Translate

Thursday, 20 October 2011

போருக்குப் பிறகான சூழலும் சர்வதேசமும்


போருக்குப் பிறகான சூழலும் சர்வதேசமும்



போருக்கு பிறகான அய்.நாவின் மனித உரிமை அமர்வில் அமெரிக்கா-மேற்குலகம் சார்ந்த அரசுகள் சாராத எதிர் கூட்டணி (இக்கூட்டணியும் ஈழ ஆதரவிற்காகவன்றி தத்தமது ஆளும்வர்க்க நலனுக்கு சார்பாக உருவானதுதான்) இந்தியாவின் பெரும் முயற்சியினால் முறியடிக்கப்பட்டது. இலங்கைக்கு ஆதரவாக கொணரப்பட்ட இந்த தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்க-மேற்குலக எதிர்ப்பு மற்றும் முன்னால் எதிர்ப்பு நாடுகளின் ஆதிக்கம் அதிகமிருந்தது. இதன் மூலம் இலங்கையானது மேற்குலக எதிர்ப்பு முகமூடியை முன்வைத்து செயல்பட்டது. இந்த அடிப்படையிலேயே இலங்கையை தண்டிப்பது என்பது மேற்குலகிற்கு எதிரான ஒரு நாட்டின் தீவிரவாதத்திற்கு எதிரான போரை வளரும் மற்றும் பின் தங்கிய நாடுகள் ஆதரிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் நகர்வுகளை இந்தியாவும் சீனாவும் மேற்கொண்டன.


இந்த வேசத்தை இலங்கை 2009இன் பிற்பகுதியில் மிகச்சிறப்பாக மேற்கொண்டது. இதைப் பற்றி கேட்டபோது இலங்கையின் அதிகாரி ஒருவர் பத்திரிக்கையாளரிடம் சொன்னதானது “அமெரிக்க எதிர்ப்பு என்பது இங்குள்ள பொதுமக்களை ஏமாற்றவே, அதாவது பார்வையாளர்களை குசிப்படுத்தவே.”.. இது பெருமளவு இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் உதவி செய்தது.

ரசியா மற்றும் மூன்றாம் உலக நாடுகள் அணிசேரா நாடுகளின் ஆகப்பெரும் தலைவராக செயல்படும் இந்தியாவின் பின் அணிவகுத்தன. இதில் ரசியா பெரும் முனைப்பெடுத்து இலங்கை அரசைக் காத்தது. அதாவது இந்த ஏகாதிபத்தியங்களின் சடுகுடு ஆட்டத்தில் கிட்டத்தட்ட ரசியாவின் தலைமை திட்டமிட்டு ஏமாற்றப்பட்ட்து எனவும் கருத வாய்ப்பிருக்கிறது. ஆனால் ரசியாவிற்கு இலங்கை இரு எண்ணை தோண்டும் ஒப்பந்தமும், துறைமுகம் கட்டும் ஒப்பந்தமும் கொடுத்து அதையும் ஆறுதல்படுத்தியதையும் நினைவில் வைப்போம். தமிழர்களுக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டிய நாடுகள் நமக்கு எதிரணியிலும், தமிழர்களுக்கு எதிரான இப்போரை நடத்திய நாடுகள் நமக்கு ஆதரவான குரலை அளிப்பது போன்ற நிலையையும் இன்று காண்கிறோம். கூர்ந்து கவனித்தால், புலிகளை தடை செய்த அரசுகள் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசுவது போன்று செயல்படுகின்றன (பிரான்சு இன்று வரை கள்ளமெளனம் சாதிக்கிறது.) புலிகளை தடை செய்யாத அரசுகள் இலங்கைக்கு ஆதரவாக செயல்படுகின்றன. இந்த சூது தமிழர்கள் பக்கம் யாரும் இல்லாத நிலையை மிகக் கவனமாக கொண்டு வந்து இருக்கிறது. இரண்டு பக்கங்களிலும் இலங்கையை காய் நகர்த்த விட்டு இறுதியில் அமெரிக்கா வெற்றி பெறும் நிலையை அடைந்து இருக்கிறது.

சீனா இலங்கையில் நுழைந்தது ரசியா-சீனா பாதுகாப்பு கூட்டு நடவடிக்கையான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்கு(shangaai cooperation - SCO) வலுசேர்க்கும் என போடப்பட்ட கணக்கு பொய்ப்பது போன்ற சூழலை நாம் காண்கிறோம் (ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பது (shangaai cooperation - SCO) மேற்குலகின் நேட்டோ படைபலத்தை சமனாக்க ரசியா-சீனாவினால் உருவாக்கப்பட்டது. இதில் இலங்கை 2009இல் பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றது. இந்த கூட்டமைப்பின் மூலமும் இலங்கை ரசிய-சீன உதவிகளை தமிழ் இன அழிப்புப் போருக்கு பெற்றது. இந்தக் கூட்டமைப்பில் ஒருவேளை இலங்கை ஒரு முக்கிய பொறுப்பையேற்றால் இந்த அமைப்பானது இந்தியப் பெருங்கடலில் வலிமை பெறும்). ஆக இது போன்ற பெரும் நாடுகளின், முக்கியமாக சீனா-அமெரிக்கா, திட்டத்தையும் நகர்வையும் நாம் புரிந்து கொண்டால் நமது வருங்கால திட்டங்களுக்கு உதவலாம். ஏனெனில் அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளின் ஏகாதிபத்திய நலன்கள் எதிர்மறையாக தமிழீழ விடுதலையோடு பிணைந்து இருக்கிறது.

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் கடல்சார் ராணுவப்பாதுகாப்பு

சீனா தன்னுடைய ஆப்பிரிக்க-அரேபிய முதலீடுகளையும், மூலப்பொருளுக்கான நாடுகளையும் பாதுகாக்க முத்துமாலை திட்டத்தை முன்னெடுத்தது. இதற்காக 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டது ('இந்து' பத்திரிக்கையின் ஆசிரியர் ராம் சீனாவின் இந்த நலனை பாதுகாக்கவே தமிழர்களுக்கு எதிராகவும், தமிழர்கள் இந்தியாவிற்கு எதிரானவர்கள், பாசிஸ்டுகள் என தமிழின விடுதலைப்போரை மனிதகுலத்திற்கு விரோதமாகவும், இந்தியாவிற்கு விரோதமாகவும் கருத்துக்களை கட்டமைத்தார். அதாவது இந்தியாவின் துணையுடன் தமிழர்களை கிழக்கு கடற்கரை பகுதியிலிருந்து வெளியேற்றுவது அல்லது அகற்றுவது. இலங்கை அரசிற்கு சீன தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்ததில் இந்து பத்திரிக்கை ஆசிரியர் என். ராமிற்கு பெரும் பங்குண்டு).

முத்துமாலைத் திட்டம் எனப்படுவது, சீனா தனது கடல்வழிப் போக்குவரத்தை பாதுகாக்க அதனுடைய கிழக்குமுனையிலிருந்து இந்தோனிசிய கடல், பர்மா, வங்காளதேசம், இலங்கை, பாகிஸ்தான் வழியாக அமைத்த துறைமுகங்கள், விமானதளங்கள். பாகிஸ்தான், இலங்கை, பர்மா, பங்களாதேசம், இந்தோனேசியா, கம்போடியாவிலிருந்து சூடான் துறைமுகம், சோமாலியா என விரிவடைந்து செல்லும் சீனாவின் 'முத்துமாலை யுக்தி' நகர்வில் மிக முக்கியமான இடத்தில் இலங்கையும், தமிழீழமும் வருகிறது. மேலும் உலகின் மிகக்குறுகிய ஜலசந்தியான மலாக்காய் (Malacca), ஹோர்முட்ஸ் (Hormuz), பாப் எல் மண்டெப் (Bab el Mandeb) ஆகிய குறுகிய-கடல்சார் சிக்கல்களை சரிசெய்து பாதுகாப்பாய் நகரவேண்டிய கவலை எந்த ஒரு வல்லரசுக்கும் அல்லது வல்லரசாகும் ஆசை உள்ள நாடுகளுக்கு உண்டு. இதன் காரணமாகவே சீன அரசு இந்த பகுதிகளில் சிக்கல்களை நீக்க முறையே இந்தோனீசிய, பாகிஸ்தான், ஏமன் பகுதிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியது.

இதற்கான கட்டுமானப் பணிகளையும், ஒப்பந்தங்களையும் நிறைவேற்றியது. இதற்கான முயற்சிகளை மிக நிதானமாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக நகர்த்தியது.
இவ்வாறான கட்டுமானம் என்பது கச்சா எண்ணெய், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள், மூலப்பொருள்களை எடுத்துச் செல்வதற்கு மட்டுமல்ல, உலகின் 70 சதவிகித வணிகம் கடல் வழியாகவே நடைபெறுகிறது. மேலே குறிப்பிட்ட ஜலசந்தி கடல்வழியே கிட்டத்தட்ட உலகின் பாதிக்கும் மேலான கச்சா எண்ணெய்ப் போக்குவரத்து நடக்கிறது. இந்த வணிகப் போக்குவரத்து பகுதியே ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக வரலாறு எங்கும் பார்க்கப்படுகிறது (ஏனெனில் இந்த இந்தோனிசியாவின் மலாக்கா ஜலசந்தியை பாதுகாக்கவே ராசராச சோழன், ராசேந்திர சோழன் கடல்படையை அனுப்பியதாக சோழப் பேரரசின் வரலாற்றில் சொல்லப்படுகிறது). இந்த குறுகலான சிக்கல் நிறைந்த பகுதிகளை கடப்பதில் இலங்கை ஒரு முக்கிய தொடர்பு புள்ளியாக இருந்து வருகிறது. ஆக இந்த முத்துமாலைத்திட்ட்த்தில் மிகமுக்கியமான ஒன்றாக இலங்கை மாறியது. இலங்கையில் இதன் காரணமாக பெரும் முதலீடுகளை சீனா செய்ய ஆரம்பித்தது. இலங்கையின் தென்கோடி அம்பந்தோட்டா துறைமுகம் இவ்வாறே உருவாக்கப்பட்டது. எனவே இலங்கையும் தமிழீழமும் பொருளாதார மற்றும் ராணுவ முக்கியத்துவமிக்க பிராந்தியம் என்பதை ஏகாதிபத்திய அரசியலை கூர்மையாக கவனிப்பவ‌ர்களால் மிக எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

பேராசான் மாவோவின் தலைமையில் மாபெரும் சோசலிச அரசாக இருந்து போராடும் உலகமக்களின் போராட்டத்திற்கு தோளோடு தோள் நின்ற சோசலிச செஞ்சீனம் சமூக ஏகாதிபத்திய அரசாக திரிந்து இப்போது பட்டவர்த்தனமாக ஓர் ஏகாதிபத்திய அரசாக திரிந்துள்ளது. அரசியல் நேர்மை மற்றும் மனித உரிமைகள் பற்றிய கவலைகள் ஏதும் இல்லாமல் தனது லாப நோக்கை மட்டும் குறிக்கோளாக செயல்பட்டு வந்த அரசாக சீன அரசு செயல்படுவதை பர்மா, இலங்கை, இஸ்ரேல் முதல் சூடான் வரை நாம் காணமுடியும். இந்தியா பெருங்கடலில் பெரும் துறைமுகங்களையும், தரை-வான்வழி போக்குவரத்து தளங்களையும், கண்காணிப்பகத்தையும் நிர்மாணித்து அதன் முதுகெலும்பாய் வர்த்தக நிறுவனங்களை நிர்மாணிக்க ஆரம்பித்தது பேராசான் மாவோவிற்கு பிறகான சீன அரசு. உலகமயமான திறந்த சந்தைப் பொருளாதாரத்திலும் வர்த்தகத்திலும் வெற்றிகரமானதோர் அரசாகத் திகழ திட்டமிட்ட நகர்வுகளே இவைகள். இந்த நகர்வுகள் வெற்றி பெறும்போது சீன அரசானது வல்லரசுகளின் கனவான “நீலநீர்” கடற்படையை கட்டமுடியும். இந்த கடற்படை வலிமை என்பது, தரைத்தள உதவி இல்லாமலே நீண்ட தொலைவு படைகளை நகர்த்து சென்று தாக்குதல் நடத்தும் திறனாகும். இந்தத் திறன் அமெரிக்காவிற்கும், ரசியா, இங்கிலாந்து, பிரான்ஸ்சுக்கு மட்டுமே உண்டு. இந்த வலிமை வரவேண்டுமானால் சீனா தனது முத்துமாலை திட்டத்தை முழுமையாக நிறைவேற்றவேண்டும் என்ற நிலையில் உள்ளது. இந்தப் பின்னணியில்தான் அமெரிக்காவின் கடந்த பத்தாண்டுகால நகர்வையும், இரட்டை கோபுரத்தாக்குதலுக்கு பின்னான அதன் வெளியுறவுக் கொள்கை மாற்றமும் முக்கியத்துவம் பெறுகிறது.

ஜாஸ்மின் புரட்சியும் சீனாவும்

துனிசியாவில் ஆரம்பித்த மக்கள் புரட்சியானது அரேபிய, பாரசீக, ஆப்பிரிக்க நாடுகளில் பரவி ஆட்சியாளர்களைத் தூக்கியெறிந்தது. விக்கிலீக்ஸும் கார்டியன் பத்திரிக்கையும் ஒரு செய்தியை வெளியிடுகிறது. அதாவது, எகிப்திய புரட்சியில் செயலாற்றிய நபர்களுக்கு 2007-2008 ஆண்டுகளில் அமெரிக்காவில் போராட்டம் நடத்துவதைப் பற்றிய வகுப்புகள் எடுக்கப்பட்டன என்பதே அது. இவ்வாறே இந்த புரட்சி அதன் ஆட்சியாளர்களைத் தூக்கியெறிவதை மட்டும் குறிக்கோளாக கொண்டிருந்தது. அந்த ஆட்சியாளர்களின் பின்னால் இருக்கும் அமெரிக்காவை அதன் ஏகாதிபத்தியத்தை எதிர்க்காமல் உள்ளூர் ஊழலை மட்டுமே மையப்படுத்தி ஆட்சி மாற்றம் நடத்துவதில் குறியாக இருந்தது, இருக்கிறது. இந்த போராட்டம் எதற்காக நடக்கிறது என்று பார்த்தால் இந்த அமெரிக்காவின் கைப்பாவை அரசுகள் செளதி அரசையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசையும் விட அனைத்து நாடுகளிலும் முக்கியத்துவமான தனது முதலீட்டை சீனா செய்திருந்தது. அதாவது அல்ஜீரிய, துனீசியா, ஒமென், ஏமன் மற்றும் முக்கியமாக சூடான் என சீனா முதலீடு செய்த அனைத்து நாடுகளிலும் இந்த மாற்றம் நடக்கிறது.

இதன் சூட்டை உணர்ந்த பாகிஸ்தான், சீனாவின் மிக முக்கிய மத்திய மேற்கு ஆசியப் பங்காளியாக இருந்து ஒசாமா பின்லேடனுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. இப்படியாக சீனாவின் தற்போதைய நிலைப்பாடுகளும் அதன் முத்துமாலை திட்டத்திற்கான நடவடிக்கைகளும் அமெரிக்காவை நிலைகுலைய வைக்கிறது. இதன் தொடர்ச்சியில் முக்கியமான தொடர்புப் புள்ளியான அம்பந்தோட்டை துறைமுகம் இலங்கையில் இருக்கிறது. இலங்கைக்குப் பிறகு சீனாவின் திட்டத்தில் பர்மாவின் துறைமுகம் இருக்கிறது, பர்மாவிலும் ஓர் இனவிடுதலை போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 'கரன்' எனப்படும் அந்த இனத்தின் மீதான தாக்குதலை கவனிக்க விஜய் நம்பியார் அனுப்பப்படுகிறார். விஜய் நம்பியாரின் இந்த புதிய பதவியை எதிர்க்கும் அந்த கரன் இனமக்கள் தமிழினப் படுகொலை விடயத்தில் விஜய் நம்பியாரின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி அவரை திரும்பப் பெறச் சொல்கிறார்கள். இந்த ஏகாதிபத்திய நாடுகள் இதேபோல தெற்கு சூடானில் நடைபெற்ற இனப்படுகொலையை கண்டுகொள்ளாமல், தடுக்காமல் விட்டு பின் தங்களது நலனுக்காக சூடானை இரண்டாகப் பிரிக்க உதவினார்கள். மிகப்பெரிய நியாயவாதிகளாக தங்களைக் காட்டிக்கொண்டு அய்.நாவின் வாக்கெடுப்பை நடத்தினார்கள்; கச்சா எண்ணை அதிகம் நிறைந்த தெற்கு சூடான் தனி நாடாகிறது. இதிலிருந்து நாம் ஒன்றை நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். அது என்னவெனில் ஈழத்தில் இனப்படுகொலையில் தொடங்கி அதன் பின்னான போர்க்குற்ற விசாரணை, இனப்படுகொலை விசாரணை என அனைத்தும் ஏகாதிபத்திய நாடுகள் தங்களது பொருளாதார, ராணுவ நலன்களை மையப்படுத்தி செயல்படுத்தின; இனியும் செயல்படுத்தும்.

அமெரிக்காவின் “திரிகோணமலை” தாகம்

ஒருபுறம் சீனாவின் வலைப்பின்னல் அப்படியிருக்கிறதென்றால் மறுபுறம் அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆசை சீனாவைப்போல கடல்கடந்து நிற்கிறது. கடல்களின்மீதே தனது பொருளாதார மற்றும் ராணுவ நலன்களையும் கட்டி உலக வளங்களை வளைக்க அது விரும்புகிறது. அதற்காக அது மனிதகுலம் முழுவதையும்கூட பலியிட தயாராகயிருக்கிறது. இப்படியான அமெரிக்காவின் வலிமை வாய்ந்த பசிபிக் கமாண்ட் கடற்படையின் வலை திரிகோணமலை இல்லாமல் முழுமை பெறமுடியாது. அதன் வலைப்பின்னலாகிய பாகிஸ்தான், டியாகோ கார்சியா தீவு (30 போர்க்கப்பல்களும், 2000 அமெரிக்க படையினரும் கொண்டுள்ள தளமாகும்) இந்த தளத்தை அமைப்பதற்காக இங்கிலாந்திற்கு சொந்தமான அந்த தீவில் இருந்த பூர்வகுடி மக்களை தீவைவிட்டு வெளியேற்றினார்கள். அதாவது தனது பாதுகாப்பு தளத்தை அமைக்க இங்கிலாந்து-அமெரிக்க அரசு எந்த செயலையும் செய்யும் என்பதை இது உணர்த்தும். இந்த தீவைவிட மிகமுக்கியமான திரிகோணமலை துறைமுகத்தை கைக்கொள்ள அமெரிக்கா எந்தவொரு பலியிடலையும் செய்யும் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவும், திரிகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவும் பங்கு போடுவதும் இதன் அடிப்படையில் தான். இதில் சீனா தனது நீல- நீர் கப்பல்படை திறனை வளர்த்தெடுப்பதற்கு முன் சீனாவின் இந்த முத்துமாலை திட்டத்தை தகர்க்க அமெரிக்க முடிவெடுக்கிறது. இலங்கையின் கிழக்கு கடற்கரையை தனது வசமாக்கவும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதும், அதற்கு முட்டுகட்டையாக இருக்கும் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட வேண்டும், அவர்களுக்கு பக்கபலமாக துணை நிற்கும் மக்களும் அதனோடு அழிக்கப்பட வேண்டும் என்பது அமெரிக்க அரசின் திட்டம். இது திட்டமிடப்பட்டவாறு நடத்தப்பட்டது. எவ்வாறு ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பெருமளவு மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அதன் மூலமாக மக்களிடமிருந்து எழும்பும் அதிருப்திகளை போராளிகளின் மீது திருப்பி அவர்களையும் மக்களையும் முடக்குவது என்பது போர் யுக்தியாக கடைபிடிக்கப்பட்டதோ அதே யுக்தி இங்கும் நடத்தப்பட்டது. புலிகள் மீது விமர்சனமாகிய 'மக்கள் கேடயமும்' இவ்வாறே உருவாக்கப்பட்டது (இங்கிலாந்து ராணுவம் இராக்கின் பாஸ்ரா நகரில் மேற்கொண்ட தாக்குதலையும், இஸ்ரேலின் லெபனான் மீதான தாக்குதலையும், எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவின் வியட்நாம், இராக்கிய, யுகொஸ்லாவிய, ஆப்கானிய, சோமாலியப் போர்களையும் நீங்கள் நினைவில் கொள்ளுதல் இதுபற்றி மேலும் புரிந்துகொள்ள உதவும்). இதிலிருந்து யுத்தம் என்பது வெறுமனே சிங்கள இனவெறி ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடக்கவில்லை, மாறாக யுத்தம் ஏகாதிபத்திய அரசுகளையும், அவர்களின் இந்தியா போன்ற அடிவருடிகளையும், மற்றும் சிங்கள இனவெறி- தரகு முதலாளித்துவ அரசையும் உள்ளடக்கியதொரு படைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேதான் நடந்தது.

இறுதியாக...

அன்புத்தோழர்களே நன்கு கவனியுங்கள், ஈழத்தின் பின்னடைவு வெறும் தமிழீழ மக்களின் பின்னடைவல்ல, மாறாக அது உலகின் அனைத்து உழைக்கும் மக்களின் பின்னடைவு. அதுபோக தற்போது ஒரு புதிய திருபுவாதம் ஒன்று நமது நேர்மையான தோழர்கள் மத்தியிலும் தலைதூக்கியிருக்கிறது. அது என்னவெனில் இனிமேல் ஈழம் நடைமுறைக்குதவாத வாதம். எனவே அதை விட்டுவிட்டு ஒருங்கிணைந்த இலங்கைக்குள்ளேயே தமிழர்கள் தமது உரிமைகளுக்காகப் போராட வேண்டியது என்பதுதான் அது. ஆனால் உலகை மிகச்சரியாக கணித்த மார்க்சியம் அதற்கு மாறாக நம்மை ஒவ்வொரு நாளும் ஓய்வு ஒழிச்சலின்றி தனித்தமிழீழத்திற்காக போராடச்சொல்கிறது, போராடச்செய்கிறது. ஈழம் போன்ற தேசங்கள் மிகச்சிறிய தேசங்களாக இருப்பதால் அதன் விடுதலை சாத்தியமில்லை, அதனால் ஏகாதிபத்திய நாடுகளை எதிர்த்துப் போராட முடியாது என்பதற்கான பதிலை பேராசான் லெனின் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே சொல்லிவிட்டார். 'பரந்துபட்ட சனநாயகத்தையும், விடுதலையையும் உறுதிப்படுத்த, தேசிய இனங்களுக்கான சுயாட்சிப்பகுதிகள்-அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும்கூட உருவாக்கப்படவேண்டும்' என்கிறார் பேராசான் லெனின்.

அதேநேரத்தில் தோழர்கள் மத்தியிலே சில குழப்பங்கள் உள்ளன. அவை என்னவென்றால் விடுதலைப்புலிகளே ஆயுதங்களை மௌனிக்கச்செய்துவிட்டார்கள், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துவிட்டார்கள், எனவே இலங்கையோடு நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் புலிகள் ஆயுதத்தை மௌனிக்கச்செய்தது ஒரு போர்த்தந்திரரீதியிலான யுக்தியே அன்றி யுத்ததந்திர ரீதியிலானதல்ல என்பதை பேராசான் லெனினின் போர்த்தந்திரங்கள் பற்றிய கடிதங்களை வாசித்தவர்கள் நன்கு தெரிந்துகொள்வார்கள். அதுபோக மீண்டும் இதுபோன்றதொரு ஏகாதிபத்தியங்களுக்கெதிரான போரில் நம்மால் வெற்றிபெற முடியாது என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் இதற்கான பதிலை பேராசான் மாவோ ஏற்கனவே கூறிவிட்டார். அது என்னவெனில் ஏகாதிபத்தியங்கள் வெறும் காகிதப்புலிகளே என்பதுதான்.

தோழர்களே நாம் ஒன்றும் பிரிவினைவாதிகளல்ல, மாறாக அனைத்து நாட்டின் மக்களோடு ஒற்றுமையையும் அன்பையும் பகிர்ந்துகொள்ளவுமே விரும்புகிறோம். அதுபோக நமது தனித்தமிழீழத்திற்கான போராட்டமென்பது வெறும் தமிழர்களுக்கான போராட்டமல்ல, மாறாக மார்க்சிய லெனினியத்தின் அடிப்படையில் அது சிங்களவர்களின் சனநாயகத்திற்கான போராட்டமும் கூட. ஏனெனில் ஒரு தேசிய இனத்தை ஒடுக்கும் இன்னொரு தேசிய இனம் சனநாயகத்தன்மை வாய்ந்ததாக இருக்கமுடியாது என்பதுதான் லெனினியத்தின் தேசிய இனச்சிக்கல் பற்றிய அடிப்படை புரிதலே. எனவே தமிழீழத்திற்கான நமது போராட்டம் என்பது சிங்களவர்களின் சனநாயகத்திற்கான போராட்டமுமேயாகும். பெருந்தேசிய அடிப்படைவாதத்தால் முடங்கிக்கிடக்கும் சிங்கள மக்களுக்கு விடுதலைக்காற்றை சுவாசிக்கச்செய்வதற்காகவே, எம் தேசியத்தலைவர் பிரபாகரன் இந்தப் போராட்டத்தை துவங்கினார். 1970களில் சிங்கள மக்களில் சிலர் சிங்கள இனவெறி, ஏகாதிபத்திய தரகு முதலாளித்துவ அரசிற்கு எதிராக முன்முயற்சி எடுத்து ஆயுதமேந்தி போராடினார்கள். அதன்பின்பாக உறங்கப்போடப்பட்ட அவர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய தரகு முதலாளித்துவ அரசுக்கு எதிரான போரை எம் தலைவர் தோழர் பிரபாகரன் கையிலெடுத்துக்கொண்டார்.

அவர் ஏந்திய தேசிய இன விடுதலை என்பது வெளிப்படையாக பேராசான் லெனின் சொன்னதுபோல் “ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு பொதுவான சனநாயக உள்ளடக்கத்தைக்கொண்டிருக்கும் பூர்சுவா தேசியமாக" தெரிந்தாலும் சாராம்சத்தில் அது ஒரு ஏகாதிபத்தியத்திற்கெதிரான ஒடுக்கப்பட்டவர்களின் மாபெரும் போரே மற்றும் புலிகள் உலகப்பொதுவுடமை இயக்கத்தின் ஈழக்கிளையே என்பதை வரலாறு நான்காம் கட்ட ஈழப்போரின் பின்னணியில் காட்டியுள்ளது. தோழர்களே, பேராசான் மார்க்சு சொன்னதுபோல் நாம் பிரிந்து செல்வதென்பது ஒரு சர்வதேசிய கூட்டமைப்பை உருவாக்கத்தான், சண்டப்பிரசங்க பிரிவினைக்கான நோக்கில் அல்ல. காலம் நம் தோள்களின்மீது இந்த வரலாற்றுக்கடமையை ஏற்றியிருக்கிறது. நம்மிடம் இழப்பதற்கொன்றுமில்லை அடிமைச்சங்கிலிகளைத்தவிர, மாறாக அடையப்போவதோ சுபிட்சமான பொன்னுலகம். பேராசான் மாவோ சொன்னதுபோல் "தோழர்களே நாம் எழுவோம், நமது காயங்களை துடைத்துக்கொள்வோம், இறந்த தோழர்களை புதைப்போம், மீண்டும் போர்க்களம் செல்வோம்".

ஈழம் என்னும் வரலாற்றுக்கடமையை இளந்தோள்களில் ஏந்திக்கொள்வோம்
சிங்கள இனவெறி, தரகு முதலாளித்துவ அரசை உடைத்தெறிந்து தனித்தமிழீழம் படைப்போம்
தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம்


முந்தைய‌ ப‌குதிக‌ள்:

1. ஈழம் - ஏகாதிபத்தியங்களின் ஆடுகளம் - https://www.facebook.com/groups/Tamilnation/doc/265332540177853/

2. அமெரிக்காவும் தமிழீழப்போரும் - https://www.facebook.com/groups/Tamilnation/doc/265333893511051/


நன்றி- கீற்று

No comments:

Post a Comment