்பட்ட தடுப்பு முகாம்கள் இன்றும் அங்கு இருக்கின்றன. இந்த முகாம்கள் உடனடியாக மூடப்பட வேண்டும். அந்த மக்கள் தமது சொந்த இடங்களில் அமைதியாகவும், சுதந்திரமாகவும், சுயமரியாதையுடனும் வாழ அனுமதிக்கப்பட வேண்டும்.

அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தும் பிரித்தானிய தமிழர் பேரவையின் (I - Independent international investigations) பரப்புரையை ஆரம்பித்து வைத்த அவர் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை வாசித்துக் காண்பித்தார்.

இலங்கையில் நடைபெற்ற போரில் குறிப்பாக இறுதிப்போரில் இடம்பெற்ற மனித போர்க்குற்றங்கள். மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக சமூகம் கரிசனை கொண்டுள்ளது.

ஐ.நா செயலர் பான் கி-மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் பின்வரும் விடயங்கள் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதில் இலங்கை விடயத்தில் அனைத்துலக தலையீடு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனையே கடந்த வாரம் நாடாளுமன்றத்திலும் நான் வலியுறுத்தினேன். எமது பிரதமரிடம் இதனை எடுத்துக்கூறிய நான் அனைத்துலக தலையீட்டுக்கான தலைமைப் பொறுப்பை ஏற்குமாறும், குற்றம் புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுள்ளேன்.

இவ்வாறு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட், நான் உங்கள் முன்னிலையில் இந்த மனுவில் கையொப்பம் இடுகின்றேன் எனத் தெரிவித்து கையெழுத்திட்டார். அத்துடன் மற்றொரு யூத நாடாளுமன்ற உறுப்பினரான றொபேட் காபொன் ஏற்கனவே இந்த மனுவில் கையெழுத்திட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க எவ்வளவு நாட்கள் ஆனாலும். அதற்கான நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன். உங்களின் உறவினர்களுக்காக குரல் கொடுப்பது சரியானதே. இன்று நான் உங்களுடன் இணைந்திருப்பது பெருமைக்குரியது எனக் கூறிய லீ ஸ்கொட், நன்றி என தமிழில் கூறி தனது உரையை முடித்தார்.

No comments:

Post a Comment