வழமைக்கு மாறாக மாநகரசபைச் சூழலில் படையினர் குவிக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு கூச்சல்கள் குழப்பங்கள் மத்தியில் நேற்று மாநகரசபையின் எதிர்க்கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
யாழ் மாநகரசபை மாதாந்த பொது கூட்டம் நேற்று நடைபெற்றபோது ஆளும் பொதுசன ஐக்கிய முன்னணி, ஈ.பி.டி.பி.யின் மாநகரசபை உறுப்பினர்கள் உயிரிழந்த மக்களுக்கான அஞ்சலி செலுத்துவதை குழப்பும் வகையில் மேசைகளில் தட்டியும், கூக்குரலிட்டவண்ணம் இருந்தனர். இதே நேரம் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா கூட்டம் முடிந்ததாகக் கூறி வெளிநடப்புச் செய்துள்ளார்.
பின்னர் மாநகரசபை கூட்டம் நண்பகலுக்குப் பின்னர் ஆரம்பமானபோது 3.30 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினரான பரம்சோதி முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்காக இரண்டு நிமிட அஞ்சலி செய்வதற்கு கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
அஞ்சலி செலுத்துவதற்கு தயாராக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொதுசன ஐக்கிய முன்னணியும், ஈ.பி.டி.பி. உறுப்பினர்களும் இதனைக் குழப்பும் வகையில் முள்ளி வாய்க்காலில் விடுதலைப் புலிகளே மக்களைக் கொலை செய்ததாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் இதனைப் பொருட்படுத்தாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழர் விடுதலைக் கூட்டணியும் எழுந்து நின்று 2 நிமிட அஞ்சலியைச் செலுத்தினர்.
மாநகரசபைக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக மாநகர முதல்வர் படையினருக்கு அறிவித்ததாக குற்றஞ்சாட்டிய மாநகரசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் விந்தன் மாநகரசபையின் பிரதான நுழைவாயில் மூடப்பட்டு இருந்ததாகவும் படைஅதிகாரிகள் மாநகர முதல்வருடன் உரையாடி கொண்டிருந்ததாக குற்றம் சாட்டினார்
No comments:
Post a Comment