Translate

Thursday, 22 September 2011

நியூயோர்கில் திரளும் பொங்குதமிழ்: விடுதலை எட்டும்வரைப் போரடும் உறுதிப்பாட்டினை உலகிற்கு சொல்லட்டும்!

ஐநா பொதுச்சபையின் 66வது உயர்மட்டச் சந்திப்பிற்காக உலக அரசுகளின்  தலைவர்கள் கூடியுள்ள நியூயோர்க் ஐக்கியநாடுகள் அரங்கம் முன்பாக பொங்குதமிழ் நிகழ்வினை நிகழ்த்திட ஒன்றுதிரளவுள்ள அமெரிக்க – கனேடிய தமிழ் சமூகங்களுக்கு பிரான்சு தமிழ்சமூகத்துடன் இணைந்து தமிழர் நடுவம் வாழ்த்துக்களையும், ஆதரவினையும் வழங்குகின்றது.


நாடுகடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்த எழுச்சி நிகழ்வு சிங்கள பேரினவாத அரசு தமிழீழ மக்களிற்கு எதிராக மேற்கொண்ட இனஅழிப்பு – போர்க்குற்றங்களை முன்னிலைப்படுத்தி சர்வதேச சமூகமானது செயற்படல் வேண்டும் என்கின்ற  உந்துதலை ஏற்படுத்துவதுடன்,  உலகின் முதன்மை மன்றத்தின் - முதன்மை அமர்வின் முன்பாக தமிழர்கள் ஒன்றுதிரள்வது சிங்கள அரசுவினை தப்பிக்கவிடாது நிர்ப்பந்திக்கும் நிகழ்வாகவும் அமைகின்றது.

இன்று பாலஸ்தீனத்தின் அரசு அமைவது தொடர்பான முக்கிய விவாதங்களை இந்த ஐநா 66வது கூட்டத்தொடரில்  நிகழ்த்திவரும் உலகத்தலைவர்கள், ஐநா அரங்கிற்கு வெளியே நாடுகடந்த தமிழீழ அரசு முன்வைக்கின்ற நீதிக்கும், சர்வதேச நியதிகளுக்குட்பட்ட சுதந்திரத்திற்குமான கோரிக்கைகளையும் கேட்க வேண்டும் என்ற நிலையானது இந்த பொங்குதமிழ் ஊடாக உருவாக்கபட்டுள்ளது.

அமெரிக்க – கனேடிய தமிழ்சமூகம் ஒன்று திரண்டு நிகழ்த்தும் இந்த எழுச்சியானது,  உரிமைக்காகப் போராடுவது என்கின்ற தமிழர் பொதுஉறுதிப்பாட்டினை  சிங்கள அரசுக்கு மட்டுமல்ல ஐநா நிகழ்வில் பங்கேற்கும் இந்திய, ஐரோப்பிய, அமெரிக்கத்தலைவர்களுக்கும்  தெரிவிப்பதாக அமையும். 

நன்றி

தமிழர் நடுவம் 

No comments:

Post a Comment