Translate

Friday 26 August 2011

மறைந்த தலைவர் “ஜாக் லேற்றன்” …சில நினைவுகள்


நடராஜா முரளிதரன்

இரண்டரை வருடங்களுக்கு முன் இலங்கையில் போர் உச்சம் பெற்ற காலகட்டங்களின் போது உலகெங்கும் வாழ்ந்த தமிழர்கள் தங்கள் உறவுகளைக் காப்பதற்காக  மிகப்பெரியளவில் மேற்கு நாடுகளின் வீதிகளில், நாடாளுமன்றங்களுக்கு முன்னால்,  தூதுவரலாயங்களுக்கு  முன்னால்,  என்றெல்லாம் திரண்டார்கள். அவ்வாறு திரண்ட மக்களின் கோரிக்கைகளை மனிதநேயத்தோடு மட்டுமல்லாது சமூக நீதி குறித்த பிரக்ஞையோடும் இணைத்து  அணுகிய மேற்கத்தேய அரசியல்வாதிகள் மிகச்சிலரே. அவ்வாறு புறப்பட்டவர்களில் அழிய முடியாத வரலாற்று நினைவுகளைத் தொகுத்துத் தருகின்ற மனிதனாக நான் “ஜாக் லேற்றனை” எண்ணுகின்றேன்.

“ஜாக் லேற்றனின்” தந்தையார் பழமைவாதக் கொள்கைகளைக் கொண்ட “கன்சர்வேடிவ்” கட்சியுடன்  நெருங்கிய பிணைப்புக்களைக் கொண்டிருந்த போதிலும்  “ஜாக் லேற்றன்”  என்டிபி கட்சியிலேயே தன்னை இணைத்துக் கொண்டார். இதற்குக்  காரணமான   நிகழ்வு , 1970 இல் “ரூடோவால்” பிறப்பிக்கப்பட்ட கியூபெக் இராணுவச் சட்டப் பிரகடனமே.  “ரொமி டக்ளஸ்” தலைமையின்  கீழ், அன்றிருந்த என்டிபி (புதிய ஜனநாயகக் கட்சி) கட்சி கடுமையாக எதிர்த்தது அச்சட்டத்தை. 
கியூபெக் பிரிவினைக்காகப் போராடிய தீவிரவாதிகளின்  ஒரு சிறிய குழுவினர்   கியூபெக்கின் விடுதலையை வலியுறுத்தி   இரண்டு முக்கிய பிரமுகர்களைக்  கடத்தியிருந்தார்கள். இது கனடிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது.  அதற்குப் பதிலடியாகப்   பிரதம மந்திரி “பியாரே ரூடோ” பிறப்பித்த  இராணுவ சட்டத்தின்  பிரகாரம்   நூற்றுக்கணக்கான பிரெஞ்சு மொழி பேசும் பிரிவினைக் கோரிக்கையை வரித்துக் கொண்ட மக்கள் கைது செய்யப்பட்டுச்  சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். 

ஆனால் அடைக்கப்பட்டவர்களில் எவருக்குமே அந்தக் கடத்தல் சம்பவத்துடன் எத்தகைய தொடர்பும் இருக்கவில்லை. ஆயினும் கியூபெக் பிரெஞ்சு மக்களின் பிரிவினைக் கோரிக்கைக்கான சுதந்திர எழுச்சியை அடக்குவதற்கான ஒரு திட்டமாகவே இராணுவச் சட்டமும், கைதுகளும் சுதந்திரச் சிந்தனையாளர்களால் நோக்கப்பட்டது. அத்தகையவர்களில் ஒருவராகத் தன்னையும்    ஆக்கிக் கொண்ட இளம் பராயத்து “ஜாக் லேற்றன்” அரசியலுக்குள் தன் பார்வையைப் பதித்துக் கொள்கிறார்.

இந்தப் பிரச்சினை  சோசலிசப்  பிரச்சினையோ  அல்லது இடதுசாரிப் பிரச்சினையோ அல்ல.   இது சிவில் உரிமைகள்  சார்ந்த  விடயமாக இருந்தது. பிரிவினைவாதம் கோரிய தீவிரவாதிகளை மட்டுமல்லாது கனடியப் பொதுமக்கள் அனைவரினதும் சுயேச்சையான உணர்வுமூலங்களைக் கட்டுப்படுத்தவல்லதாக நடைமுறைப்படுத்தப்படக் கூடிய வல்லமை வாய்ந்தது அச்சட்டம்.  அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த  உறுப்பினர்களில் ஓர் சிறிய தொகையினர் இந்தச் சட்டமூலத்தினால்  அதிர்ச்சி அடைந்திருந்தார்கள்.  அந்த வேளைகளின் போதுதான் “ரொமி டக்ளஸ்” தலைமையின் கீழ் அன்றிருந்த  என்டிபி கட்சி பகிரங்கமாக எழுந்து நின்று “ரூடோவை” ஆக்கிரோசமாக எதிர்த்தது. என்டிபியின் அத்தகைய நடவடிக்கைக்கு நாடு தழுவிய பேராதரவு அன்றைய சூழ்நிலையில் கனடியப் பொதுமக்களிடம் இல்லாத போதிலும்    அதன் பின்  விளைவுகளை அறிந்து செயல்பட்டவர்கள் என்டிபி கட்சியினர் மாத்திரமே.

“ஜாக் லேற்றன்” நிச்சயமாகத் தன்னை ஓர் சோசலிசவாதியாகவே அன்றும், என்றும் கருதிக் கொள்பவர்.    செல்வமற்ற மற்றும் அதிகார நெம்புகோல்களின்  ஆதரவில்லாமல் அல்லறும் மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளே அவரை அரசியல் உள்ளே ஈர்த்தது என்று கூற வேண்டும். 
சமூகப் பிரச்சினைகளோடு பிணைந்த நீதிக்கான அவரது ஆர்வத்தையும் கிளர்வுறும் தன்மையையும் கண்டு கொள்ளும் ஒருவருக்கு அவரை ஒரு “மரபுசார் பொதுவுடமைவாதி” என்ற சட்டகத்தில் முடக்குவதற்கு அப்பால் இடது முகாமில் தரித்திருக்கும்  “பிரெஞ்சுப் புரட்சி” விளைத்த மனே உணர்வுகளைக் கொண்ட மனிதனாகக் காணுதலே சாத்தியமானது என்று பத்தி எழுத்தாளர் சுiஉம ளுயடரவin நோக்குகிறார்.

இவர் கட்சி அரசியலுக்குள் தன்னைத் தீவிரமாக  நுழைத்துக் கொண்ட வேளைகள் சோசலிசச் கொள்கைகள் பால் மக்களுக்கிருந்த ஈர்ப்பு மங்கி  சமூக நீதி குறித்த ஆர்வம் தளைத்தோங்கிய காலகட்டம். எனவே செயல் வீரரான இவருக்கு ஒதுக்கப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள் என்ற தொகுதியைச் சார்ந்த விளிம்புநிலையாளர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான போராட்ட தளத்தில் பெருவிருப்போடு செயற்படுதல் சாத்தியமாயிற்று.
“ஜாக் லேற்றன்” வாதாட்ட களத்தில் எதிர்தரப்பினரின் கருத்துக்களை மிகச் சுலபமாக எதிர்கொண்டு முறியடிக்கும் திறன் படைத்தவராக விளங்கினார். எனவே பிரச்சினைக்குரிய களங்கள் தோறும் விவாத மேடையைத் தோற்றுவித்து அங்கு ஒடுக்கப்பட்டவர்களின் நீதியை நிலைநாட்டுவதற்கான கருத்துருவாக்கத்தை உருவாக்குவது அவரது நடைமுறை உபாயமாக இருந்தது. 

 “ஜாக்” ஏதாவது பணியை ஏற்றுக் கொண்டாரெனில் அந்தப் பணியை வெறியோடு முன்னெடுப்பதில் இன்பம் காண்பவர்.  நீதி மறுக்கப்பட்டவர்களுக்காகக்  குரல் கொடுக்கும் “ஜாக்”  அவர்களால்   தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாகவும் தனது பங்கைச் செய்யவிழைகின்றார் என்பதையும் நாங்கள் ஒப்பீடு செய்தலுக்கூடாகவே அவருடைய பன்முகப்பட்ட அரசியல் பரிமாணத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

மக்களோடு எப்போதும் கலந்திருப்பதில் பிரியப்படும் அவர் தன்னுடைய நிகழ்ச்சிநிரலை எப்போதும் நிறைத்தும் கொள்ளும் விதமாகவே செயற்படுவார். தனிமையை விரும்பாதவர். ஏன் அதனை வெறுப்பவர் என்றே கூறிவிடலாம். எனவே அவரது நாட்குறிப்பில் ஏதாவது வெறுமை தென்பட்டால் ஏதாவது ஓர் நிகழ்ச்சியைப் புகுத்தி அதனுள் இரண்டறக் கலந்து விடுதல் என்ற செயற்பாட்டுத் திறனுக்கூடாகவே புகழ் மலையின் உச்சிக்குச் சென்ற கனடிய அரசியல்வாதியாக எதிர்கால வரலாறு அவரை அழைக்கும்.

அரசியல்வாதிகள் எவருக்குமே வாய்த்திருக்கும் தாங்கள் குறித்த மேம்பாட்டு மனோபாவம், தன்முனைப்பு, அதிகார உச்சியைக் கைப்பற்றிக் கொள்வதற்கான அவா , சுயநலத்துடன் கூடிய அகம்பாவம்  ஆகிய  அம்சங்கள் அனைத்தையுமே புறந்தள்ளிய அரசியல் தலைவனாக “ஜாக் லேற்றன்” பரிணாமம் பெறுவதன் மூலம் கனடிய இளஞ்சந்ததியினருக்கு அரசியல் குறித்த நம்பிக்கையை ஊட்டிச் செல்கிறார். 

 உடல் நலக்குறைவு காரணமாக அவரது   நீண்ட கால அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டெழுந்த செயல்பாடு குறைந்து கொண்டு வந்தது.   அவரது மிகப் பெரிய அரசியல் வெற்றி ஈட்டப்பட்டு  மிகவும் குறைந்த கால எல்லைக்குள் தனது அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடர வேண்டிய அவர் அதனைக் கைவிட்டு அடுத்த கட்டத் தலைவரைத் தானே நியமிக்கும் படியான நடவடிக்கைக்கு உந்தப்படுகின்றார். நான் ஏறத்தாள மூன்று தடவைகள் அவரை நெருங்கி நின்று அவதானித்திருக்கின்றேன். அவரது புன்னகை தவழும்   வதனத்திலிருந்து எழுகின்ற வசீகரமும் தன்னோடு பேசுகின்ற மனிதர்களை அவர் அரவணைத்து உரையாடுகின்ற பாங்கும் வெறும் அரசியல் நடிப்பாக எனக்குத் தோற்றம் தரவில்லை. மாறாக அது அவரது இதயத்தின் ஆழத்திலிருந்து பொங்கிப் பிரவகிக்கின்ற அன்பின் ஊற்றாகவே பெருக்கெடுத்தோடியது.

அடுத்து அவர் மேடையிலே உரையாற்றுகின்ற போது தமிழின் மிகச்சிறந்த பேச்சாளர்கள் நுனிக்காலிலே நின்று கொண்டு சுழன்று கொண்டு அவையோர் அனைவரையும் வாரியெடுத்து உணர்ச்சி ததும்பப் பேசுகின்றது  போன்ற பாவனை அவரிடமும் இருப்பது என் மனக்கண் முன் தோன்றுவது வழக்கம். அத்தகைய கட்டையான கம்பீரம் நிறைந்த “யாக்” இறுதியாக உருக்குலைந்து , குரல் தாழ்ந்து , பேச்சின் சக்தி இழந்து தனது நோயின் கொடூரத்தால் தலைமைப்பதவியிலிருந்து ஒதுங்குகிறேன் என்று தொலைக்காட்சியில் தோன்றிக் கூறியபோது அவரது ஆதரவாளர்களின்  நெஞ்சு அறுபட்டுத் துடித்திருக்கும். ஒரு ஆற்றல் படைத்த அரசியல்வாதியின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டிருப்பதாகவே கட்டியம் கூறியது அக்கணங்கள்.

“கியூபெக்” மாகாண  வாக்காளர்களை    அவர் தான் பேசிய பிரஞ்சு மொழியின் வன்மையையினால் வசியம் செய்தார் என்று சொல்லலாம்.  தொலைக்காட்சியிலே இடம்பெற்ற பிரெஞ்சு மொழியிலான விவாதத்தின்போது பிரெஞ்சு மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட “புளொக் கியூபெக்குவா” கட்சியின் தலைவர் “டுசெப்பேயை” தனது பிரெஞ்சு மொழிச் சாதுரியத்தினாலும், வாதத்திறனாலும் அவர் மடக்கி வீழ்த்தியபோது “யாக்” மாஜா ஜாலம் ஏதும் நிகழ்த்துகின்றாரோ என்று எண்ணத் தோன்றியது. மேலும் “ஜாக்” தனது துணைவியாரின் தாய் மொழியான “கன்ரனிஷ்” மொழியையும் சரளமாகப் பேசும் திறன் படைத்தவர்.

“ஜாக் லேற்றனின்” இந்த எழுச்சி லிபரலைப் பலவீனமாக்கிப் பெரும்பான்மை வலதுசாரி அரசாங்கத்தை ஆட்சிக்கட்டில் ஏற்றுவதற்கு உதவி புரிகின்றதல்லவா? என்ற வாதத்தையும் தோற்றுவித்திருந்தது தேர்தல் காலகட்டத்தில். தேர்தல் அரசியலில் ஈடுபடும் ஒருவர்  வெற்றி என்ற இலக்கினை ஒட்டியே செயற்பட முடியும். அவரது பார்வையில் “லிபரலும்” ஒருவகை வலதுசாரிப் பாதையில்  சென்று கொண்டிருப்பதாகவே உணர்ந்திருந்தார். அதற்காக அவர் முன்வைத்த வாதங்களில் பல உண்மைகளும் இருந்தன.

அரசியல் விஞ்ஞானத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற “ஜாக்” பன்மைத்துவப் பண்பாட்டின் தோழன். மூன்றாம் உலக நாடுகளினதும் , வறிய ஆபிரிக்க நாடுகளினதும் ஏற்றத்தில் கனடா போன்ற முதலாம் உலகநாடுகள் ஆற்ற வேண்டிய பங்களிப்பின் தீவிரத்தை என்றும் வலியுறுத்திச் சளைக்காது போரிட்ட போராளி. சிறுபான்மை இனங்களை நேசித்த ஒரு கருணை மனிதன்.

சமத்துவம் படைத்த ஒரு நல்ல உலக சமுதாயத்தை உருவாக்கக் கனவு கண்ட அந்தக் கருணை மனிதனால் கடந்த  திங்களன்று வெளியிடப்பட்ட  இறுதி கடிதத்தில், ஒரு அற்புதமான  நம்பிக்கையுடைய தெளிவொன்று சுட்டிக்காட்டப்படுகிறது. அன்பு என்ற அந்த மகத்தான சொல் ஏற்றத்தாழ்வுகளை வென்று நம்பிக்கை ஒளியை ஊட்டி சமத்துவத்தை நிலவச் செய்து சுரண்டலை ஒழித்து உலகின் எல்லாச் சித்தாந்தங்களையும் விட வல்லமை வாய்ந்ததாகத் தன்னைப் பிரகடனப்படுத்துகிறது என்பதை இக்கடிதத்தை வாசிப்பவர்கள் உள்ளுணர்ந்த கொள்ள முடியும்.
இறுதியாக நான் இப்பத்தியை முடிக்குமுன் கனடிய “தமிழ் தொழிலாளர் கூட்டமைப்பு” மறைந்த தலைவர் “ஜாக் லேற்றனுக்கு” இறுதி அஞ்சலி செலுத்துமுகமாக விடுத்த அறிக்கையின் சில வாசகங்களை  இங்கு தருகின்றேன்.

“தொடர்ச்சியாக எமது சமூகத்தின் மீது அக்கறையைக் கொண்டிருந்த “ஜாக்”, கனேடிய அரசியலில் எமது சமூகத்திற்கான அரசியல் அந்தஸ்த்தைப் பெற்றுக் கொடுத்த கடந்த கனடியப் பொதுத் தேர்தலில் எமது சமூகத்தின் வெற்றிக்குப் பெரும் பங்காற்றினார். தான் கொண்டிருந்த நோயைப் பொருட்படுத்தாமல், காட்டிக் கொள்ளாமல் கட்சியின் வெற்றிக்காக உழைத்து வந்த “ஜாக்” நாடளாவிய ரீதியில் அனைத்து ஊடகங்களாலும் சூழப்பட்டு பிரபல்யம் பெற்றிருந்த வேளையிலும் கூட எமது வெற்றியை நிச்சயப்படுத்தும் உறுதியுடன் தனது நாடளாவிய பிரச்சார நடவடிக்கையை எம்மிடம் வந்து எம்முடன் நின்றே முடித்து வைத்தார். “ஜாக்கினது” எம்முடனான இறுதித் தேர்தல் பிரச்சார நிகழ்வே முதல் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் வரவை உறுதிப்படுத்தியது.”
;

No comments:

Post a Comment