13 வயது ஈழத் தமிழ்ச் சிறுமியைப் பற்றி எடுக்கப்பட் ட திரைப்படம் "உச்சிதனை முகர்ந்தால் "
13 வயது ஈழத் தமிழ்ச் சிறுமியைப் பற்றி எடுக்கப்பட்ட படத்தில் சத்தியராஜ், சீமான் , நாசர், மணிவண்ணன் உட்பட பலர் நடித்துள்ளார்கள். இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளிவர உள்ள நிலையில், இப் பட இசைவெளியீட்டு விழா லண்டனிலும், நோர்வேயிலும் நடைபெற உள்ளது. இப் படத்தில் நடித்த பல நடிகர்கள் நடிகைகள், மற்றும் பாடகர்கள் ஆகியோரும் இதில் பங்கேற்கின்றனர். உச்சிதனை முகர்ந்தால் படத்தை ஈழத் தமிழர்கள் தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடையமாகும் ! இன்ஸ்பெக்டராக வரும் சீமான் அவர்களின் வசனங்கள் அணல் பறப்பவையாக அமைந்துள்ளதோடு, ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக இத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத் திரைப்படமானது உலகளாவியரீதியிலும், மற்றும் இந்தியாவிலும் பல விருதுகளை தட்டிச் செல்லும் அளவுக்கு நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
உணர்வாளர்கள் சீமான், சத்தியராஜ் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் முதல் தமிழ்ப்படம் "உச்சிதனை முகந்தால்" ஆகும். ஈழத்துச் சிறுமியாக செல்வி நீதிகா இப் படத்தில் நடித்துள்ளார். இப்படமானது சர்வதேச விருதுகளைத் தட்டிச்செல்லும் அளவுக்கு தரத்தோடு தயாரிக்கப்பட்டுள்ளதாக அப் படத்தின் ரெய்லர்களைப் பார்வையிட்டவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இத் திரைப்படம் தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ ஊடக அறிக்கை இங்கே இணைக்கப்பட்டுள்ளது !
உச்சிதனை முகர்ந்தால்
செய்திக் குறிப்பு:
எல்லாக் குழந்தைகளும் இறைவனால் ஆசீர்வதிக்கப் படுவதில்லை. 13 வயது புனிதவதியை அறிந்தவர்கள், கனத்த மனத்துடன் இந்த உண்மையை ஒப்புக்கொள்வார்கள். இறைவனால் ஆசீர்வதிக்கப்படாத ஆயிரமாயிரம் குழந்தைகளின் அடையாளம் அவள். புனித நதியைப் போல உற்சாகம் பொங்க ஓடிக்கொண்டேயிருந்த புனிதவதியின் வாழ்க்கை, வானவில்லைப் போல கண்ணெதிரில் தொலைந்துபோகும் கதையைக் கண்ணீர் மல்கக் கவிதையாக்கியிருக்கிறது, புகழேந்தி தங்கராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'உச்சிதனை முகர்ந்தால்' திரைப்படம்.
உச்சிதனை முகர்ந்தால் - திரைப்படத்தின் கதை, புனிதவதி என்கிற அழகுத்தேவதையைச் சுற்றியே படர்கிறது. எனினும் இது அற்புதங்களும் ஆச்சர்யங்களும் நிறைந்த கற்பனைத் தேவதைகளின் கதை இல்லை. எல்லாச் சாத்தான்களாலும் சபிக்கப்பட்டிருக்கும் ஒரு யதார்த்த தேவதையின் கதை. அவளுடன் சேர்ந்து சிரிப்பதும், அவளுடன் சேர்ந்து அழுவதும்தான் எவருக்கும் சாத்தியம்.
புகழேந்தி தங்கராஜ் இயக்கிய முந்தைய திரைப்படமான - காற்றுக்கென்ன வேலி - தமிழ்த் திரையுலகில் பேசாப் பொருளையும் துணிவுடன் பேசிய படம். குறுக்கே கிடக்கும் 26 மைல் கடல், மனித நேயத்துக்குத் தடையாகிவிடக் கூடாது என்பதைத் தெளிவாக எடுத்துரைத்த படம். தணிக்கைத் தடைகளை உடைத்தெறிந்து வெற்றி கண்ட காற்றுக்கென்ன வேலி . யைப் போன்றே, கண்மூடித் தனமாக நசுக்கப் பட்ட ஓர் இனத்தின் வரலாற்றை, அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறது - உச்சிதனை முகர்ந்தால்.
புனிதவதியாக சிறுமி நீநிகா நடித்துள்ளார். நீநிகா, தேவர் பிலிம்ஸ் தயாரித்த எம்.ஜி.ஆர். படங்களுக்கு வசனம் எழுதிய அய்யாப்பிள்ளையின் பேத்தி. உயிருக்குயிராக அவளை நேசிக்கும் பேராசிரியர் நடேசனாக சத்யராஜ், அவரது மனைவியாக சங்கீதா நடித்துள்ளனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் அன்டனியாக சீமான், மூத்த மருத்துவர் தெய்வநாயகமாக நாசர் நடித்துள்ளனர். லட்சுமி ராமகிருஷ்ணன், ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன், அமுதன் என்கிற நாயும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளது. உச்சிதனை முகர்ந்தால் - திரைப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கியுள்ளார், புகழேந்தி தங்கராஜ். பிரபல எழுத்தாளர் தமிழருவி மணியன் வசனம் எழுதியுள்ளார். திரைப்படத்துக்கு அவர் வசனம் எழுதுவது இதுவே முதல்முறை. உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தனின் கவிதை வரிகளுக்கு மேலும்மேலும் மெருகேற்றியுள்ளார், இசையமைப்பாளர் டி. இமான்.
ஒளிப்பதிவு: பி. கண்ணன் மற்றும் மணவாளன்.
படத்தொகுப்பு: பி. லெனின்.
தயாரிப்பு: குளோபல் மீடியா ரூ என்டர்டெய்ன்மென்ட் (Global Media & Etertainment as) நிறுவனத்தின் சார்பில் குளோபல் மீடியா இன்வெஸ்ட் (Global Media Invest as) இணைத் தயாரிப்பாளர்கள்: ஸ்ரீவன் புஸ்பராஜா, சிறி பாலசுந்தரம், சிவகணேசன் தில்லையம்பலம், றமணன் கந்தையா மற்றும் விஜயசங்கர் அசோகன் ஆகஸ்ட் மாதம் - உச்சிதனை முகர்ந்தால் - திரைப்படத்தை வெளியிடத் தேவையான இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
ஜூலை 31ம் தேதியன்று, உச்சிதனை முகர்ந்தால் - திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, லண்டன் மாநகரில் நடைபெற இருக்கிறது. மறுநாள், ஆகஸ்ட் 1ம் தேதி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இசை வெளியிடப்பட இருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழாக்களில், சத்யராஜ், இமான், சங்கீதா, பாடகர்கள் மாதங்கி மற்றும் பல்ராம் பங்கேற்கின்றனர்.
நன்றி.
No comments:
Post a Comment