Translate

Wednesday, 9 November 2011

முட்கள் நகர்கின்றன – மாவீரர் தின ஒழுங்கமைப்பாளர்களுக்கு வேண்டுகோள் : சுபத்திரன்

முட்கள் நகர்கின்றன – மாவீரர் தின ஒழுங்கமைப்பாளர்களுக்கு  வேண்டுகோள் : சுபத்திரன்
இன்னும் சில தினங்களில் இன்னொரு முறை மாவீரர் தின நிகழ்வுகள் “கோலாகலமாக” அல்லது “கொத்து வெட்டாக” நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்ப் பிரதேசங்கள் எங்கும் அவலங்கள். மனிதப் படுகொலைகள், சித்திரவதைகள், இனச் சுத்திகரிப்பு என்ற அனைத்து சமூக விரோதச் செயல்களையும் ராஜபக்ச பாசிச அரசு திட்டமிட்டு நடத்திவருகிறது.

இவை அனைத்தும் குறித்த குறைந்தபட்ச அரசியல் நகர்வைக் கூட மேற்கொள்ள முடியாத புலம் பெயர் “தேசிய வியாபாரிகளின்”  அமைப்புகள் உயிரிழந்தவர்களின் தியாகங்களின் மேல் மாவீரர் தினத்திற்காகக் கொச்சைத் தனமாக மோதிக்கொள்வது எதற்காக?
ஒரு புறத்தில் இரத்தத்தால் எழுதப்பட்ட ஈழப் போராட்ட வரலாற்றை உங்களின் சுய லாபத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ளும் அதே நேரம், மறு புறத்தில் அமரிக்கா வரும் இந்தியா வெட்டி விழுத்தும் என்ற பொய்யான விம்பத்தை ஏற்படுத்துகிறீர்கள்.
இவை எல்லாம் உங்களுக்கு வசதியான வியாபரம்.
அவ்வப்போது, அயோக்கியத் தனத்தில் ஊறிப்போன மேற்குலக அரசியல் வாதிகளை அதி உயர் உணவகங்களில் சந்தித்து, பேச்சோடு பேச்சாக ஈழப் பிரச்சனை குறித்து அளவளாவிய பின்னர் “நாங்கள் காய் நகர்த்திவிட்டோம் ” என்று அறிக்கை விடுவதற்கு இதைத் தவிர வேறு சந்தர்ப்பம் கிடைக்குமா உங்களுக்கு?
கிளிநொச்சியில் முப்பது சதவீதமான நிலப் பகுதி இராணுவத்தாலும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களாலும், பன்னாட்டு வியாபாரிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. போராடுவதற்காக துப்பாக்கியேந்திய ஆயிரக் கணக்கான இளைஞர்கள் சிறைகளில் சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.
திருகோணமலையில் தமிழர்கள் ஆயுதங்களோடு தான் வாழ முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
தேசிய இன ஒடுக்குமுறை கூர்மையடைந்த மூன்று கால் நூற்றாண்டுகளில் ராஜபக்ச மாபியாக் கும்பல் தனது துணைக்குழுப் பரிவரங்களோடு நடத்திவரும் குருதி வழியும் தர்பார் ஒடுக்கு முறையின் உச்சம். இதுவரை கண்டிராத அவலம். நீங்கள் சுட்டுவிரலைக் காட்டி மக்களை நம்பச் சொல்லும் அரசுகள் நினைத்தால் ஒரே கணத்தில் இவைகளை நிறுத்த முடியும்.
அதுவல்ல அவர்களின் நோக்கம்.
ஆப்கானிஸ்தானுக்கு இராணுவச் சிப்பாய்களைப் பெற்றுக்கொள்வதிலிருந்து இலங்கையிலிருந்து வளங்களைச் சுரண்டி ஒட்டாண்டியாக்குவது வரைக்கும் போர்க்குற்றங்களைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகின்றனர்.
நீங்களோ மக்களின் தலைவிதியை வசதியாக அவர்களிடம் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு, உங்கள் உள்வீட்டில் அதிகாரத்திற்காக மோதிக்கொள்கிறீர்கள். ஏன் அதிகாரம்? புலிகளின் சார்பில் முதலீடு செய்யப்பட்ட பில்லியன் டொலர் பெறுமானமுள்ள பணத்தைக் கையகப்படுத்துவதற்கான அதிகாரமா?
உலகறிந்த தெற்காசிய மாபியா கே.பி என்ற குமரன் பத்மனாதனின்டம் பறிபோன பணத்தைத் தவிர மிகுதியைப் பங்கு போட்டுக்கொள்வதற்கான குத்துவெட்டா?
கொட்டும் மழையிலும் குழந்தைகளோடு, பிரித்தானிய அரச தடைகளையும் பொருட்படுத்தாமல் தெருக்களில் இறங்கிப் போராட்டிய புலம் பெயர் மக்களின் உணர்வு கொச்சைப்படுத்தப் படக்கூடாது.
இலங்கை அரசு இன்றும் பயங்கொள்வது உங்களின் பணத்திற்காக அல்ல. புலம்பெயர் மக்களின் உணர்வுகள் ஏற்படுத்தக் கூடிய தாக்கமும் அழுத்தமும் தான் இலங்கை அரசைப் பீதிக்கு உள்ளாகியிருக்கிறது. அந்த அப்பாவி மக்களை விரக்திக்கு உள்ளாக்கி போராட்டங்களிலிருந்து அன்னியப்படுத்துகிறது உங்கள் அவமானகரமான மோதல்.
பதினாறு மணித்தியாலம் வரை உழைத்து நான்கு மணி நேரம் பிரயாணம் செய்து நான்கு மணி நேரமே உறங்கி அடிமை வாழ்க்கை வாழும் அப்பாவித் தமிழர்கள் மாதாந்த ஊதியத்தை போராட்டத்திற்காகக் கொடுத்த உணர்வு சாதாரணமானதல்ல.
எங்காவது மூலையில் உங்கள் நெஞ்சில் மக்கள் குறித்த உண்ர்விற்கு இடமிருக்குமானால், சொத்துக்களையும் அதிகாரத்தையும் இரத்தக் களரியின்றிப் பங்கு போட்டுக்கொள்ளுங்கள். அரசியலை அதற்குப் பயன்படுத்தாதீர்கள்.
இவை அனைத்தையும் மீறி எதிர்காலத்தில் அரசியல் இயக்கம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்று நீங்கள் கருதினால், மக்கள் பணத்தின் ஒவ்வொரு அலகையும் அவர்களுக்கே கணக்குச் சொல்லுங்கள். கடந்த கால அரசியலை சுயவிமர்சனம் செய்துகொண்டு புதிய அரசியலை முன்னெடுங்கள்.
மாவீரர் தினத்தை கிறிஸ்மஸ் கொண்ட்டாடம் போலன்றி தியாகிகளின் எழுச்சி நாளாக மாற்றுங்கள். சீரழிந்த அரசியல் வாதிகளைப் புறக்கணித்து அவர்களுக்கு அழுத்தம் வழங்கவல்ல போராட்ட அமைப்புக்களோடு இணைந்து கொள்ளுங்கள்.
ஈழப் போராட்டத்தில் அழிந்து போனவர்கள் அழிக்கப்பட்டவர்கள் என்ற அனைவரையும் மாவீரர் தினத்தில் எழுச்சியின் சின்னங்களாக மாற்றுங்கள். இன்னும் புகைந்து கொண்டிருக்கும் மக்களின் உணர்வுகளை ஒருங்கிணைத்து இலங்கையில் ஒவ்வொரு கணமும் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களின் ஆதரவு சக்திகளாக மாற்றுங்கள்.
முப்பது வருடங்கள் அவசர அவசரமாக எல்லாவற்றையும் செய்து முடித்துவிடுவோம் என்று எண்ணுக்கணக்கற்ற உயிர்களைப் பலிகொடுத்த அரசியலிலிருந்து இன்னுமா கற்றுகொள்ள முடியாது. இது சாபக்கேடா?
கடிகரத்தின் முட்கள் மாவீரர் நாளை நோக்கி நகர்கின்றன. ஒரு நிமிடம் மட்டும் நிதானமாக சிந்தித்துப் பாருங்கள். என்ன செய்யப்போகிறோம்?

No comments:

Post a Comment