Translate

Monday 3 October 2011

வடமாகாணத்திற்கு படையெடுத்து வந்த வங்கிகளின் தமிழ் விரோத செயற்பாடுகள்!- பேராசிரியர் இரா.சிவசந்திரன்


வன்னி யுத்தத்திற்கு பின்னர் வடமாகாணத்தை அபிவிருத்தி செய்கின்றோம் என்ற கோஷத்துடன் படையெடுத்து வந்த பல்வேறு வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் இங்கு தமிழ் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதையிட்டு இங்குள்ள மக்கள் குழப்பமும், கவலையும் தெரிவிக்கின்றார்கள்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் யுத்தத்தின் பின்னர் ஏறத்தாழ 50ற்கும் மேற்பட்ட வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தமது கிளைகளை அமைத்துள்ளன.
ஏலவே இயங்கிய மக்கள் வங்கி, ஹற்றன் தேசிய வங்கி, இலங்கை வங்கி, செலான் வங்கி போன்றவற்றுடன் பல புதிய வங்கிகளும் இணைந்து பிரதேசங்கள் தோறும் தமது கிளைகளை அமைத்து பரவலாக்கியுள்ளன.
வங்கிகள் பிரதேசங்களில் அமைக்கப்படும் போது வடபகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமென பொதுவாக நம்பப்பட்டது. மிகக் குறைந்த பிரதேச இளைஞர்களே வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். பெருமளவு பணியாளர்கள் தென்பகுதியில் இருந்தே அழைத்து வரப்பட்டுள்ளனர்.
பொதுவாக பிரதேச வங்கிகளின் செயற்பாடு அந்த அந்த பிரதேச மக்களின் சேமிப்புக்களை வைப்பிலிட்டு அதனை பல்துறைசார் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முதலீடு செய்வதற்கு வழங்குவதாகும்.
புதிதாக தொழில் தொடங்குபவர்களிற்கும், விவசாயிகளுக்கும், கிராமிய கைத்தொழில் முயற்சியாளர்களுக்கும், விவசாயத்தை அபிவிருத்தி செய்யும் திட்டங்களுக்கும், மீன்பிடியை மேம்படுத்தும் திட்டங்களுக்கும் குறைந்த வட்டியில் இலகு கடன்களை வழங்கி அதனை அபிவிருத்தி செய்ய உதவுவதே இவ் வங்கிகளின் முக்கிய பணியாகும்.
தற்போது இரண்டு வருடங்களாக வடமாகாணத்தில் இயங்கும் இவ்வகையான வங்கிகள் இவ்வாறான திட்டங்களை நல்லமுறையில் மக்கள் விரும்பும் வண்ணம் மேற்கொள்வதாக தெரியவில்லை.
புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்கள் இங்கு அனுப்பும் பணத்தை வைப்பிலிடும் வாய்ப்பை பெறலாம் என்ற நோக்கிலேயே இவ் வங்கிகள் இங்கு படையெடுத்தன என்று பொருளியல் நிபுணர்கள் கூறினர்.
இப்பணத்தை பெற்று இப்பிரதேச அபிவிருத்திக்கான நிதி ஆதாரத்தைக் கொடுப்பதற்கு மாறாக தென்பகுதிக்கு அனுப்பும் செயற்பாடுகளிலேயே இவை பெரிதும் கவனம் கொள்கின்றன என்று பொருளியல் நிபுணர்கள் தற்போது கருதுகின்றார்கள்.
இது உண்மையில் பிரதேச அபிவிருத்திக்கான வழிமுறையல்ல. இது தமிழ் மக்களின் பணத்தை தென்பகுதிக்கு எடுத்துச் செல்லும் மறைமுக செயற்பாடே என இவர்கள் குறைபட்டுக் கொள்கின்றார்கள்.
மேற்படி வங்கிகள் தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல தமிழ் மொழிக்கு எதிரான இன்னொரு கைங்கரியத்தையும் மிகவும் நாசூக்காக செய்து வருகின்றன.
உதாரணமாக மக்கள் வங்கி 20ற்கு மேற்பட்ட புதிய சேமிப்புக் கணக்குகளையும், கடன் வழங்கும் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியது. இவற்றைப்பற்றிக் குறிப்பிடும் தலைப்புகள் சிங்கள மொழியிலேயே விளம்பரப்படுத்தப்படுகின்றன. இதனை தமிழ் மக்கள் சிங்கள மொழி திணிப்பாகவே பார்க்கின்றனர்.
தமிழ் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களை மதிப்பதாயின் அவர்களின் தாய் மொழியிலேயே இப் பெயர்கள் சூட்டப்பட்டு அழைக்கப்படுதல் வேண்டும். மாறாக சிங்கள மொழி பெயர்களே திட்டமிட்டு தமிழில் புகுத்தப்படுகின்றன.
உதாரணமாக இசுரு உதான, சிசு உதான, ஜன ஜய, வனிதா வாசனா, போன்ற சேமிப்பு திட்டங்களும் குருசீதா, சௌபாக்கியா, கப்னிகா, கப்துரா, பாபசு, ஜெயனிவாசா, விதாதா, நவசாப்னி, கோவிசகன்யா போன்ற கடன் உதவித்திட்டங்களும் விளம்பரப்படுத்தப்படுகின்றன.
பரிணாத என்ற மூத்த பிரஜைகளின் வங்கிக்கணக்கினையும் இவ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அர்த்தம் புரியாமல் திண்டாடும் தமிழ் மக்கள் ஒரு புறம் இருக்க தமிழ் மொழியில் இவை வலுக்கட்டாயமாக திணிக்கப்படுவதாகவே இங்கு வாழும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.
ஹற்றன் தேசிய வங்கி, சிங்கிதி லாமா, சிங்கிதி ஹிரிக்கற்றியோ போன்ற சிறுவர்களுக்கான சேமிப்புக் கணக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறுவர்கள் இதன் அர்த்தத்தை பெற்றோரிடம் கேட்க அவர்களும் புரியாது முளிக்கின்றனர்.
யூனியன் வங்கி ரன்வன் என்ற கணக்கினையும், இலங்கை வங்கி காந்தாரண்நய, கித்துளு போன்றவற்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இச்சொற்களுக்கான அர்த்தம் புரியாதிருப்பதோடு இப் பெயர்களை உச்சரிப்பதும் தமிழ் மக்களுக்கு கடினமாக இருப்பதோடு தமிழ் மொழியில் இவற்றைத் திணிப்பதாகவே மக்கள் கருதுகின்றனர்.
இப்பிரதேச மக்களை நம்பி உருவாக்கப்பட்ட அரச, தனியார் நிறுவனங்களான இவை அப்பிரதேச மக்களின் மொழிக்கு உரிய கௌரவத்தை, மதிப்பைக் கொடுக்காமையையிட்டு மக்கள் தம் அதிருப்தியை தெரிவிக்கின்றார்கள்.
அண்மையில் தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சரவை அமைச்சரான திரு வாசுதேவ நாணயக்காரா அவர்கள் இரு மொழிகளும் சமமாக அமுல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை வழங்கியுள்ளார்.
அவ் அமைச்சின் தமிழ்மொழி அமுலாக்க ஆலோசகராக பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை கடமையாற்றுகின்றார். இவர்கள் இதனை திருத்தி நடைமுறைப்படுத்துவதற்கு வழிகாட்டுவார்களா
நீண்ட காலமாக தேசிய சிறுபான்மை மக்களின் நன்மதிப்பைப் பெற்ற திரு வாசுதேவ நாணயக்காரா அவர்கள் இதனை நிவர்த்தி செய்வார் என நம்புகின்றோம்.
தவறும் பட்சத்தில் வடபகுதி பிரதேச தமிழ்மக்கள் வங்கிகளின் இவ்வகையான கணக்கு திட்டங்களை புறக்கணித்து தமது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமென கோருகின்றோம்.
அரசியல் யாப்பில் சிங்கள மொழிக்குரிய சம அந்தஸ்து தமிழ் மொழிக்கும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. எழுத்தில் உள்ள இவற்றை முறையாக அமுல்நடத்தும்படியே நாம் கோரிக்கையை முன்வைக்கின்றோம்.
ஒருத்தர் பேசும் தாய் மொழியை அவமதிப்பது அவரது தாயை அவமதிப்பதற்கு ஒப்பானதாகும்.
சிங்கள மொழிக்கு கொடுக்கும் மதிப்பும், மரியாதையும், முக்கியத்துவமும் தமிழ் மொழிக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்றே தமிழ் பிரதேசத்தில் வாழும் மக்கள் கோருகின்றார்கள்.
அவர்கள் கோரிக்கை தவறென கூறுவோர் யாருளர்?

http://www.tamilwin.com/view.php?20cIBV40e1jCUcebiGRXdbdF9qsbdc8233ec41pa2043oQH3223PLk22

No comments:

Post a Comment