- நகுலேஸ்வரன் நவரத்தினம், பிரிட்டன்
“இலங்கையில் தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு சம உரிமை
கொடுக்கப்படவில்லை. இதனை எதிர்த்து ஆயுதப் போராட்டம் பிரபாகரன் தலைமையில்
மேற்கொள்ளப்பட்டது. அவரது இயக்கம் ‘விடுதலைப்புலிகள்’ என்று அழைக்கப்படுகிறது.
அவர்கள் இலங்கை அரசுக்கு எதிராக தீவிரமாக, வீரமாக போராடினார்கள். இன்னும்
“பயங்கரவாதிகள்” என்றும் அவர்கள் கூறப்பட்டார்கள். இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே,
விடுதலைப்புலிகளை அழித்தல் என்ற பெயரில் தமிழ் மக்களை கொன்று குவித்தார்.”
இதுவே இன்றைய தமிழகத்தின் சாதாரண குடிமகன், இலங்கைத் தமிழர் நிலை பற்றி
கொண்டுள்ள எண்ணம். ஆனால், இது ஒரு வெளித் தோற்றமே.
இலங்கையின் உண்மையான நாட்டு நிலமை எவ்வாறு இருந்தது / இன்னும்
இருக்கிறது?அங்குள்ள தமிழ் மக்கள் ஏன் அமைதியாக வாழ முடியவில்லை?
சிங்களர்களுடன் எவ்வாறு பெரும் விரோதம் உருவாகியது? என்பன போன்ற அடிப்படை
விஷயங்களை தமிழ்நாடு வாழ் சாமானிய தமிழர்களும் தெரிந்துகொள்ளவேண்டும்.
முதலாவதாக, இலங்கையின் முப்படைகளைப் பற்றி அறிய வேண்டும். தரைப் படையான
ராணுவம், ஆகாயப் படையான விமானப் படை, கடல் மார்க்க கடற்படை என்பன கிட்டத்தட்ட
100 சதவீத சிங்களரைக் கொண்டதே. இந்தியாவைப் போல் “தேசிய” ராணுவம் என்று
சொல்லக்கூடியதாக அது அமைக்கப்படவில்லை. மாறாக, இலங்கையின் வடக்கு கிழக்கு
பகுதிகள் 100 சதவீத தமிழ் மக்களைக்கொண்ட பிரதேசங்களாகவே இருந்தன. அப்படியாயின்
நூறு சதவீத சிங்கள ராணுவத்தால் எவ்வாறு நூறு சதவீத வீத தமிழ் மக்கள் உள்ள
பகுதியில் அமைதியை கொண்டு வரமுடியும்?
அடுத்ததாக, தமிழ் மக்கள் அந்நியப்படுத்தப்பட்டு உள்ளார்கள் என்பது. அவர்களால்
நாம் இலங்கையர்கள் என உணர்வு கொள்ள முடியாதளவு இலங்கையின் அரசியல் செயல்பாடுகள்
அமைந்துவிட்டன. ஊடகங்களில் வெளிவரும், தமிழ்ப் பிரதேசங்களில் அதிபர் ராஜபக்ஷே
பேசிய அண்மைக்கால பேச்சுக்களிலிருந்து இதனைப் புரிந்து கொள்ளலாம். ஓர்
உதாரணத்துக்கு அக்டோபர் 19 ஆம் தேதி கிழக்கு மாகாணத்தில் அவர் ஆற்றிய பேச்சின்
ஒரு பகுதியைப் பாருங்கள்.
“எங்கள் பகுதிகளில் கூட இவ்வாறான ஒரு மிகப் பெரிய குடிநீர் திட்டம்
மேற்கொள்ளப்படவில்லை. உங்களுக்காக இந்தப் பெரிய மேம்பாட்டுத் திட்டத்தை
ஆரம்பித்துள்ளோம். உங்களுக்கு இருக்கின்ற எல்லா பிரச்னைகளும் நாங்கள் பேசித்
தீர்த்துக்கொள்ளக்கூடிய பிரச்னைகள்தான். உங்கள் பகுதிகளிலே நாங்கள் பெரிய
அளவில் வளர்ச்சித் திட்டங்களை செயற்படுத்தி வருகின்றோம். நாடு பூராகவும்
அபிவிருத்தி செயற்றிட்டங்களை அமுல்படுத்தி வருகின்றோம். ஆனால், நீங்கள் ஏனைய
பிரதேசங்களுக்குச் சென்று பார்த்தால் தெரியும், எந்தளவு பணம் செலவழித்து
நாங்கள் அபிவிருத்தி வேலைகளை செயற்படுத்துகின்றோம் என்று நீங்கள்
தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.”
இதில் தெளிவாகவே உங்கள், எங்கள் என்று தமிழர்களை வேறுபடுத்தி பேசுவது தெரியும்.
இவ்வகையாகப் பேசுவது இரு பகுதியனருக்கும் பழக்கப்பட்டதொன்றாகவே உள்ளது. இரு
இனங்கள் மட்டும் உள்ள ஒரு நாட்டில், நாடு முழுவதையும் ஆளும் ஓர் அதிபரிடம்
இப்படியான வெளிப்பாடு இருப்பின், அது எவ்வளவு தூரம் புரையோடிப்போனதாக உள்ளது?
மூன்றாவதாக மொழிப் பிரசனை. இலங்கை ஒரு சிறுநாடு. இந்தியாவை போன்று மாநில
அமைப்பு அங்கு இல்லை. பல விஷயங்கள் மத்தியப்படுத்தப்பட்டு உள்ளன. அதாவது
தலைநகர் கொழும்புவை மையமாக கொண்டு நடைபெறுகின்றன. அங்குள்ள அலுவலர்கள்
பெரும்பாலானவர்கள் (90% மேல்) ஆங்கிலம் கூட பேசத் தெரியாதவர்கள். தமிழ்ப்
பகுதிகளிலிருந்து செல்பவர்கள் 90 சதவீதத்தினர் சிங்களம் தெரியாதவர்கள். ஆனால்,
ஆங்கிலத்திலாவது வேண்டியதை தெரிவிக்கக் கூடியவர்கள். அதனால் கடவுச் சீட்டு,
ஓய்வூதியம் போன்ற விஷயங்களுக்கு தமது தேவைகளை மேற்கொள்ள கொழும்பு சென்று அல்லாட
வேண்டியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் தமிழோ ஆங்கிலமோ தெரிந்திருந்தாலும் கூட
அதிகாரிகள் சிங்கள மொழியிலேயே பேசும் நிலையும் உண்டு.
அரச சுற்றறிக்கைகள் கூட பல சந்தர்ப்பங்களில் சிங்கள மொழியில் மட்டுமே
வெளிவருவதுண்டு. இந்நிலைமை தமிழருக்கு பாதகமான இன்னொரு நிலையையும்
ஏற்படுத்துகிறது. அதாவது, வடக்கு கிழக்கு தவிர்ந்த அரச அமைப்புக்களில் வேலை
வெற்றிடம் வரும்போது, தெரிவு செய்யும் அதிகாரிகள் பெரும்பாலும் சிங்கள மொழியில்
மட்டுமே நேர்காணக் கூடியதாக இருப்பதால், சிங்கள மொழிப் புலமை உள்ளோரே
தெரிவாகும் வாய்ப்பு உள்ளது. இது தொடராக நடைபெற நாளடைவில் அரச அமைப்புகளில்
சிங்களம் மட்டும் பேசக்கூடியவர்களே இருக்கும் நிலை உண்டாகும். அவர்களால் தமிழ்
பேசுபவர்களை நேர் கண்டு வேலையில் அமர்த்த முடிவதில்லை.
அதாவது, தமிழ் பேசும் மக்கள் தமது பிரதேசம் தவிர்ந்து மத்திய அமைப்பில் வேலை
எடுப்பது போகப் போக சிறுகும். இந்தியாவில் ஒரு காலக்டர், அவர் எம்மாநிலத்தவராக
இருப்பினும் நாட்டின் எப்பகுதியிலும் கடமையாற்றுவார். இலங்கையில் அதற்கொப்பான
ஒரு பதவியில் சிங்களப் பகுதியில் ஒரு தமிழரைக் காண முடியாது. (50 வருடங்களுக்கு
முன்னர் அவ்வாறு இருந்தார்கள். 1983 இல் ஏற்பட்ட இனக் கலவரத்தின் பின்னர் நிலமை
முற்றிலும் மாய் மாறிவிட்டது.) இன்றைய பொழுதில் தமிழ்ப் பகுதி கட்டுப்பாட்டு
அதிகாரம் சிங்கள அதிகாரி, அநேகமாக ராணுவத்திலிருந்து வந்தவர், அல்லது ராணுவத்
தலைவராகவே இருக்கிறார் – அது வேறு விஷயம்.
ஆங்கிலேயரிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றபோது, இதற்கு முற்றிலும் மாறான
நிலை இருந்தது. நாடு முழுவதும் பெரிய அதிகாரப் பதவிகளில் தமிழர்களே
இருந்தார்கள். அப்பதவிகள் தகுதி அடிப்படையில் அடையப்பட்டவை. இதற்கு ஆங்கில
மொழிக்கல்வியும், அதனை அடிப்படையாகக் கொண்ட அரச கரும தொழிற்பாடும் ஏதுவாக
இருந்தது. இதனைச் சிங்கள அரசியல் கட்சிகள் எந்த அளவுக்கு பயன் படுத்தினார்கள்
என்றால், அதன் உச்சக்கட்டமாக 1958-ல் “24 மணி நேரத்தில் சிங்களம் மட்டும் அரச
கரும மொழியாக்குவோம்” என்ற அறைகூவலுடன் ஆட்சியை புதிய அரசியல் கட்சி ஒன்று
கைப்பற்றி இன்றுவரை அரசை அமக்கும் இரு பெருங்கட்சிகளுள் ஒன்றாக இருக்கிறது.
இவ்வளவு தூரம் இலங்கை பிளவுபட்டிருப்பதற்கு காலங்காலமாக அரசியல் கட்சிகளால்
நெய்யூட்டி வளர்க்கப்பட்ட மொழிப் பிரச்னையே காரணம்.
தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம், நில ஆக்கிரமிப்பு, பௌத்த மத திணிப்பு
எனும் சர்ச்சைக்குரிய பல விஷயங்கள் இருப்பினும், சிங்கள மக்களிடையே உள்ள
தமிழர்கள் பற்றிய அச்ச உணர்வை சொல்லியே ஆகவேண்டும். உலகளவில் தமிழ் மக்கள்
பரந்தும் ஒப்பீட்டளவில் மிக அதிகமாகவும் உள்ளனர். அதிலும் ஒரு கரை தாண்டி
இலங்கையை விட பரப்புக் கூடிய தமிழ் மாநிலம் இந்தியாவில் இருப்பது, இலங்கையில்
மட்டுமே வாழும் சிங்கள மக்களுக்கு பெரும் மனப்பிராந்தி. தமிழர்கள் ஓங்கினால்
தாம் ஒடுக்கப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தினால் அவர்களை ஒடுக்கி வைப்பதாலேயே
நிம்மதி அடைகிறார்கள் என்ற எண்ணத்தை உருவாக்குவதாக அவர்கள் நடத்தை அமைந்துள்ளது
என்றும் சொல்லலாம்.
No comments:
Post a Comment