Translate

Saturday 29 October 2011

குழையடிக்கும் சிங்களப் புலனாய்வும், கலையாடும் முன்னாள் போராளிகளும்!

நண்பர் ஒருவர் கேட்டார், தப்பி வரும் போராளிகளை விடுதலைப் புலிகள் இப்படிக் கைவிடலாமா? என்று.



விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து காயப்பட்ட போராளிகளும், விரும்பி வெளியேறிய போராளிகளும், விடுதலைப் புலிகளால் விரும்பி அனுப்பப்பட்ட போராளிகளும் எனப் புலம்பெயர் தேசங்களுக்கு வந்து சேர்வது ஒன்றும் புதிய விடயமல்ல. விடுதலைப் புலிகள் ஓரளவு வளர்ச்சி கண்ட காலம் முதல் இந்தப் புலப் பெயர்வு இடம்பெற்றே வந்துள்ளது.




இப்போது வரும் தகவல்கள் அவரை அப்படிக் கேட்கத் தூண்டியிருக்கும். மேலோட்டமாகப் பார்த்தால், அவர் கேட்பதில் நியாயம் இருப்பததாகவே நினைக்கத் தோன்றும். ஆனால், உண்மைகளை எடுத்துக் கூறியபோது, அந்த நண்பரே அதிர்ச்சியடைந்தார். 


அப்படி, போர்க் களத்திலிருந்து வெளியேறி, புலம்பெயர் தேசங்களுக்கு வந்து சேர்ந்த போராளிகளில் சிலர் மட்டுமே புலம்பெயர் தேசங்களிலும் தேசியத் தளங்களில் இணைந்து பணியாற்றுகின்றார்கள். பலர், தமது தனிப்பட்ட வாழ்க்கைக்குள் தங்களை உட்படுத்திக்கொண்டு, விடுதலைப் போராட்டத்திற்கும் பங்களிப்பு வழங்கி வருகின்றார்கள். இன்னும் சிலர், வந்த பாதையை மாற்றிக்கொண்டு, திசை மாறியும் பயணிக்கின்றார்கள். ஆனால், இவர்களில் யாரும், விடுதலைப் புலிகளது புலம்பெயர் கட்டமைப்புக்கள் தங்களைத் தேளில் சுமந்து நடக்க வேண்டும் என்று எப்போதுமே எதிர்பார்ப்பதில்லை. அவர்கள், தமது தேசியத்திற்கான அர்ப்பணிப்புக்களை என்றுமே விலை கூறி விற்றதும் இல்லை.

மாறாக, முள்ளிவாய்க்கால் பேரவலங்களிலிருந்து தப்பி வந்ததாகக் கூறப்படும் சில போராளிகள் புலம்பெயர் தேசங்களில் அணி சேர்ந்துகொண்டு, விடுதலைப் புலிகளின் புலம்பெயர் தளங்கள்மீது பழி சுமத்துவதையும், மோசமான விமர்சனங்கள் செய்வதையும் அதிர்ச்சியோடு பார்க்க முடிகின்றது. இவர்களது இந்தக் குற்றச்சாட்டுக்கள் இவர்களைப் போராளிகள் என நம்பும் பலருக்குக் கவலை தரும் விடயமாக அமைந்து விடுகின்றது. அந்த நண்பரது கவலையும் அத்தகையதுதான்.

முதலில், விடுதலைப்புலிப் போராளி என்பவன் யார்? அவனது இலட்சியம் என்ன? அவனது பாதை எது? என்பது குறித்த சரியான கணிப்பீடு எமக்கு வேண்டும்.

தேசியத் தலைவர் அவர்களது இலட்சியத்தை நிறைவேற்றுவதற்காகத் தன்னை அதற்காக முழுமையாக அர்ப்பணித்தவனே ஒரு விடுதலைப் புலியாவான். அவனது பாதை தேசியத் தலைவரால் வகுக்கப்பட்டதாக மட்டுமே இருக்கும். அதற்காகத் தன் உடல், பொருள், ஆவி அத்தனையையும் அர்ப்பணிக்கச் சித்தமாயிருப்பான். அது முள்ளிவாய்க்கால் இறுதிக் கணம் வரை ஒவ்வொரு விடுதலைப் புலிப் போராளியாலும் கடைப்பிடிக்கப்பட்டே வந்தது.

தேசியத் தலைவர் அவர்களால் அந்த இறுதி நாட்களில் எடுக்கப்பட்ட முடிவுக்கமைய, பல போராளிகள் களத்தை விட்டு வெளியேறினார்கள். அதில், பெருந்தொகையான போராளிகள் சிங்களப் படைகளிடம் சரணடைந்தார்கள். அங்கேயும், சிங்களப் படைகளால் அறியப்பட்ட அல்லது காட்டிக் கொடுக்கப்பட்ட போராளிகள் காவு கொள்ளப்பட்டு, அல்லது சிறைப்படுத்தப்பட்ட நிலையில், பலரால் அங்கிருந்து தப்பி வெளியேறவும் முடிந்தது.
தேசியத் தலைவர் அவர்கள் எடுத்த முடிவின் பிரகாரம், விடுதலைப் போராளிகள் தப்பி வெளியேறியது எந்த வகையிலும் குற்றம் காண முடியாத நிகழ்வே. ஆனால், வெளியேறிய பின்னரும் தங்களைப் போராளிகளாகவே பாவனை செய்து கொள்வதும், அதற்கான விலையை விடுதலைப் புலிகளின் புலம்பெயர் தேசியக் கட்டமைப்புக்களிடம் அறவிட நினைப்பதும், அது நடக்காத பட்சத்தில் அதனைச் சிதைப்பதை நோக்கமாகக் கொண்டவர்களுடன் அணி சேர்வதும் விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டையும், தேசியத் தலைவர் அவர்களது வார்த்தையையும் மீறிய செயலாகவே கருதப்படும்.

களத்தில் இருந்து வெளியேறியவர்கள் முன்னாள் போராளிகளே தவிர, அவர்கள் தங்களைப் போராளிகளாக, தாயக மண்ணில் கிடைத்த மரியாதைகளைப் புலம்பெயர் தேசங்களில் எதிர் பார்ப்பது மிகவும் அபத்தமான சிந்தனை. அவர்கள், தங்கள் கண்முன்னால் பலியான தோழர்களையும், களத்தில் வெடித்துச் சிதறிய கரும்புலிகளையும், சிறையில் கொடுமைப்படுத்தப்படும் போராளிகளையும் தமது தற்போதைய நிலையுடன் ஒப்பிட்டு நோக்க வேண்டும். அந்த மனிதாபிமான சிந்தனை இருக்கும் எந்த முன்னாள் போராளியும் விடுதலைப் புலிகளது புலம்பெயர் கட்டமைப்புக்களை விமர்சனம் செய்யும் இழிநிலையை அடையமாட்டான்.

தற்போது, விடுதலைப் புலிகளது புலம்பெயர் கட்டமைப்புக்களைச் சிதைப்பதற்கான பாரிய வியூகத்தைச் சிங்கள தேசம் வகுத்துச் செயற்படும் இன்றைய நிலையில், முன்னாள் போராளிகள் சிலரும் அவர்களது சதிக்கு வலுச் சேர்க்கும் வகையில் நடந்து கொள்வது மிகவும் கொடுமையானது. அது விடுதலைப் புலிகள் இதுவரை நடாத்திய விடுதலைப் பெரு வேள்வியையும், அவர்களது அர்ப்பணிப்புக்களையும், ஈகத்தையும் அவமரியாதை செய்வதாகும்.

விடுதலைப் புலிகளது புலம்பெயர் கட்டமைப்புக்களில் மாற்றங்கள் தேவையென்று கருதுமிடத்தில், அதை உள்ளிருந்தே சீர் செய்ய வேண்டுமே தவிர, அதைச் சீர் குலைக்க முயல்வது விடுதலைப் போராட்டத்திற்கு என்றுமே உரம் சேர்க்காது. அது தேசியத் தலைவரது வார்த்தைகளை மீறிய செயலாகவே கருதப்படும். அது, இதுநாள்வரை விடுதலைப் போராட்டத்திற்காய்த் தம்மை களப்பலியாக்கிக்கொண்ட அந்த மாவீரர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய அநீதியாகிவிடும்.

ஒரு உதாரணத்திற்காக என வைத்துக்கொள்வோம்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னரும் சிங்கள தேசத்தால் சிதைக்க முடியாத மக்கள் பலம் கொண்ட விடுதலைப் புலிகளது புலம்பெயர் கட்டமைப்புக்களைச் சிதைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிச் செயற்படும் தேசியச் சிதைவுத் தளங்கள் தங்கள் இலக்கினை எட்டுவது சாத்தியம்தானா? அப்படியான இலக்குத் தவறிய இந்த நீண்ட போராட்டம், எதிரியைத் தப்ப வைப்பதைத் தவிர எதைச் சாதிக்கப் போகின்றது? கூடவே இருந்து, போர்க் களத்தில் எதிரிகளை நோக்கியே போராடி, மாவீரர்களாக அந்த மண்ணிலும், கடலிலும், ஆகாயத்திலுமாக மரணித்தவர்களது கனவுகள் என்னாவது?

ஆயுதப் போராட்டம் ஒன்று இலங்கைத் தீவில் தற்போது சாத்தியமில்லை என்று நம்பப்படும் இந்தக் காலத்தில், புலம்பெயர் தேசங்களில் ஈழத் தமிழர்கள் ஒன்றுபட்டு நின்று ஒரே குரலில் எங்கள் தேசியத்திற்காகப் போராடுவதைச் சாத்தியமற்றதாக்கும் சதிகளை இந்த முன்னாள் போராளிகளால் எப்படி உணர முடியாது போனது? சிதைப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டு, மாவீரர் தினத்தைக் குறி வைக்கும் சிங்களப் புலனாய்வாளர்களது சதியினை இவர்களால் எப்படிப் புரிந்து கொள்ள முடியாது போனது?

தேசியத் தலைவரது பாதையில் அணிவகுத்துச் சென்ற எந்த விடுதலை வீரனும் திசை மாறிச் செல்லமாட்டான். அப்படிச் செல்பவன் விடுதலைப் போராளியும் அல்ல, அவனைத் தேசிய ஆன்மாக்கள் மன்னிக்கப் போவதும் இல்லை.

சிங்களப் புலனாய்வாளர்களின் குழையடிப்பில் கலையாடாமல், முன்னாள் போராளிகள் அனைவரும் விடுதலைப் புலிகளாக மீண்டு வரவேண்டும் என்பதே புலம்பெயர் தமிழர்களது வேண்டுகோளாக உள்ளது.

முன்னாள் போராளி தமிழ்வேந்தன்



துர்கா தலைவனின் பாதையில்

No comments:

Post a Comment