ஆயிரம் மைல் கடந்து அன்னைதேசம் தனை பிரிந்து
அனாதைகளாய் ஆனபோதும்
அண்ணனாய் தம்பியாய் பிள்ளைகளாய் உற்ற உறவுகளாய்
என் உயிரிலும் மேலான தமிழ்தாயின் உச்சிமுகர்ந்து
அவள் தந்த தமிழ்ப்பாலின் பாசம் உணர்ந்து
புதுவை அண்ணாவை என் நெஞ்சில் வைத்து
காசி அண்ணாவின் கைபிடித்து
கவிதை நான் எழுதி வந்தேன் காலம் அறிந்து!
வீட்டிலே தமிழ்!
தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல்
தமிழ்மானம் போச்சு!
தமிழனாய் பிறந்தோம் என்று பெருமை பேசு-இல்லையேல்
தமிழினத்தின் அருமை போச்சு!
தமிழினத்தின் உயிர் மூச்சுதானே எங்கள் செம்மொழி
மூச்சையே நிறுத்திவிட்டால் இனம் வாழ ஏது வழி?
படலை திறந்து வந்தோம்
உடலை மட்டும் தானே கொண்டுவந்தோம்
உயிரும் உணர்வும் இப்போதும் அங்கேதானே!
சத்தியமாய் சொல்லுங்கள் எங்களின் கால் இடுக்கில்
இப்போதும் எங்கள் வீட்டின் முற்றத்து மண்தானே ஒட்டி இருக்கிறது.
அரியாலையில் இருந்தமாதிரி அவுஸ்திரேலியாவில் இருக்கமுடியாது
மேடைக்கு ஏற்ற வேசம் போட்டே ஆகவேண்டும்
ஆனாலும் தமிழன் என்ற அடையாளம் தொலைக்கப்படாது
அடையாளங்களை தொலைத்துவிட்டு அரைகுறையாய் வாழ்வதை விட
அட அம்மணமாக வாழ்வது எவ்வளோ மேல்!
ஒசி(Aussie) என்று சொல்வதில் சிலநேரம் எனக்கு பெருமை!
என்னதான் வெளுக்க "லோசன்"(lotion) போட்டாலும் என் தோல் கருமை!
கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னமாகாது அதுதான் உண்மை!
வீட்டிலே தமிழ்!
தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல்
தமிழ்மானம் போச்சு!
பிள்ளை ஒன்று பெருவதே பெரும்பாடு
என் பெற்றபிள்ளை தமிழ் மறந்தால் அது வெக்கக்கேடு!
தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல்
தமிழ்மானம் போச்சு!
பெற்ற பிள்ளைக்கு பீற்றர் என்றும் ஹரிபோட்டர் என்றும்
பெயர் வைச்சால் என்ர பிள்ளை என்ன மொழி பேசும்?
பீற்றரும் ஸ்ரெல்லாவும் "hi how are you " என்று பேசலாம்
தமிழரசியும் கலையரசியும் "hi how are you buddy" என்று சொன்னால்
என்னாகும் எங்கள் சந்ததி?
தமிழரசியின் பெயரில் மட்டுமே தமிழ்
அவள் மூச்சிலும் இல்லை பேச்சிலும் தமிழ் இல்லையே!
அது அவள் பிழை இல்லை! தழிழரசியை பெற்ற தந்தை என் பிழை!
Factory இல பட்டை அடி அடிச்சுப்போட்டு
பாசத்தோடு ஓடு வந்து முத்தமிட்டால்
"அப்பா" என்று சொன்னால்த்தானெ அந்த அலுப்பு தீரும்
அப்பதான் என்ர ஆயுளும் கூடும்
என்ர மூத்தது "Daddy i want ulunthu VADA" என்கிறான்
அட என்ர கடைக்குட்டி Mummy i want thanni... என்கிறாள்
தாலி கட்டியவளை "darling" என்றால்
என்ர பிள்ளை என்னப்பாத்து "dada" என்டுதான் சொல்லுவான்
காலம் போக என்னை "வாடா" என்பான்
மனம் நொந்து என்ன பலன்?
கட்டிலிலே தமிழ் மறந்தால்....
தொட்டிலிலே என்ன வரும்?
Mummy i want thanni......!!!
தமிழ்த்தாய் நொந்து போவாளே இதை எண்ணி
வீட்டிலே தமிழ்!
தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல்
தமிழ்மானம் போச்சு!
தாய்ப்பாலோடு சேர்த்து தமிழையும் ஊட்டுங்கள்
தாய்பாசத்தோடு சேர்த்து தமிழ்நேசத்தையும் காட்டுங்கள்
நாங்கள் எல்லாம் பூவரசம் கதியால்
புடுங்கி வந்து FRANCE இல் நட்டாலும்
பூக்கிறது பூவரசம் பூதான்!
ஆனால் இந்த பிஞ்சுகள் பூவரசம் பூவின் நிறம் அறியாத ரோஜாக்கண்டுகள்
விதை விதைக்கும் போது அவதானம்
இல்லையெனில் எங்களுக்குத்தான் அவமானம்!
NORWAY இல் இருந்து வந்த மூத்தவளின் இளையதும்
FRANCE இல் இருந்து வந்த இளையவனின் கடைசியும்
என்ன மொழியில் பேசுவது என்று தெரியாமல் முழிக்கும்..!!!
என்ர அப்புவுக்கு ஆயிரம் டொலர் தேவையில்லை
தன்ர பேரன் தமிழ் பேசவேண்டும்
அப்பதான் அப்புவின் அடிவயிறு குளிரும்
ஆங்கிலம் பேச வேண்டாம் எண்டு குதர்க்கம் பேசவில்லை
ஆங்கிலம் என்பது அவசிய மொழிதான் - ஆனால்
அன்னை மொழியை ஆங்கிலம் திண்டால்
அடுத்த சந்ததி தமிழ் மறந்தால்
யாருக்கு வேதனை?
தமிழ் இனத்தை அழிக்க ஆரும் தேவையில்லை
மொழியை மறந்தால் தமிழ் இனம் தானாய் அழியாதோ?
தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல்
தமிழ்மானம் போச்சு!
எத்தனை ஆயிரம் உயிர்விலை கொடுத்து
செங்குருதி ஊற்றி வளர்த்த மொழியல்லோ எங்கள் தாய்மொழி
தமிழ் இனத்தின் விழிதானே எங்கள் தமிழ்மொழி
அடிபடுவம் பிடிபடுவம் புடுங்குப்படுவம்- ஆனால்
தமிழீழம்,தலைவன்,தமிழ் எண்டால்
தம்பியாய் தங்கையாய் அண்ணனாய் ஒண்டா நிப்பம்!
தாயை பழித்தவனின் நாக்கைதான் அறுப்போம்.
தாய் மொழியை பழித்தவனின் தலையையே அறுப்போம்.
நாளைய இந்த சந்ததி தமிழ் மறந்தால் நாறிப்போகாதோ நம் இனம்?
இளைய சந்ததிக்கு இது புரிந்தால் இன்னும் தலைனிமிரும் எம் இனம்.
தாய் பிறந்த தேசத்தின் வாசம் அறியாத இந்த பிஞ்சுகள் சில
தமிழீழத்தின் மேலும் தமிழின் மேலும் கொண்ட பாசம்
அப்பழுக்கில்லாத ஆழ்ந்த நேசம்.!
விடுதலை மீதும் அண்ணனின் மீதும் இவர்கள் காட்டும் பாசம்
எங்களில் சிலர் போடும் வேசத்திலும் பெரியது!
வாய்க்கால் வெட்டி வளிந்தோடும் இந்த நீருக்கு வழிகாட்டுங்கள்
வளர்க்கிற போதே வாய்க்கு வாய் தமிழ் சொல்லி வளருங்கள்
வெளியில என்ன மொழியையும் பேசுங்கோ
விட்டில மறக்காமல் தமிழையே பேசுங்கோ
Mummy i want thanni......!!!
தமிழ்த்தாய் நொந்து போவாளே இதை எண்ணி
வீட்டிலே தமிழ்!
தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல்
தமிழ்மானம் போச்சு!
-தமிழ்ப்பொடியன்-
09.08.2011
No comments:
Post a Comment