Translate

Wednesday 25 May 2011

சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறுவதில் கூட்டமைப்பின் அணுகுமுறை சம்பந்தன் தரும் விளக்கம்

sammanthan1தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய அணுகுமுறைகள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெறும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது கூடுதலான அளவுக்கு இந்தியாவிடமும் அமெரிக்காவிடமுமே நெருக்கமாகத் தொடர்புகளை வைத்திருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்றைய தினம் தினக்குரலுக்குத் தெரிவித்தார்.


அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான செயன்முறைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரஷ்யா, சீனா போன்ற நாடுகளைக் கேட்டுக்கொள்ளவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் தொடர்பில் சம்பந்தனிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேற்கு நாடுகளுடனும் இவ்விடயத்தில் தொடர்புகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேணி வருகின்ற பொழுதிலும் இந்தியா, அமெரிக்காவுடனேயே கூடுதல் ஊடாட்டங்களை நாம் கொண்டிருக்கின்றோம். போருக்குப் பின்னரான கால கட்டத்தில் இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய உருப்படியான நடவடிக்கைகள் மற்றும் அரசியல் தீர்வுக்கான செயன்முறைகள் தொடர்பில் கொழும்பில் இருக்கின்ற சீன, ரஷ்ய இராஜதந்திரிகளுடன் ஏற்கனவே உத்தியோகப்பற்றற்ற முறையில் கலந்துரையாடல்களை நாம் நடத்தியிருக்கின்றோம். வரும் நாட்களில் சீன, ரஷ்ய தூதுவர்களைச் சந்தித்து முறைப்படியான கலந்துரையாடல்களைச் செய்வதற்கும் உத்தேசித்துள்ளோம் என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறை அரசாங்கத்தின் தலைமைத்துவம் மேலும் கூடுதலானளவுக்கு சிங்கள கடும் போக்குச் சக்திகளின் செல்வாக்கு வலைக்குள் விழுந்துவிடாதிருப்பதை உறுதிசெய்வதாக ஒரு தந்திரோபாய ரீதியில் அமைய வேண்டுமென்பதே எமது அபிப்பிராயமாகும். அதை மனதில் கொண்டே அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் எமது அணுகுமுறைகள் அமைந்திருக்கின்றன. அதேவேளை தமிழ் மக்களுடைய நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு உருப்படியான நகர்வுகளைச் செய்வதற்கு எமது மேற்கண்ட அணுகுமுறை குந்தகமாக அமைந்து விடக்கூடாது என்பதிலும் நாம் குறியாக இருக்கின்றோம்.

விடுதலைப் புலிகளின் கோரிக்கையல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை. ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் எமது மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றையே நாம் நாடி நிற்கின்றோம். சர்வதேச அரங்கில் எமது நிலை பலமாக இருக்கின்றது. இதைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமென்பதில் நாம் அக்கறையுடன் இருக்கின்ற அதேவேளை, அரசாங்கத்துடன் அநாவசியமான முறையில் முரண்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். போருக்குப் பின்னரான சூழ்நிலைகள் முற்றிலும் வேறுபட்ட அரசியல் பருவநிலையைக் கொண்டிருப்பதால் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடனும் இலங்கை அரசாங்கத்தின் இணக்கத்துடனும் எமது மக்களுக்குத் தேவையான தீர்வை முன்னெடுப்பதில் நிதானமான போக்கை நாம் கடைப்பிடித்து முன்னேற்றம் காண வேண்டுமென்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கூறினார்.

No comments:

Post a Comment