Translate

Thursday 7 July 2011

ஈழத் தமிழ் அகதிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக தமிழக மறுவாழ்வுத்துறை அமைச்சருடன் ஈ.என்.டி.எல்.எப். உயர்மட்டக்குழு சந்திப்பு!

ஈழத் தமிழ் அகதிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக தமிழக மறுவாழ்வுத்துறை அமைச்சருடன் ஈ.என்.டி.எல்.எப். உயர்மட்டக்குழு சந்திப்பு!

தமிழகத்தில் வாழும் ஈழத் தமிழ் அகதிகள் சார்பாக இன்று (07-07-2011) வியாழக்கிழமை மதியம் 2:00 மணியளவில் தமிழக மறுவாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு. மொகமட் ஜான் அவர்களை தலைமைச் செயலகத்தில் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) யின் உயர்மட்டக்குழு ஒன்று சந்தித்தது.

இந்தச் சந்திப்பில் ஈ.என்.டி.எல்.எப். சார்பாக கூடுதல் பொதுச்செயலாளர். உயர்திரு. ஞா.ஞானராஜா அவர்களும், துணைப் பொதுச் செயலாளர். சீ. வசீகரன் அவர்களும், மற்றும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் மூத்த செயற்குழு உறுப்பினருமான திரு. மங்களராஜா அவர்களும் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பில் தமிழகத்தில் வாழும் ஈழத் தமிழ் அகதிகளின் இன்றைய வாழ்வாதாரப் பிரச்சினைகளை விளக்கமாக எடுத்துரைத்தனர். இறுதியில் ஈழத் தமிழ் அகதிகள் சார்பான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை மாண்புமிகு மறுவாழ்த்துறை அமைச்சர் அவர்களிடம் கையளித்தனர்.

மாண்புமிகு. அமைச்சர் அவர்களும் ஈ.என்.டி.எல்.எப். உயர்மட்டக்குழு கையளித்த கோரிக்கைகள் அனைத்தையும் நடைமுறைபடுத்துவதாகவும், ஈழ அகதிகளின் உணர்வுகளை தாம உணர்ந்துகொண்டுள்ளதாகவும், அனைத்து விடயங்களையும் மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று அம்மா அவர்களின் ஆசியோடு நிறைவேற்றித் தருவதாகவும் உறுதியளித்தார்.

மேலும் மாண்புமிகு. அமைச்சர் அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க, மறுவாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர். உயர்திரு. தீனபந்து அவர்களையும் இன்று மாலை ஈ.என்.எல்.எப். உயர்மட்டக் குழுவினர் சந்தித்தனர்.

முதன்மைச் செயலாளர் அவர்களிடமும் உயர்மட்டக் குழுவினர் மகஜரை கையளித்து, ஈழ அகதிகளின் இன்று எதிர்நோக்கும் வாழ்தாரப்பிரச்சினைகளை மிகத் தெளிவாகவும் விரிவாகவும் எடுத்துரைத்தனர். முதன்மைச் செயலாளர் அவர்களும் புரிந்துணர்வோடு அனைத்து விடயங்களையும் கேட்டறிந்து, ஈழ அகதிகள் படும் துயரங்களிலிருந்து விடுதலைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.

மேலும், ஈ.என்.டி.எல்.எப். உயர்மட்டக் குழுவோடு முதன்மைச் செயலாளர் அவர்கள் கலந்துரையாடிக்கொண்டிருக்கும் போதே உயர்மட்டக் குழுவின் முன்னிலையிலேயே அவர்கள் கேட்ட சில கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து நிறைவேற்றிக் கொடுக்குமாறு ஆணைகளைப் பிறப்பித்தார். முதன்சை; செயலாளரின் உடனடி நடவடிக்கை, ஈ.என்.டி.எல்.எப். உயர்மட்டக் குழுவினருக்கு மிகவும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தது. மற்ற கோரிக்கைகளையும் மிக விரைவில் நிறைவேற்றித் தருவதாகவும் உறுதியளித்தார்.

மாண்புமிகு மறுவாழ்வுத்துறை அமைச்சர் அவர்களும், மறுவாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் அவர்களும் தமிழகத்தில் ஈழ அகதிகள் முகாம்களின் நடைமுறைப்படுத்தப்படும் அடக்குமுறைகளை உடனடியாக நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று இருவருமே ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் உயர்மட்டக் குழுவினரிடம் உறுதியளித்தனர்.

மேலும், ஈ.என்.டி.எல்.எப். உயர்மட்டக்குழுவினர் முக்கியமாகக் கேட்டுக்கொண்ட ஈழத் தமிழ் அகதிகளின் தொழில்கல்வி சம்பந்தமாக, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களைச் சந்தித்துப் பேசி தமிழக அரசே இந்த தொழில் கல்வியை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வோம் என்றும் இருவருமே தெரிவித்தனர்.

முக்கியமாக ஈழ அகதிகளுக்கான டிராவல்ஸ் டொக்யுமென்ட் மற்றும் ஆஸ்பெஸ்டா சீட் மற்றும் தார் சீட்டிலான கோரிக்கைகள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.



ஈ.என்.டி.எல்.எப். கையளித்த கோரிக்கைகள்:





திகதி:- 07-07-2011
மாண்புமிகு. அமைச்சர் மொகமட் ஜான் அவர்கள்,
(பிற்படுத்தோர் மற்றும் மறுவாழ்வுத்துறை)
தமிழ்நாடு அரசு,
சென்னை.

பொருள்:- (ஈழத் தமிழர்களின் தொழில் கல்வி தொடர்பாக)

ஈழத் தமிழர்களின் கல்விக்கான வழியை திறந்துவிட்டதற்காக ஈழத் தமிழர் சார்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    1983ஆம் ஆண்டு முதல் இந்தியா வந்த ஈழத்தமிழர்கள் தங்களை அகதிகள் என்று பதிவு செய்துள்ளனர். 25 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்தவர்கள் இன்றுவரை உரிமை எதுவுமின்றி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    எந்த வேளையிலும் காவல் அதிகாரி அல்லது வருவாய் அதிகாரி இவர்களை அழைத்தால் இந்த மக்கள் குடும்பம் குடும்பமாக வரிசையில் நிறுத்தப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

    இவர்களுக்கு குடியுரிமை, வாக்குரிமை, சொத்து வாங்கும் உரிமை, வாகன உரிமை, வாகனம் ஓட்டும் உரிமை என்று அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன.

    ஈழத் தமிழர்கள் ஏறக்குறைய 30 நாடுகளுக்கு அகதிகளாகச் சென்று இன்று குடியுரிமைப் பெற்று வாழ்கிறார்கள். அனைத்து நாடுகளும் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளுக்குள் அவர்களுக்கு குடியுரிமை வழங்கிவிட்டன. ஆனால் இந்தியாவில் மட்டும்தான் 25 ஆண்டுகளுக்கும் மேலாக முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிங்கள ஆட்சியாளரிடமிருந்து தப்பி வந்து தமிழக அதிகாரிகளிடம் அகப்பட்டுக் கொண்டதாக அனைவரும் கருதுகின்றனர்.

ஈழத் தமிழ் அகதிகள் என்றால் முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கப்பட வேண்டியவர்கள் என்று தமிழக அதிகாரிகள் கருதுகின்றனர்.

இந்தியா ஒரு மாபெரும் ஜனநாயக நாடு. மனித உரிமைகள் மதிக்கப்படும் என்ற நம்பிக்கையில்தான் ஈழ அகதிகள் இங்கே வந்தனர். ஒரு தலைமுறைக்கான காலம் முகாம்களுக்குள் சீரழிக்கப்படும் என்று தமிழர்கள் எதிர்பார்க்கவில்லை.

பிறநாடுகளில் தஞ்சம் அடைந்த தமிழர்கள் நன்கு மதிக்கப்படுகின்றனர். குடியுரிமை வழங்கப்பட்டு அவர்கள் கௌரவமாக அந்த நாடுகளில் வாழ்கின்றனர். சமூக அந்தஸ்துடன் சம உரிமையும் அவர்களுக்கு உண்டு.

ஆனால், தமிழகத்தில் ஒரு எஸ்.ஐ அல்லது ஒரு வி.ஓ.ஏ. உத்தியோகஸ்தர் ஆயிரம் ஈழத்தமிழர்களை வரிசையில் நிறுத்தி கணக்கெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 25 ஆண்டுகள் இது நடைமுறையில் உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தீபெத்திய அகதிகள் வாழ்கிறார்கள். அவர்களை கர்நாடக அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நன்கு மதிக்கின்றனர். அவர்களை எந்தத் தொந்தரவும் செய்வதில்லை. அதே போன்று நாங்கள் கடந்த 21 ஆண்டுகளாக கர்நாடகா மாநிலம், பெங்களுருவில் எங்கள் ஈழ அகதிகள் குழந்தைகளுக்காக தங்கும் வசதி கொண்ட பாடசாலை ஒன்றினை நடத்திவருகிறோம். கர்நாடக அரசும் சரி அதிகாரிகளும் சரி எந்தவித  தொல்லையும் தந்ததில்லை. தமிழ்நாடு அதிகாரிகள்தான் எங்கள் இனத்தவரைக் கொடுமைப்படுத்துகின்றனர். தங்களது ஆட்சியில் இவ்வடக்குமுறை நிறுத்தப்பட்டு சிறிதளவேனும் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர்.

ஈழத் தமிழ் அகதிகள் இனியும் அடிமைகள் போன்று முகாம்களுக்குள் தமிழக அதிகாரிகளால் அடக்கி நசுக்கப்பட்டு வாழ்வதை விரும்பவில்லை. அவர்கள் படும் துயரங்களை அவமானங்களை இந்த கோரிக்கை மடல் மூலம் விபரிக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.

எனவே, கீழ்காணும் கோரிக்கையினை தங்கள் முன் சமர்ப்பிக்கிறோம். தகுந்த நடவடிக்கை மூலம் எங்கள் ஈழ அகதிகளுக்கு ஏனைய நாடுகளில் வழங்கப்பட்ட உரிமைகள் போன்று வழங்கவேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

(01)        ஈழத் தமிழ் அகதிகளுக்கு அவர்கள் விருப்பத்துக்கிணங்க இந்தியக்     குடியுரிமை வழங்கவேண்டும்.

(02)         ஏனைய இந்திய மக்களுக்கு இருக்கும் உரிமைகளான பங்கீட்டு          அட்டை, வங்கிக் கடன் பெறும் உரிமை, சுதந்திரமாக நடமாடும்          உரிமைகள் வழங்கப்படவேண்டும்.

(03)         பாஸ்போர்ட் அல்லது டிராவல்ஸ் டொக்கியுமென்ட் பெறும் உரிமை           வழங்கப்படவேண்டும்.

(04)        ஏனைய நாடுகளில் ஈழ அகதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும்     உரிமைகளைக் கண்டறிந்து அவற்றினை வழங்குவதற்கென்று      கமிசன் ஒன்று அமைக்கப்பட்டு அதன் மூலம் ஈழ அகதிகளின்     குறைகளை நீக்க வேண்டும்.

(05)     வீடு, மனை, வாகனங்கள் வாங்க உரிமை வழங்கப்படவேண்டும்.

(06)        பயன்படுத்தப்படாத அரசு நிலங்களை ஈழத் தமிழ் அகதிகளுக்கு   வழங்கி, விவசாயத்தை மேற்கொண்டு தமிழ்     அகதிகளும் தமிழ்நாடும்   பயன்பெற்று, அகதிகள் நாடு திரும்பும் போது நிலங்களை மீள பெற   வேண்டுகிறோம்.

(07)     போலீஸ் மற்றும் வருவாய்த்துறை எங்கள் முகாம்களை நிர்வகிப்பதை தவிர்க்கவேண்டும்.

(08)     புனர்வாழ்வுத்துறை மற்றும் சமூகத்துறை மட்டுமே எங்கள்   முகாம்களை நிர்வகிக்க வேண்டும்.

(09)     கோவிலுக்கு போவது, உறவினர்களைப் பார்ப்பதற்கு இன்னொரு  முகாமுக்குப் போவது, வெளிநாடுகளில் இருந்து வரும்   உறவினர்களை வறவேற்கப் போவது அனைத்திற்கும்    போலீசிடமிருந்து அனுமதிபெற வேண்டும் என்பதை நீக்கவேண்டும்.

(10)     அகதிகள் முகாமில் உள்ள சிறிலங்கா தமிழ் அகதிகளின்   ஒவ்வொரு குடும்பமும், வெப்பத்தை அதிகளவு கொடுக்கும்    அஸ்பெஸ்டாஸ் தகரக் கூரை கொண்ட தொடர் குடிசையில்தான்  இருப்பிடம் தரப்பட்டு உள்ளனர். அதனால் நோய், குடும்பங்களின்  தனித்தன்மை மற்றும் கலாச்சார சீர்கேடு ஏற்பட்டு தமிழ் பாரம்பரியம்     அழிந்துகொண்டிருக்கிறது அவைகள் மாற்றப்பட வேண்டும்.

(11)     ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு, விடுதலை, நிருவாகப் பகிர்வு, சிங்களக் குடியேற்றங்களை வெளியேற்றுதல் போன்றவற்றுக்கு   உறுதியளித்துச் செயற்படுத்தும் வரை யாரையும் இலங்கை திருப்பி அனுப்பக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.

(12)     மனித குலத்திற்கு உள்ள உரிமைகளான மனித உரிமைகள்   அனைத்தும் ஈழ அகதிகளுக்கு வழங்ப்படவேண்டும்.

இன்றைய நிலையில், ஈழத்தில் தமிழரது வாழ்வு கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்தநிலையில் தமிழகத்தில் அகதிகளாக கடந்த 27 ஆண்டுகளாக இருக்கும் மக்கள் மீண்டும் இலங்கைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டால் அவர்களது வாழ்வும் கேள்விக் குறியாகவேதான் இருக்கும்.

ஏனெனில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மக்கள் பகுதி நேர ஜெயில் கைதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர். காலை ஆறுமணிக்கு வெளியில் சென்றால் மாலை ஆறுமணிக்குள் தங்களது முகாமுக்குத் திரும்பிவிட வேண்டும். சரியான கல்வி கிடையாது. தமிழ் மீடியத்தில் அருகில் இருக்கும் பாடசாலையில் ஆறு அல்லது ஏழுவரை படித்துப் பாதியில் நிறுத்திக் கொண்டவர்கள்தான் அதிகமாக இருக்கின்றனர்.

எவ்வித தொழிலும் தெரியாது. கல்வியும், ஆங்கில அறிவும் மிகவும் குறைவாக இருப்பதால் இலங்கைக்கு இவர்கள் மீண்டும் சென்றால் குறுக்கு வழியான ஆயுதத்தைத் தான் நாடவேண்டிய நிலை ஏற்படும்.

ஏறக்குறைய 25,000 இளைஞர்கள் (ஆண்,பெண்) இவ்விதம் அகதிகளாக இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் தொழிற் கல்;வி வழங்கப்பட்டால் அவர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பியதும் சொந்தமாக தொழில் செய்து வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.

இதன் மூலம் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் நற்பெயர் கிடைக்கும். இந்தத் திட்டத்துக்காக நாங்கள் தயாரித்துக்க் கொடுத்திருக்கும் இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் ப்ராஜக்ட் ரிப்போர்ட் (Project Report) சரியான ஒன்றாக இருக்கும் என்று கருதுகிறோம்.

நாங்கள் 1991 முதல் பிறைற் சொசைற்றி ((Bright Society) என்ற அமைப்பைப் பதிவு செய்து அதன் மூலம்தான் பெங்களுரில் “இந்திராகாந்தி சார்வதேச பாடசாலை” என்ற பெயரில் ஈழத்து அகதிகள் குழந்தைகளுக்காகவென பாடசாலை ஒன்றினை நடத்தி வருகிறோம். இப்பாடசாலையில் இதுவரை 4500 ஈழத் தமிழ் அகதிக் குழந்தைகள் கல்வி கற்று மீண்டும் முகாம்களுக்கு வந்துள்ளனர். ஆதலால் மேற்சொன்ன திட்டத்தை நிறைவேற்றுவதற்கான தகுதிகள் எமக்கு இருக்கின்றன. இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் நாம் நம்பிக்கையாகவே இன்றுவரை இருந்து வருகிறோம். இந்தத் திட்டத்துக்கு தாங்கள் உதவியும், அனுமதியும் வழங்கும் பட்டசத்தில் ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவும் தமிழகமும் செய்த பேரூதவிகளில் சிறந்த உதவிகளில் இதுவும் ஒன்றாக அமையும் என்று நம்புகிறோம்.

தங்களின் ஆட்சிக் காலத்தில் இவற்றினைச் செய்து ஈழ அகதிகளை வாழவைத்தால் தமிழினம் இருக்கும் வரை ஈழத் தமிழர்களாகிய நாம் தங்களுக்கு நன்றியாளர்களாக இருப்போம்.

நன்றி!

இவ்வண்ணம், 
ஞா. ஞானசேகரன்
தலைவர்,
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி
(ஈ.என்.டி.எல். எப்.)


        நகல்:- (01)  மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்கள்,
                     தமிழ்நாடு அரசு, சென்னை.

             (02) உயர்திரு. தீனபந்து அவர்கள், 
                     முதன்மைச் செயலாளர்,
                   (ஆணையாளர், மறுவாழ்வுத்துறை ஆணையாளர்   அலுவலகம் மற்றும் வெளி மாநிலம் வாழ் தமிழர்                         
                    நலத்துறை)

No comments:

Post a Comment