தமிழ்நாட்டில் தங்கியுள்ள ஈழத் தமிழர்களின் முகாம்கள் குறித்து ஆளுநர் உரையில் தமிழக அரசு அளித்துள்ள உறுதிமொழிக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் விடுத்துள்ள அறிக்கை.
புதிதாகப் பொறுப்பேற்று உள்ள அரசு இன்று தாக்கல் செய்துள்ள ஆளுநர் உரையில் நம்பிக்கையளிப்பதும் புதியதுமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது.
குறிப்பாக தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்து கால் நூற்றாண்டிற்கும் மேலாக இங்குள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள ஈழத் தமிழர்கள், தமிழகத்திலேயே கெளரவமாக வாழத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும், அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்கள் சீரமைக்கப்படும் என்றும், தரமான இருப்பிடம், குடிநீர் வசதி, சுகாதாரம், மருத்துவ வசதி ஆகியன செய்து தரப்படும் என்றும் ஆளுநர் உரையில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.புதிதாகப் பொறுப்பேற்று உள்ள அரசு இன்று தாக்கல் செய்துள்ள ஆளுநர் உரையில் நம்பிக்கையளிப்பதும் புதியதுமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது.
இதுமட்டுமின்றி, தமிழக அரசு செயல்படுத்தும் அனைத்து நலத் திட்டங்களும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று அறிவித்திருப்பதையும் நாம் தமிழர் கட்சி நன்றி கூறி வரவேற்கிறது.
முகாம்களில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு மாதா மாதம் அரசு அளித்துவரும் உதவித் தொகை மிகவும் குறைவாகும். அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான அத்யாவசியப் பொருட்களை வாங்குவதற்கு அந்த உதவித்தொகை போதுமானதல்ல. எனவே அத்தொகையை பன்மடங்கு உயர்த்தி அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் அவர்களை நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.
ஈழத் தமிழர்களின் நல்வாழ்வில் இந்த அளவிற்கு அக்கறை காட்டும் அரசு, மற்றொரு முக்கிய நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் செங்கல்பட்டிலும், பூந்தமல்லியிலும் உள்ள சிறைகளில் ஐயத்தின் பேரில் பல ஈழத் தமிழர்கள் பல ஆண்டுகளாக சிறைபடுத்தி வைத்திருக்கின்றனர். இவர்கள் மீது எந்த வழக்கும் இல்லை. இவர்களில் சிலரை நீதிமன்றம் விடுதலை கூட செய்துவிட்டது. அப்படியிருந்தும் எந்த சட்ட ரீதியான அடிப்படையும் இன்றி, அவர்களை தொடர்ந்து சிறையில் வைத்துள்ளனர். மனிதாபிமானமற்ற இந்த அத்துமீறலுக்கு தமிழக முதல்வர் உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சிறப்பு முகாம்களில் உள்ள அனைவரையும் விடுதலை செய்து, அவர்கள் தங்கள் உறவினர்களுடன் சென்று வாழ அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சட்டத்திற்குப் புறம்பான அந்த சிறப்பு முகாம்களை மூடிவிட வேண்டும் என்றும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
-சீமான்.
No comments:
Post a Comment