Translate

Thursday 20 October 2011

இலங்கைக்கான கனடியத் தூதுவரை மீள அழைக்க வேண்டுமென கனடிய அரசினரிடம் வேண்டுகோள்


இலங்கைக்கான கனடியத் தூதுவரை மீள அழைக்க வேண்டுமெனவும், இலங்கையைப் பொதுநலவாய அமைப்பிலிருந்து வெளியேற்ற வேண்டுமெனவும் மனித உரிமைகளுக்கான
கனடியத்தமிழ் முதியோர் கனடிய அரசினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
"யுத்தக்குற்றம் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றம் புரிந்த இலங்கை ஆட்சிக்கெதிராக கனடியப் பிரதமர் திரு. ஸ்ரிபன் காப்பர் அவர்களும், கனடிய வெளிவிவகார அமைச்சர் திரு. யோன் பெயாட் அவர்களும் தாங்கள் வாக்குறுதி அளித்தவாறு இலங்கை அரசுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு இது ஒரு உகந்த நேரமாகும்" என்று மனித உரிமைகளுக்கான கனடியத்தமிழ் முதியோர் அமைப்பின் பணிப்பாளர்களில் ஒருவரான திரு.குமார் இராசிங்கம் அவர்கள் கூறினார்கள்.

இலங்கை அரசானது தான்புரிந்த மனிதப்படுகொலைகளுக்கு எதிராக எதுவித நம்பத்தகுந்த விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கோ அல்லது ஐக்கிய நாடுகள் ஆலோசனைச் சபையின் சிபார்சுகளையோ நடமுறைப்படுத்தாமல் தொடர்ந்து கனடாவிற்கெதிராகத் தேவையற்ற அறிக்கைகளை விடுவதனால் இலங்கைக்கான கனடியத்தூதுவரை மீள அழைப்பதோடு இலங்கையைப் பொதுநலவாய அமைப்பிலிருந்தும் வெளியேற்றுவதற்கு எமது கனடிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை ஆட்சியாளர்கள் இதற்குமுன்பும் கனடாவிற்கெதிராக வேண்டத்தகாத பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை எமது அரசானது கவனத்தில் எடுக்கவேண்டும்.
அவையாவன; 1) 2009 ம் ஆண்டு மே மாதம் 27ந் திகதி கொழும்பிலுள்ள கனடியத் தூதுவராலயத்தை, சிங்களக் காடையர் கூட்டம் சிங்களப் பொலிசார் மேலிட உத்தரவுக்கமைய எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் வெறுமனே பார்த்திருக்க அடித்து நொருக்கியதோடு ஊழியர்களுக்கும் உயிர் அச்சுறுத்தலை விடுத்திருந்தார்கள். இதையிட்டு கனடிய அரசானது இலங்கை அரசிற்கு எதிராகவும், பாதுகாப்புத் தரப்பினருக்கு எதிராகவும் தனது கடுமையான ஆட்சேபனையைத் தெரியப்படுத்தியது.

2) கனடாவின் மதிப்புமிக்க முக்கிய அரசியல் வாதியும், லிபரல் கட்சியின் வெளிவிவகாரத் துறையின் விமர்சகருமான திரு. பொப் றே அவர்கள் 2009ம் ஆண்டு ஆனிமாதம் 10ந் திகதி உரிய விசாவுடன் இலங்கை சென்றபோது, இவரினால் இலங்கையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற பொய்யான காரணத்தைக்கூறி உள்ளே அனுமதிக்காமல், 12 மணித்தியாலங்கள் காத்திருக்கவைத்துத் திருப்பியனுப்பியுள்ளார்கள். கனடிய மக்களுக்கு நேர்ந்த அவமானமாக நாங்கள் இதைக் கருதுகின்றோம்.

3) கொன்சவேற்றிக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. பற்றிக் பிறவுண் அவர்களுக்கும், திரு. போல் கலன்றா அவர்களுக்கும் 2009ம் ஆண்டு ஐப்பசி மாதமளவில் இலங்கை செல்வதற்கான அனுமதிவிசா இலங்கைத் தூதரகத்தினால் மறுக்கப்பட்டுள்ளது. இதையிட்டு திரு. பற்றிக் பிறவுண் அவர்கள் தனது ஆட்சேபனையை வெளியிட்டிருந்தார்கள்.

இலங்கை அரசானது ஐக்கிய நாடுகள் ஆலோசனக்குழுவின் சிபார்சுகளை ஏற்று, சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவாறு சுதந்திரமான ஓர் விசாரணைச் சபையை அமைக்கும்வரை இலங்கையை பொதுநலவாய அமைப்பிலிருந்து வெளியேற்றி வைக்கவேண்டும். ஏனைய உறுப்பு நாடுகளுக்கு வழிகாட்டியாக கனடாவானது செயற்பட்டு இலங்கைகெதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்று வேண்டுகின்றோம்.

No comments:

Post a Comment