Translate

Saturday 29 October 2011

இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டதாக இமெல்டா பொய் சொல்கிறார்- சீ.வி.கே.சிவஞானம் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிடவில்லை. பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்படுகின்றனர். மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். போரினால் இடம்பெயர்ந்த மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை. இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டதாக அரசாங்க அதிபர் கூறினாலும் உண்மைநிலமை அவ்வாறு இல்லை என யாழ். மாவட்ட அரசசார்பற்ற அமைப்புக்களின் இணையத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் வெளிநாட்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவுக்கு தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டதாகவும், அபிவிருத்தி பணிகள் துரிதமாக நடைபெறுவதாகவும், புனர்வாழ்வு நிவாரணங்களும் திருப்திகரமாக நடைபெறுவதாகவும் கூறிய யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் படம் ஒன்றையும் போட்டுக்காட்டி அரசு மிகத்திருப்தியாக தமிழ் பிரதேசங்களில் அபிவிருத்தியை செய்து வருதாக தெரிவித்தார்.


மக்கள் நிம்மதியாக அச்சமின்றி வாழ்கிறார்கள். யாழ்ப்பாணம் முழுமையாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டது. இங்கு எந்த பிரச்சினையும் இல்லை என யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் அங்கு வந்திருந்த பிரதிநிதிகளுக்கு விளங்கினார்.
அப்போது அங்கு சமூகமளித்த யாழ் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைத்தலைவர் சிவஞானம் அரசாங்க அதிபர் கூறுவதில் உண்மையில்லை என தெரிவித்தார்.
பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்படுகின்றனர். இதனால் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக வகுப்புக்களை பகிஸ்கரித்து வருகின்றனர்.மக்கள் பாதுகாப்பற்ற சூழலிலேயே வாழ்கின்றனர். இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாக கூறுவதெல்லாம் பொய்யானது என்றார். குறிப்பாக இந்திய மீனவர்களது அத்துமீறல்கள் எந்த மாற்றமும் இன்றி தொடர்கின்றது. இதை தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் இரு அரசுகளாலும் எடுக்கப்படவில்லை என சிவஞானம் தெரிவித்தார்.
இந்திய மீனவர்களது அத்துமீறல்கள் தொடர்பினில் இரு தரப்பு மீனவர்களும் ஒன்று கூடி பேசுவதை தவிர வேறு வழிகளில்லை எனத்தெரிவித்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தம் நாட்டு மீனவர்களோ சிங்கள மீனவர்கள் தம்மை தாக்குவதாக குற்றஞ்சாட்டி வருவதாக தெரிவித்தார். குழுவினர் குடாநாட்டின் மக்கள் அண்மைக்காலங்களில் குடியமர்ந்த கிராமங்கள் சிலவற்றையும் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இக்குழுவில் இந்தியா, பிரித்தானியா, பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கியிருந்தனர்.

No comments:

Post a Comment