Translate

Wednesday 25 May 2011

பிரயோசனமற்ற அலங்கார அமைப்பே செனற் சபை

  • இன்றைய இளம் பரம்பரையினருக்குச் செனற் சபை புதிய விடயமாகத் தோன்றலாம்.
  • அது ஏற்கனவே நடைமுறையில் இருந்து கைவிடப்பட்டது. 
  • சோல்பரி அரசியலமைப்புடன் செனற் சபை நடைமுறைக்கு வந்தது.



செனற் சபையை அமைப்பது பற்றி அரசாங்கம் ஆலோசனை தெரிவித்திருக்கின்றது.ஜனாதிபதி அடிக்கடி கூறிவரும் "பதின்மூன்றாவது திருத்தம் பிளஸ்'இதுதான் என்கிறார் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல.



சோல்பரி அரசியலமைப்புடன் செனற் சபை நடைமுறைக்கு வந்தது.பாராளுமன்ற உறுப்பினர்களால் தெரிவு செய்யப்படும் 15 பேரும் பிரதமரின் ஆலோசனைக்கமைய மகாதேசாதிபதியினால் நியமிக்கப்படும் 15 பேருமாக 30 பேரை உறுப்பினர்களாகக் கொண்டது.ஒரு செனற்றரின் பதவிக் காலம் ஒரு தடவையில் ஆறு வருடங்கள்.எத்தனை தடவைகளும் பதவி வகிக்கலாம்.இரண்டு வருடங்களுக்கொரு தடவை பத்து செனற்றர்கள் (தெரிவு 5,நியமனம் 5) பதவி விலக அந்த வெற்றிடம் முறைப்படி நிரப்பப்படும்.செனற் சபை முதல் முறையாக 1947 நவம்பர் 12 ஆம் திகதி கூடியது.சோல்பரி அரசியலமைப்பின் எட்டாவது திருத்தத்தின் மூலம் 1971 ஒக்டோபர் 2 ஆம் திகதி ஒழிக்கப்பட்டது.

பிரதிநிதிகள் சபையும் செனற் சபையும் இணைந்ததே அன்றைய பாராளுமன்றம்.பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் செனற் சபையின் அங்கீகாரம் பெற்ற பின்னரே நடைமுறைக்கு வர முடியும்.மக்களின் நலன் கருதிச் சட்டங்களை மீளாய்வு செய்யும் நிறுவனமாகக் கருதப்பட்ட போதிலும் நடைமுறையில் செனற் சபை அவ்வாறு இருக்கவில்லை.சிறுபான்மையினருக்குப் பாதிப்பை ஏற்படுத்திய பிரஜாவுரிமைச் சட்டமும் அரசகரும மொழிச் சட்டமும் செனற் சபையின் அங்கீகாரத்துடனேயே நடைமுறைக்கு வந்தன.அரசியல் கட்சிகளின் பல முக்கியஸ்தர்களுக்குச் செனற்றர் என்ற கௌரவப் பட்டம் கிடைத்ததைத் தவிர வேறு எந்தப் பலனும் செனற் சபையினால் கிட்டவில்லை.

இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய பேச்சுவார்த்தையின் போது அரசாங்கம் செனட்சபை ஆலோசனையை முன்வைத்திருப்பது வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டவருக்குக் கொட்டைப்பாக்குக்கு விலை கூறுவதைப் போன்ற செயல். அரசாங்கம் ஆலோசனை தெரிவித்திருக்கும் செனட் சபை முன்னைய செனட் சபையிலும் பார்க்கக் கூடுதலான உறுப்பினர்களைக் கொண்டுள்ளதெனிலும் தமிழ் பேசும் மக்கள் இன்று முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பொறுத்தவரையில் அதனால் எவ்வித பலனும் இல்லை.இச்சபைக்கு எவ்வளவு தான் அதிகாரங்களை வழங்கினாலும் பெரும்பான்மைப் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரையில் பாராளுமன்றத்துக்கும் அதற்கும் வித்தியாசம் இருக்காதென்பதால் சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளுக்கு அது உத்தரவாதமாகாது.

தமிழ் மக்கள் எல்லா விடயங்களிலும் சம உரிமையை அனுபவிக்கின்றார்கள் என்பதால் அவர்களுக்குத் தனித்துவமான பிரச்சினை எதுவும் இல்லை எனக்கூறுபவர்கள் இன்று சிங்கள மக்கள் மத்தியில் கூடுதலாக உள்ளனர்.இது அண்மைக்காலத்தில் அரசியல்வாதிகள் திணித்த அபிப்பிராயம்.உரிமைகளின் சமத்துவத்துக்கு வழிவகுக்காத சமஉரிமை அர்த்தமற்றது.

பொதுத்தேர்தலில் வாக்களிக்கும் உரிமை சிங்கள மக்களைப் போலவே தமிழ் மக்களுக்கும் உண்டு.இது சமஉரிமை.ஆனால் இது உரிமைகளின் சமத்துவத்துக்கு வழிவகுப்பதாக இல்லை.சிங்கள மக்களால் பெரும்பான்மையாகத் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் அம்மக்கள் பாரம்பரியமாக வாழும் பிரதேசங்களில் இடம்பெறவுள்ள அபிவிருத்தி,குடியேற்றம். காணி விநியோகம் போன்ற விடயங்களில் தீர்மானம் மேற்கொள்ளக்கூடியவர்களாக உள்ளனர்.தமிழ் மக்களால் பெரும்பான்மையாகத் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் அம்மக்கள் பாரம்பரியமாக வாழும் பிரதேசங்களில் இவ்விடயங்கள் தொடர்பான செயற்பாடுகளைத் தீர்மானிக்கக்கூடியவர்களாக இல்லை.இது உரிமைகளின் சமத்துவமின்மை மாத்திரமன்றி ஜனநாயகக் கோட்பாட்டுக்கு முரணானதும் கூட.இதற்குச் சரியான தீர்வு நியாயமான அதிகாரப் பகிர்வு, "பதின்மூன்றாவது திருத்தம் பிளஸ்' என்று ஜனாதிபதி கூறியதைத் தமிழ் மக்கள் இந்த அடிப்படையிலேயே விளங்கிக்கொண்டார்கள் என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.

செனட் சபையை அமைக்கும்  ஆலோசனை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் புதியதல்ல.சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கூட்டத்தொடர் இடம்பெற்ற காலத்திலும் அரசாங்க தரப்பிலிருந்து இந்த ஆலோசனை சாடைமாடையாக வெளிப்பட்டது.எனினும் வலியுறுத்தப்படவில்லை.
இனப்பிரச்சினையின் தீர்வில் அரசாங்கத்துக்கு உண்மையான அக்கறை இருக்குமேயானால் சிறிதளவும் பிரயோசனமற்ற ஆலோசனைகளைக் கைவிட்டு இயன்றளவு அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு முன்வரவேண்டும்.

No comments:

Post a Comment