Translate

Friday 7 October 2011

மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழு பிரான்ஸ் - 2011

அன்புள்ள பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களே,


மக்களின் விடுதலைக்காகப் போராடி உயிரையே ஈகம் செய்த உன்னதமான விடுதலைவீரர்களை மாவீரர்களாகப் போற்றி வழிபடும் உயரிய பண்பாட்டினை செலுமையூட்டி – அதனை அரசியல், சமூக, பண்பாட்டு முக்கியத்துவம் மிக்க நிகழ்வாக்கியவர்கள் தமிழீழ மக்களும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமுமாகும். எமது தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்ட  இந்தப் பாரம்பரியம் காலஓட்டத்தில் விரிவடைந்து முழு மக்கள் திரளையும் ஒன்றிணைக்கும் உணர்வும் - உயிரும் கொண்ட நிகழ்வாகியுள்ளது. 



இந்த நிகழ்வு 2009ல் தமிழீழ விடுதலைப் போரட்டமும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமும் எதிர்கொண்ட நெருக்கடிகளினால் பலவித சிக்கல்களை எதிர்கொண்டது. முழு மக்களின் நிகழ்வு -  தமிழீழ விடுதலை இலட்சியத்தினை சுமந்த நிகழ்வு -  தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைக்கும் அரசியல் வெளிப்பாடுகளை ஒன்றுபட்டு வெளிப்படுத்தும் நிகழ்வு என்கின்ற ஒழுங்குமுறைகள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டது. கடந்த ஆண்டு மாவீரர்நாளன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைமைச் செயலக அறிக்கை மக்களைச் சென்றடைய முடியாத மிகமோசமான நிலைமை ஏற்பட்டது.

இந்த நெருக்கடிகளை களைந்து, ஒன்றுபட்ட தமிழ்மக்களின் நிகழ்வாகவும் - ஒன்றுபட்ட அரசியல் செய்தியினை தமிழீழத்தில் வாழும் மக்கள் - புலம்பெயர்ந்து வாழும் மக்கள் - இறுதிவரை களத்தில் இரத்தமும், உணர்வும் கொடுத்த போராளிகளையும், பொதுமக்களையும் உள்ளடக்கிய நிகழ்வாகவும் - தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச்செயலகம் முன்வைக்கும் அரசியலை ஒன்றுதிரண்டு வலுப்படுத்தும்  அரசியல் ஒழுங்குமுறையை கடைப்பிடிக்கும் நிகழ்வாகவும் அமைய வேண்டிய தேவை புலம்பெயர்ந்து வாழும் அனைவர் முன்பாகவும் எழுந்தது.

இதன் காரணமாகவே, மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழு பல்வேறு நாடுகளில் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. அனைத்து தரப்புக்களையும் இந்த ஏற்பாட்டுக்குழவில் பங்கேற்குமாறு விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் அழைத்தது. இதற்கான பகிரங்க ஒன்றுகூடல்  நடத்தப்பட்டது. ஒன்றுபட்டுச் செயற்படுவது என்கின்ற வாக்குறுதிகள் மக்கள் முன்பாக வைக்கப்பட்டது.
இந்த வழிமுறைகளின் அடிப்படையில் ஒன்றுதிரண்ட மாவீரர்நாள் 2011 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் தமிழீழ மக்களின் விடுதலைக்கான போரட்டம் சர்வதேச மட்டத்தில் - சனநாயக வழிகளில் - காத்திரமான வடிவங்களில் இடம்பெறுவதற்கான தேவையை உணர்ந்தே இந்த மாவீரர்நாள் 2011 மக்கள் நிகழ்வாக ஒழுங்கமைக்கப்படுகின்றது.

எளிமையாகவும், உண்மைத்தன்மையுடனும், தலைவர் காட்டிய வழியில் பயணிக்கும் பண்பாட்டுடனும் இந்நிகழ்வில் அனைத்துத்தமிழ் சமூகமும் பங்கேற்க வேண்டும் என அன்புடன் வேண்டுகின்றோம்.!

மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழு பிரான்ஸ்.
தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம், 

No comments:

Post a Comment