இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் வெளிநாடுகள் தலையிட எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம். அது உள்வீட்டுப் பிரச்சினை. அதை நாமே தீர்த்து வைப்போம். பிரிவினைவாதக் குழுக்கள் கேட்பதைக் வழங்க நாம் தயாராக இல்லை – என்று யுத்த வெற்றிவிழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றியின் இரண்டாம் வருடப் பூர்த்தியை முன்னிட்டு இன்று காலிமுகத்திடலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விழாவில் மக்களுக்கு ஆற்றிய உரையின்போதே ஜனாதிபதி மஹிந்த மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அங்கு பேசியவை வருமாறு -
பொதுமக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதன் ஊடாகவே மனித உரிமையை பாதுகாக்க முடியும். இனவாதத்தைத் தூண்டுவதன் மூலம் எந்தவொரு பயனும் யாருக்கும் ஏற்படப்போவதில்லை
ஆயிரக்கணக்கான முப்படையினர் மற்றும் பொலிஸாரின் உயிர்த்தியாகங்களின் மூலம் விடுதலை செய்யப்பட்ட நாட்டை எந்தவொரு அந்நிய சக்திகளிடமோ, பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளிடமோ ஒருபோதும் தாரைவார்க்க நான் தயாராக இல்லை.
பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டதன் காரணமாக தங்கள் வருமானத்தை இழந்துள்ள முன்னாள் பயங்கரவாதிகள் மீண்டும் ஒன்று சோ்ந்து தாய்நாட்டுக்கு விரோதமான முறையிலும் வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்தித்திட்டங்களுக்கு எதிர்ப்புக் காட்டும் முறையிலும் செயற்படத் தொடங்கியுள்ளனர்.
சர்வதேசத்தை பயன்படுத்தி பிரிவினைவாத குழுக்கள் முன்னெடுக்கும் முயற்சிகள் சாத்தியமாக போவதில்லை. மனித உரிமை மீறல்களை சர்வதேசத்திற்கு சமர்ப்பிப்பதன் மூலம் இலங்கையில் மனித உரிமையை பாதுகாக்க முடியாது – என்றார்.
காலி முகத்திடலில் இன்று முற்பகல் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மஹிந்த ராசபக்ஷவின் குடும்பத்தினர், எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க, உட்பட அமைச்சர்கள், முப்படைத்தளபதிகள், பொலிஸ்மா அதிபர் ஆகியோரும் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment